மாங்குளத்தில் கிணற்றில் யுவதியின் சடலம் மீட்பு; தொடர்பான சந்தேகநபர்கள் ஆஜர் / இந்திய பாரதீய ஜனதா கட்சி எம்.பிக்கள் யாழ்.விஜயம் / குடாநாட்டில் படையினரால் வாக்காளர் விவரம் திரட்டு-

 


இந்திய பாரதீய ஜனதா கட்சி எம்.பிக்கள் யாழ்.விஜயம்-இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய பாரதீய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
இந்த குழுவினரை பாரம்பரிய கைத்தொழில்கள், சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா மற்றும் பலர் பலாலி விமான நிலையத்தில் வரவேற்றுள்ளனர்.
இக்குழுவினர் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட வடகடல் நிறுவனத்தின் வலை தொழிற்சாலையினை பார்வையிட்டுள்ளதுடன் யாழ்.ரில்கோ சிற்றி ஹோட்டலில் சிவில் சமூக பிரதிநிதிகளையும் சந்தித்து யாழ்.குடா நாட்டின் நிலவரங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளனர்.
இந்த குழுவில் இந்திய பாரதீய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவிசங்கர் பிரசாத், சுரேஷ் பாபு மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சின் முன்னாள் செயலாளர் விவேக் கயுதீப், இந்திய பவுண்டேசன் நிறுவனத்தின் உறுப்பினர்கள் இருவர் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மாங்குளத்தில் கிணற்றில் யுவதியின் சடலம் மீட்பு; தொடர்பான சந்தேகநபர்கள் ஆஜர்-மாங்குளத்தில் யுவதி ஒருவரை கொலைசெய்த சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள இரண்டு சந்தேகநபர்களும் இன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
கடந்த மாதம் 24ஆம் திகதி மாங்குளம் – பனிச்சங்குளத்திலுள்ள கிணறு ஒன்றுக்குள்ளிருந்து கொலை செய்யப்பட்டு உடலில் கல் கட்டப்பட்டிருந்த யுவதி ஒருவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இந்த சடலம் கிளிநொச்சி கிருஸ்ணபுரத்தைச் சேர்ந்த 25 வயதான துரைசாமி சரோஜா என்பவருடையது என தெரிய வந்துள்ளது.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் மாங்குளம் பொலிஸார் நேற்று முன்தினம் இரண்டு சந்தேகநபர்களைக் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட யுவதி சந்தேகநபர்களில் ஒருவருடன் காதல் தொடர்பு வைத்திருந்தமையும் திருமண பந்தத்தில் இணையும் எதிர்பார்ப்புடன் கடந்த மாதம் 14ஆம் திகதி பனிச்சங்குளத்திற்கு வந்துள்ளமையும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பின்னர், பனிச்சங்குளத்திலுள்ள பாழடைந்த வீடொன்றுக்குள் யுவதியை சந்தேகநபர்கள் இருவரும் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயன்ற போது அவர் மறுப்புத் தெரிவித்தமையே கொலைக்குக் காரணம் என்பதும் நிரூபணமாகியுள்ளது.
குடாநாட்டில் படையினரால் வாக்காளர் விவரம் திரட்டு-
கிராம சேவையாளர்களிடமிருந்து வாக்காளர் பெயர்ப் பட்டியலைக் கோரும் நடவடிக்கைகளை யாழ். மாவட்டத்திலும் படையினர் ஆரம்பித்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் இராணுவப் புலனாய்வாளர்களால் வாக்காளர் பெயர்ப்பட்டியல் கோரப்பட்டிருந்தது. அதன் பின்னர் கிளிநொச்சி மாவட்டத்திலும் யாழ். மாவட்டத்திலும் இராணுவத்தினரால் வாக்காளர் பெயர்ப்பட்டியல் கோரும் நடவடிக்கைகள் கடந்த சில தினங்களாக இடம்பெற்று வருகின்றன.
2013 ஆம் ஆண்டு வாக்காளர் பெயர்ப் பட்டியல் பதிவுக்காக கிராம சேவையாளர்களுக்கு 2012 ஆம் ஆண்டுக்குரிய வாக்காளர் பெயர்ப்பட்டியல் வழங்கப்பட்டுள்ளது.
கிராம சேவையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த வாக்காளர் பெயர்ப்ப பட்டியலை இராணுவத்தினர் தமக்குத் தருமாறு கேட்டு அதனை போட்டோ பிரதி செய்துவிட்டு மூலப் பிரதியை மீண்டும் கிராம சேவையாளர்களிடம் வழங்குகின்றனர்.
அத்துடன் 2012 ஆம் ஆண்டு வாக்காளர் பெயர்ப்பட்டியலில் உள்ளவர்களில், தற்போது வெளிநாடு சென்றவர்கள், இறந்தவர்கள், வேறு மாவட்டங்களுக்குச் சென்றவர்கள் தொடர்பான விவரங்களும் இராணுவத்தினரால் திரட்டப்பட்டுள்ளன.
சில இடங்களில் பிரதேச செயலகங்களுக்குச் சென்ற இராணுவத்தினர், வாக்காளர் பெயர்ப் பட்டியலை கோரியுள்ளனர்.
இது தொடர்பாக வடமாகாண தேர்தல்கள் ஆணையாளருக்கு முறைப்பாடு செய்துள்ளதாக கிராம சேவையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
 

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger