பொதுபலசேனாவின் கூட்டத்திற்கு ஹக்கீம் மறைமுக உதவி???


பொதுபலசேனாவுக்கு எதிராக கல்முனையில் ஒரு கண்டனக் கூட்டத்தைக் கூட ஏற்பாடு செய்ய வக்கில்லாத மாகாண சபை உறுப்பினர் ஜமீலுக்கு, பொதுபல சேனாவின் கல்முனை கூட்டம் பற்றி பேசுவதற்கு எந்த அருகதையுமில்லை என முஸ்லிம் மக்கள் கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.
கல்முனையில் பொதுபலசேனா கூட்டம் நடத்தவிருப்பது சம்பந்தமாக கருத்து தெரிவித்த போதே இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
பொதுபல சேனா என்பது அரசால் ஏவப்பட்ட அம்பு என்பதை முஸ்லிம்களின் அரசியல் கட்சி என்ற வகையில் நாம் மட்டுமே கூறினோம்.
அரசாங்கம் பொதுபல சேனாவின் கருத்துக்கு இணங்கி ஹலாலை நிறுத்திய போது அதற்கு எதிராக பாராளுமன்றத்தில் ஒரு வார்த்தையேனும் பேசாத ஒருவரை தலைவராக கொண்ட முஸ்லிம் காங்கிரஸ்காரர்களால் இத்தகைய அநியாயங்களுக் எதிராக கிழக்கு மாகாணத்திலாவது ஒரு கண்டன கூட்டத்தை நடத்த முடியவில்லை.
இதற்குக் காரணம் தங்களது பதவிகள், சுக போகங்கள் பறிபோய் தமது ஊழல்கள் கொண்ட கோப்புக்கள் வெளியே வந்து விடும் என்ற அச்சம்தான்.
ஆனாலும் நாம் கல்முனை பொலிசாருக்கும் அறிவித்து விட்டு சேனாவை கண்டித்து கல்முனையில் கூட்டம் நடத்தினோம். இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி நாம் பகிரங்கமாக அழைப்பு விடுத்தோம்.
ஆனாலும் தொண்ணூறு வீத முஸ்லிம் காங்கிரஸ்காரர்களைக் கொண்ட கல்முனை முஸ்லிம் மக்களில் அதிகமானோரை இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவிடாமல் முஸ்லிம் காங்கிரஸ்காரர்கள் தடுத்து விட்டனர்.
அதனையும் சவாலாக ஏற்று நாம் கூட்டத்தை நடாத்தி அதில் பொதுபல சேனாவையும், அதற்கு துணையாக இருக்கும் அரசையும், கைகட்டி வாய் பொத்தி நிற்கும் முஸ்லிம் சுயநல ஏமாற்றுக் கட்சிகளையும் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றினோம்.
இப்பொழுது பொது பலசேனா முஸ்லிம் காங்கிரசின் கோட்டையான கல்முனையில் கூட்டம் நடத்த தயாரான போதுதான் திடீர் ஞானம் வந்தவர்கள் போல் முழிக்கிறார்கள்.
கல்முனை மாநகர சபையை ஆட்சி செய்யும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தின் பங்காளிக்கட்சி என்ற துணிவின் காரணமாகவே பொதுபல சேனா கல்முனையில் கூட்டம் நடாத்துவதற்கு துணிந்துள்ளது.
நிச்சயம் அரச உயர் மட்டத்தின் கட்டளைக்கிணங்க இந்தக்கூட்டம் தடையின்றி நடைபெறுவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மறைமுகமாக உதவி செய்யும் என்பதே உண்மை.
தாங்கள் உதவவில்லை என முஸ்லிம் மக்களை ஏமாற்றுவதற்காகவே பிரச்சினைகள் வரும் என ஜமீல் போன்றவர்கள் அறிக்கை விடுகிறார்கள். ஏமாறுவதையே வழக்கமாகக்கொண்ட கல்முனை முஸ்லிம் மக்களில் பெரும்பாலோர் இதற்கும் ஏமாறுவார்கள் என்பதும் உண்மை என முபாறக் தெரிவித்துள்ளார்.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger