ஜாதிக ஹெல உருமய அடையும் வெற்றி சிங்களவர்களை மீளா இழிவுக்கு உட்படுத்தும்


13வது திருத்தத்தை நீக்கும்படி ஜாதிக ஹெல உருமய கொண்டுவரப்போகும் மசோதாவை தோற்கடிப்பது மட்டுமே அரசாங்கத்தினுள்ளிருக்கும் பைத்தியக்கார தீவிரவாதிகளை தோற்கடிப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பாராளுமன்ற அங்கத்தவர்களுக்கு கிடைத்திருக்கும் அரிய வாய்ப்பு
-தயான் ஜயதிலகா-
ஸ்ரீலங்காவின் ஒரு சகோதர நாடு யுகோஸ்சிலாவியா, கூட்டுச்சேரா நாடுகள் அமைப்பின் சக நிறுவனர்களில் ஒன்றாகிய அந்நாட்டின் தலைநகராக 1961ல் பெல்கிரேட் விளங்கியது. இப்போது யுகோஸ்சிலாவியா என்கிற நாடு இல்லை.
அந்த நாடு உடைந்ததின் விளைவாக சங்கிலித் தொடர் போன்ற மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அறிவு நுட்பமுடைய சோஷலிசவாதியான மார்ஷல் டிட்டோ பிரகடனப்படுத்தப்பட்டிருந்த யுகோஸ்சிலாவியா அரசியலமைப்பில் பல மாற்றங்களை செய்ததுடன், சுயாட்சி அதிகாரத்தை கொண்டிருந்த கொசோவா மாகாணத்தின் அதிகாரங்களில் கடுமையான குறைப்பை செய்தது மாத்திரமன்றி, அதை தொடர்ந்து 1990ல் கொசோவா சட்டப் பேரவையை கலைத்ததுடன் அந்த சங்கிலித் தொடர்மாற்றங்கள் ஆரம்பமாயின. அழிவை நோக்கிய செங்குத்தான ஒரு மலைச்சிகரத்தை நோக்கி வழிநடத்தும் அதே பாதையை ஸ்ரீலங்கா நிச்சயம் பின்பற்றக்கூடாது.
நாடு தீர்மானம் மேற்கொள்ளவேண்டிய ஒரு முக்கிய கட்டத்தில் உள்ளது. ஜாதிக ஹெல உருமயவின் மசோதா பாராளுமன்றத்தில் வெற்றி பெறுவது, 1956ல் ஆரம்பிக்கப்பட்ட சிங்களம் மட்டும் மசோதாவில் ஆரம்பமாகி மற்றும் 1972ல் ஒரு மொழி, மற்றும் ஒரு மதம் என்கிற மேலாதிக்க தன்மையில் பாராட்டத்தக்க மாற்றமாக அமைந்த குடியரசு அரசியலமைப்பு காரணமாக மேலும் சிதைவடைந்துபோன எதிர்மறையான நடவடிக்கைகளை முற்றுப்பெற வைத்ததாக ஆகிவிடும். 56 மற்றும் 72 என்பன தமிழ் ஈழத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டியிருக்குமாயின், 13வது திருத்தத்தை நீக்கும் ஜாதிக ஹெல உருமயவின் மசோதா சட்டபூர்வமாக பிரிந்து செல்லுதலுக்கான நடவடிக்கையை முற்றுப்பெற வைப்பதற்கு வழியமைத்துவிடும்.
ஜாதிக ஹெல உருமய அடையும் வெற்றி, கூட்டுச்சேரா நாடுகளின் அரசாங்கத் தலைவர்களின் கூட்டத்தில் கலந்து கொள்பவர்களை வெறுப்படையச் செய்வதுடன் மற்றும் மார்ச் 2014ல் ஐநா மனித உரிமைகள் சபையில் ஸ்ரீலங்கா அடையப்போகும் தோல்வியையும் உறுதி செய்வதாக அமைந்துவிடும். அது எங்கள் கூட்டணியினரான ரஷ்யா மற்றும் சீனாவை தர்மசங்கடத்தில் ஆழ்த்துவதுடன் தென்னாபிரிக்கா மற்றும் பெரும்பாலான கூட்டுச்சேரா அமைப்பு நாடுகள் என்பனவற்றை எங்களிடமிருந்து தூர விலக்கிவிடும். அது நாட்டையும் மற்றும் சிங்களவர்களையும் மீளா இழிவுக்கு உட்படுபடுத்துவதுடன், பிராந்திய ரீதியிலும் மற்றும் சர்வதேச ரீதியிலும் தனிமைப்படுத்திவிடும். ஸ்ரீலங்காவின் தேசிய நலன்களை கவனத்தில்கொண்டு சுருக்கமாகச் சொல்வதானால், பாராளுமன்றம் நடைமுறைப்படுத்தக்கூடிய சுய அழிவு ஏற்படுத்தும் ஒரு ஒற்றை நடவடிக்கை என்றே கூறலாம்.
இதற்கு எதிர்மாறாக ஜாதிக ஹெல உருமய மசோதாவிற்கு கிடைக்கும் ஒரு தோல்வி, பெரும்பான்மை தீவிரவாதம் என்கிற அவப்பெயரிலிருந்து ஸ்ரீலங்காவை பின்னுக்குத் தள்ளக்கூடியதாக இருக்கும். அப்படியான ஒரு வெற்றிதான், மே 18,2009ல் அடைந்த இராணுவ வெற்றி மற்றும் மே 27 – 28, 2009ல் பெற்ற இராஜதந்திர வெற்றி என்பனவற்றை நிறைவு செய்வதற்கு தேவையானதாக இருக்கும் பிரிவினைவாத சிறுபான்மை பாசிசவாதிகளான எல்.ரீ.ரீ.ஈ யினை இராணுவரீதியாக தோற்கடித்தது, பெரும்பான்மை தீவிரவாதிகளான ஜாதிக ஹெல உருமய – தேசிய சுதந்திர முன்னணி – பொதுபலசேனா போன்றவர்களை அரசியல்ரீதியாகத் தோற்கடிப்பதற்கு ஸ்ரீலங்காவுக்கு ஒரு வாய்ப்பாக உள்ளது.
பாராளுமன்ற யுத்தத்தில் பங்குகொள்ளுவது ஸ்ரீலங்கா அரசியலில் ஒரு இரட்டை விவாதத்தை தோற்றுவிக்கும். சிங்கள அரசியல்வாதிகள் பிளவுபட்டு, ஒருபுறம் 13வது திருத்தத்தை நீக்குதல் அல்லது அதில் உள்ள காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை வெட்டிக்குறைத்தல் என்று விரும்பும்போது மற்றவர்கள் அதை நடைமுறைப்படுத்துவதற்கு பொருத்தமானது என விரும்புவார்கள். எனினும் வடமாகாணசபை தேர்தல்கள் பகிரப்பட்டுள்ள அதிகாரங்களில் கடுமையான வெட்டுகள் எதுவும் மேற்கொள்ளப்படாமல் நடத்தப்படுவதை அவர்கள் ஓரளவு தயக்கத்துடன் விரும்பலாம். தமிழ் அரசியல்கட்சிகள் மறுபுறம் தம்முள் பிளவுபட்டுள்ளனர், ஒரு சாரார் வட மாகாணசபை தேர்தல்களில் போட்டியிடுவதில் ஆர்வமுள்ளவர்களாகவும் மற்றும் 13வது திருத்தம் பாதுகாப்புக்கு ஏற்றதாகவும் கருதுகிறார்கள், மற்றொரு சாரார் 13வது திருத்தம் அது எழுதப்பட்டிருக்கும் காகிதத்தின் மதிப்பை பெறுவது கூட அரிது என கருதுகிறார்கள்.
இந்தக் காட்சியில் காணாமற்போயிருப்பது என்னவென்றால், தயக்கத்துடன் என்றாலும் மாகாணசபை முறைகளை அங்கீகரித்து, செப்டம்பரில் தேர்தல் நடத்துவதற்கான வாய்ப்பை வழங்கவிரும்பும் இனப்பிளவின் இரு பக்கத்திலுமுள்ள மிதவாத அல்லது நடைமுறைவாத நபர்களை ஒன்றிணைத்து அதற்கு பரஸ்பர வலுவூட்டும் நடைமுறை.
அதில் மேலும் குறைவாக இருப்பது புத்திஜீவிகளின் பங்களிப்பு. விசேடமாக சிவில் சமூக புத்திஜீவிகளின் பங்களிப்பு, தற்போதுள்ள மாகாணங்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிக்கும் திட்டத்தை பாதுகாக்கும் இந்த முக்கிய போராட்டத்தில் சிங்கள மிதவாதிகளின் ஆதரவு அல்லது சிங்கள மற்றும் தமிழ்; மிதவாதிகளுக்கு இடையே உறவுப் பாலம் அமைப்பதும் குறைவாகவே உள்ளது.
அரசாங்க மற்றும் எதிர்கட்சி வரிசையிலுள்ள சிங்கள மற்றும் தமிழ் பாராளுமன்ற மிதவாதிகளிடையே கட்டமைப்பான ஒரு பேச்சு வார்த்தையின் குறைவு, இரு பகுதியினரதும் முக்கிய ஆதரவு மற்றும் கூட்டு பறிபோகிறது. அதையும் தற்போதுள்ள போராட்டத்தில் புத்திஜீவிகளின் பங்களிப்பு இல்லாமலிருப்பதையும் ஒன்றிணைத்தால், அரசியல் மற்றும் சமூகத்தில் மிதவாத கருத்துள்ள ஒரு வலயத்தை அமைப்பது அல்லது மீள்கட்டமைப்பு செய்வதும் தடுக்கப் படுகிறது.
13ம் திருத்தம் தொடர்பான போர், எண்ணங்களின் போராட்டத்துக்கு ஏராளமான வாய்ப்புகளை வழங்குகிறது, ஏனெனில் அதை நீக்குவது தொடர்பாக விடுக்கப்படும் வாதங்கள் எமது சமூகத்துக்குள்ளிருந்து பழமைவாதத்திலிருந்து இராணுவவாதம் வரை, மற்றும் நவீன பழமைத்துவத்திலிருந்து இனவாதம் வரையான மோசமான கருத்துக்களை அடையாளம் காட்டுகின்றன. இந்தக் கருத்துக்களை எதிர்த்து நின்று போராடுதல் ஜனநாயகம் மற்றும் பன்மைத்துவம் போன்ற காரணங்களின் மதிப்பை வலியுறுத்துவதற்கான ஒரு உன்னத வாய்ப்பை வழங்குகிறது.
அப்படியானால் ஏன் இந்த போராட்டம் ஒன்றிணைக்கப்படவில்லை? அதற்கான பதில் அரசியல் மற்றும் கருத்தியல் பிரிவினைவாதம் என்பதே. இதற்கு முக்கியமான பல முன்னோடிகள் உள்ளனர். எஸ்.டபிள்யு.ஆர்.டி பண்டாரநாயக்கா செல்வநாயகத்துடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தை பாதுகாக்க முற்பட்டபோது, சக்திவாய்ந்த இடதுசாரி தொழிற்சங்கங்கள் கலகத்திலிருந்து ஒதுங்கி நின்றன. அவர்கள் தங்கள் சக்தியை எஸ்.டபிள்யு.ஆர்.டி யின் பக்கம் செலுத்தி இருப்பார்களேயானால் இந்த நாட்டின் வரலாற்றில் வித்தியாசமானதும் சிறப்பானதுமான குறிப்பிடத்தக்க பல மாற்றங்கள் இடம் பிடித்திருக்கும்.
சமகால பிரிவினைவாதம் இரண்டு வகையானது. முதலாவது 13வது திருத்தத்தை பாதுகாப்பது தேவையற்றது ஏனெனில் தமிழ் மக்களின் தேவை மற்றும் அவர்கள் அருகதைப்படுவது கணிசமானளவு அதற்கு அப்பாற்பட்டது என்பதாகும். இரண்டாவது மகிந்த ராஜபக்ஸ செலுத்தும் படகில் ஓட்டை இருப்பது, அல்லது அப்பட்டமான பொய்யாக தீவிரமான கெட்ட காவலர்கள் மத்தியில் நல்ல காவலராக அவர் வேடமேற்றிருப்பதாக தெரிவது.
முதல் வாதம் விநியோகிப்பதற்கு எளிதானது. சபையின் அதிகாரங்கள் பல அகற்றப்பட நேர்ந்தாலும் ரி.என்.ஏ கட்டாயம் தேர்தலில் போட்டியிட்டே ஆகவேண்டும் ஏனெனில் ஒருவரது வம்ச அடையாளமாக உள்ள வீடு சிதைவடைந்திருந்தாலும் அவரால் அதை கைவிட முடியாது இல்லாவிட்டால் வேறுயாராவது அதில் கூரைபோட்டு குடியேறி விடுவார்கள்.
இரண்டாவது வாதம் பொருத்தமற்றதாயினும் உண்மையானது. நவீன பழமைத்துவத்துவம், இனவாதம், மற்றும் இன – மத பாசிசம், என்பனவற்றுக்கு எதிராக அரசியல் கருத்தியல் போராட்டத்துக்கான வாய்ப்பு, மகிந்த ராஜபக்ஸவின் மனப்போக்கு பற்றிய ஊகங்களை ஒருபுறம் ஒதுக்கினாலும்கூட, அவரது அரசியலை தொடர்ந்து வாசிப்பதில் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.
ஜாதிக ஹெல உருமயவின் எதிர் சீர்திருத்த மசோதாவுக்கு எதிராக காண்பிக்கப்படும் எதிர்ப்பு, யு.பி.எப்.ஏ க்குள்ளிருந்து நிருவாகம் மற்றும் அதன் நடைமுறைகளை சீரழித்து வரும் கருத்தியல் ஆதிக்கம் மிக்க தீவிரவாத துணைக் கட்சிகளை தோற்கடிப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பாராளுமன்ற குழுவிற்கு பல வருடங்களுக்கு பின்னர் கிடைத்துள்ள நல்ல ஒரு வாய்ப்பு.
எனினும் கெட்டவர்கள் வெற்றிபெற்றால் ஸ்ரீலங்கா அரசியல் மற்றும் சமூகம் என்பனவற்றின் புவியீர்ப்பு மையம் வலது பக்கமாக இன்னும் அதிகளவில் திரும்பும். அது வேட்பாளர் தெரிவில்கூட ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்.  நவீன போலித் திட்டங்களுடன் கூடிய தேசிய பாதுகாப்பின் சர்வாதிகார கருத்துக்கள் வெற்றி பெறுமாயின் தற்போது ஒதுக்கப்படுவது, ஜனநாயகமும் மற்றும் சகிப்புத்தன்மையும் உள்ள ஒரு காலகட்டத்தில் ரோசாவண்ண பின்னொளியில் கம்பீரமாக மேலெழும்பும்.
ஜாதிக ஹெல உருமய – தேசிய சுதந்திர முன்னணி – பொதுபலசேனா என்பன மாகாண அதிகாரப்பரவலாக்கத்தில் மேற்கொள்ளும் தாக்குதலை தோற்கடிப்பதற்காக நடத்தும் போராட்டம் இதனால் முற்றிலும் தீர்க்கமான ஒன்றாக உள்ளது. அத்தகைய ஒரு பின்னணியில் அதற்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் என்னைப்போன்ற அவல நகைச்சுவை ஆர்வலர்களாகவே இருப்பார்கள். அஞ்சலில் எனக்கு கிடைத்த கூட்டுக்குழு ஒன்றுக்கான அழைப்பிதழில், பிரகாசமான சிறந்த ஸ்ரீலங்காவின் பொதுநோக்கான புத்திஜீவிகள், அத்தகைய தொடர்பற்ற நேர்த்தியான சில  விடயங்கள் சம்பந்தமாக விவாதித்து கலந்தாலோசிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது அதில் குறிப்பிடப்பட்டிருந்த சில தலைப்புகள் பின்வருமாறு அமைந்திருந்தன
“எதிர்காலத்தில் கடந்த காலம்: டொட் கொம் யுகத்தில் காப்பகத்தின் நெறிமுறைசார்ந்த எதிர்காலம்”,
தார்மீக மீள்கட்டமைப்பு: ஆடைத்துறையில் பழமையான ஒருங்கிணைப்பு? ”‘முதலாளித்துவ பாணியிலான மனிதாபிமானம்,
கொடையாளியான தேசியவாதம்: மோதலுக்கு பிந்தைய ஸ்ரீலங்காவில் பெரு நிறுவன பரிசுகளின் நெறிமுறைகள்” மற்றும் “எதிர்ப்பால் அச்சம் மற்றும் நோயெதிர்ப்பு சாதிப் பிரிவு மற்றும் எதிர் சாதிப் பிரிவு”.
இங்கு பொருத்தமாக அமைந்திருந்த ஒரு தலைப்பு “ஐநா மனித உரிமைச் சபையில் பயன்படுத்த வேண்டிய இராஜதந்திரம்” என்பது மட்டுமே,
தற்காக நியமிக்கப்பட்ட ஒரே ஒரு தொகுப்பாளர் சர்வதேச மன்னிப்பு சபையை சேர்ந்த யோலன்டா பொஸ்ரர் ஆவார். இத்தாலிய அரசியல் தலைவர் கிராம்சி தேடிய நவீன இளவரசருக்கு தேவையான அசேதனமான அறிவார்ந்த பொருளோ அல்லது வார்த்தையோ இங்கு இருக்கவில்லை. இவர்கள்தான் நல்ல தோழர்கள் மற்றும் தோழிகளாக இருந்தால் இதுதான் அவர்களின் பிரசங்கமாக இருக்கும், இதன் காரணமாக கெட்டவர்கள் ஒரு படி முன்னெறியிருப்பார்கள் என்பதில் ஆச்சரியமில்லை, அவர்கள் அசேதனத்தை பற்றியும் மற்றும் பிரபலமான தேசியத்தை பற்றி குரலெழுப்பும் வாய்ப்பும் உள்ளது.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger