வடக்கு மாகாணசபை: இந்தியாவா? கோத்தாபயவா?

 

மாகாணசபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதற்கு அனுமதிக்க முடியாது, என்று பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச மீண்டும் சர்ச்சையைக் கிளப்பி விட்டுள்ளார். வடக்கு மாகாணசபைக்கு வரும் செப்ரெம்பரில் தேர்தலை நடத்தியே ஆக வேண்டிய நிலை ஒன்று அரசாங்கத்துக்கு உருவான போது, இந்த விவகாரத்தை அவரே முன்னரும் எழுப்பியிருந்தார்.
அதன் பின்னர், தான் ஜாதிக ஹெல உறுமய, தேசிய சுதந்திர முன்னணி போன்ற கட்சிகளும், சிங்கள பௌத்த அடிப்படைவாதக் குழுக்களும், 13வது திருத்தத்தையே ஒழிக்க வேண்டும் என்று ஒற்றைக்காலில் நிற்கத் தொடங்கின. எனினும், 13வது திருத்தத்தையே ஒழிப்பதற்கான முயற்சிகளை அரசாங்கத்தினால் உறுதியாக முன்னெடுக்க முடியாது போயுள்ள சூழலில், பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச மீண்டும் இந்தப் பிரச்சினையைப் பூதாகாரப்படுத்தி விட்டுள்ளார்.
வடக்கு மாகாணசபைக்குத் தேர்தலை நடத்துவதற்கு முன்னர், மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள காணி, பொலிஸ் அதிகாரங்கள் பறிக்கப்பட வேண்டும் என்பதே அவரது நிலைப்பாடு. வடக்கு மாகாண சபைக்குத் தேர்தல் நடத்தப்படுவதை விரும்பாத அரசாங்கத் தரப்பினரில் முதலிடத்தில் இருப்பவரும் கோத்தாபய ராஜபக்ச தான் என்பதில் சந்தேகமில்லை. ஆனாலும், வடக்கு மாகாணசபைக்குத் தேர்தலை நடத்தாமல் தப்பிக்க முடியாது என்பதை அவர் ஏற்றுக் கொள்கிறார்.
அதேவேளை, வடக்கில் தேர்தலை நடத்துவதற்கு முன்னர், காணி பொலிஸ் அதிகாரங்கள் பறிக்கப்பட்டு விடவேண்டும் என்பதில் அவர் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கிறார். இவரது இந்தக் கருத்து, பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு கடும் எரிச்சலையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் தான், அண்மையில் திருகோணமலையில் நடந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றிய இரா.சம்பந்தன், காணி பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பாக கோத்தாபய ராஜபக்சவுடன் பேசப் போவதில்லை என்றும் ஏனென்றால் அவர் அரசாங்கம் அல்ல என்றும் குறிப்பிட்டார்.
கோத்தாபய ராஜபக்ச ஒரு அரசியல் அதிகாரம் கொண்டவரல்ல என்பதே அதன் அர்த்தம்.
அதுபோலவே, ஐதேக பொதுச்செயலர் திஸ்ஸ அத்தநாயக்கவும், இதுகுறித்துப் பேசுவதற்கு ஒரு அரச அதிகாரியான கோத்தாபய ராஜபக்சவுக்கு அதிகாரமில்லை என்றும் இது சட்டதிட்டங்களை மீறுகின்ற செயல் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனும் இதுபோன்றே, கோத்தாபய ராஜபக்சவுக்கு என்ன அதிகாரம் உள்ளது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இவர்களெல்லாம், அரசியல் ரீதியான முடிவுகளை எடுக்கவும், கருத்துகளை வெளியிடவும் கோத்தாபய ராஜபக்சவுக்கு என்ன அதிகாரம் உள்ளது கேள்வி எழுப்பியுள்ள போதிலும், இவர்கள் அனைவருக்குமே அவர் தான் இலங்கையில் இரண்டாவது அதிகாரம் மிக்கவர் என்பது நன்றாகவே தெரியும். இது அரசியல் சட்டரீதியாக கொண்டுள்ள அதிகாரமல்ல.
இலங்கை அரசியலில் நிலைத்து நிற்கும் குடும்ப ஆதிக்கமும், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் வெற்றிபெற்ற படைகளுக்குத் தலைமையேற்றவர் என்பதாலுமே தான் அவரால் இந்த இடத்தைப் பிடிக்க முடிந்துள்ளது. பிரதமர், அமைச்சர்கள் என்று நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதிக்கு அடுத்து பல முதுநிலைப் பதவிகள் இருந்தாலும், பாதுகாப்பு அமைச்சின் செயலராக உள்ள இவரே, அந்த இரண்டாமிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.
போரில் பெற்ற வெற்றி, எல்லோரையும் ஆட்டிவைக்கக் கூடிய ஒருவராகவும், அரசதரப்பில் எவரும் மறுபேச்சுப் பேசமுடியாதளவுக்கு அதிகாரம் செலுத்தத்தக்க ஒருவராகவும் கோத்தாபய ராஜபக்சவை மாற்றி விட்டுள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் வெற்றியைப் பெற்றுக் கொள்ள இவரது அணுகுமுறைகள் அரசாங்கத்துக்கு உதவியது என்ற போதிலும் நிரந்தர அமைதியை ஏற்படுத்துவதற்கு இவரது அணுகுமுறைகளும், அழுங்குப்பிடியான பிடிவாதங்களும் உதவுமா? என்ற கேள்வியை ஏற்கனவே எழுப்பி விட்டது.
போருக்குப் பின்னர், தமிழரை அரவணைத்து, நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு, இவரே முக்கியமான தடையாக இருந்து வருவதாக பொதுவான குற்றச்சாட்டு உள்ளது.
வடக்கு, கிழக்கை தொடர்ந்தும் இறுக்கமான பாதுகாப்புக் கட்டமைப்புக்குள் வைத்திருக்கும் கோத்தாபய ராஜபக்சவின் திட்டத்துக்கு கடும் எதிர்ப்புகள் உள்நாட்டில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் எழுந்தாலும், அந்த மூலோபாயத்தில் எந்த விட்டுக்கொடுப்புகளைச் செய்யவோ சமரசம் செய்து கொள்ளவோ அவர் தயாராக இல்லை.
பாதுகாப்புத் தொடர்பான இறுக்கமான நிலைப்பாடுகளைக் கடைப்பிடிக்கும் அவர் இப்போது அரசியலமைப்பு ரீதியான முடிவுகளில் கடும்போக்கை எடுக்க வைப்பதற்கான அழுத்தங்களைச் செலுத்த ஆரம்பித்துள்ளார்.
இந்தியாவின் அழுத்தங்களினால், வடக்கில் தேர்தலை நடத்துவதைத் தவிர்க்க முடியாது என்பதை உணர்ந்துள்ள அவர், அரசியலமைப்பு ரீதியாக மாகாணசபைகளுக்கு உள்ள காணி, பொலிஸ் அதிகாரங்கள் வடக்கு மாகாணசபையின் வசம் சென்று விடக் கூடாது என்பதிலும் தெளிவாக உள்ளார்.
வடக்கில் அதுவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிகாரத்துக்கு வந்து விட்டால், அவர்களின் கையில் இந்த அதிகாரங்கள் சென்று விட்டால், எல்லாமே போய்விடும் என்பது போன்ற தோற்றப்பாட்டை அவர் உருவாக்க முனைவது தெரிகிறது. நிறைவேற்று அதிகாரமே ஜனாதிபதியின் கையில் இருக்கும் போது, உண்மையில், மாகாணங்களுக்கு இந்த அதிகாரங்களை வழங்குவதில் எந்த அச்சமும் கொள்ள வேண்டிய அவசியமில்லை.
மாகாண பொலிஸ் கூட மத்திய அரசின் பொலிஸ்மா அதிபருக்கு கட்டுப்படும் ஒன்றாகவே இருக்கும். அதைவிட,
இந்த பொலிஸ் படையைக் கொண்டு, வடக்கு, கிழக்கை கைப்பற்றிவிட முடியும் என்றோ, தனிநாட்டைப் பிரித்து விடலாம் என்றோ அச்சம் கொள்வதும் சரி, மிரட்டுவதும் சரி மிகையானதொரு செயலே. ஏனென்றால், விடுதலைப் புலிகளாலேயே, அவர்களிடம் இருந்த பாரிய படைபலம், ஆயுதபலத்தை வைத்து, சாதித்துக் கொள்ள முடியாது போனதை, வெறும் மாகாண பொலிஸ் சாதித்து விடும் என்று கூறுவது, நகைப்புக்கிடமானது.
மாகாணங்களுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்குவது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று முற்கணிக்கும் ஆற்றலைப் பெற்ற கோத்தாபய ராஜபக்சவுக்கு, ஒரு மாகாண பொலிஸ் எந்தளவுக்கு வல்லமையானதாக இருக்க முடியும் என்பது தெரியாமல் போயிருக்காது. ஆனாலும் அவர் இந்த அதிகாரங்களைப் பிடுங்கியே தீர வேண்டும் என்பதில் உறுதியாகவே உள்ளார்.
1987இல், இந்திய இலங்கை உடன்பாட்டுக்கு அமைய மாகாணசபைகள் உருவாக்கப்பட்ட போது, ஜே.ஆரின் அரசாங்கத்தில் அதற்கு எதிராக நின்றவர்களில் பிறேமதாசவும், லலித் அத்துலத் முதலியும் முக்கியமானவர்கள்.
பிறேமதாச தன்னிடம் உள்ள அரசியல் செல்வாக்கை வைத்து அதை எதிர்த்தார். லலித் அத்துலத் முதலி, அப்போது பாதுகாப்பு அமைச்சர் பதவியை வகித்து வந்தார். படையினரைக் கட்டுப்படுத்தும் அதிகாரமுள்ளவராக அவர் விளங்கினார்.
அவரே, இந்திய – இலங்கை உடன்பாட்டின் மூலம், அமைதி ஏற்படுவதை தடுத்ததாகவும், இந்திய அமைதிப்படைக்கும், விடுலைப் புலிகளுக்கும் இடையில் போர் ஏற்படுவதற்கு காரணியாக இருந்ததாகவும் கருத்து உள்ளது. அப்போது லலித் அத்துலத் முதலி வகித்து வந்த அதே வகிபாகத்தை, இப்போது பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச கொண்டுள்ளார்.
இருவருமே படைகளை தமது கட்டுப்பாட்டில் கொண்டவர்கள். இந்தியத் தலையீட்டையும், அதிகாரப் பகிர்வையும் கடுமையாக எதிர்ப்பவர்கள். ஆனால் ஒரு ஒரு வித்தியாசம்,
லலித் அரசியல் அதிகாரம் கொண்டவராக, பாதுகாப்பு அமைச்சர் என்ற பதவியை வகித்தார். கோத்தாபய ராஜபக்சவோ, வெறும் பாதுகாப்புச்செயலர் என்ற பதவியை வைத்துக் கொண்டே அரசியல் அதிகாரம் பெற்றவர்களை விடவும், அதிகாரமுள்ளவராக மாறியுள்ளார்.
இப்போது கோத்தாபய ராஜபக்ச காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்க முடியாது என்று கூறிவரும் நிலையில், வடக்கு மாகாணசபைக்கு இன்னும் மூன்று மாதங்களில் தேர்தலை நடத்த வேண்டிய சிக்கலை எதிர்கொள்ளும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, அடுத்து என்ன செய்யப் போகிறார் என்ற கேள்வி எழுகிறது.
இந்தியாவுக்காக கோத்தாபய ராஜபக்சவை அவர் புறந்தள்ளப் போகிறாரா?
அல்லது கோத்தாபய ராஜபக்சவுக்காக இந்தியாவின் அழுத்தங்களைப் புறந்தள்ளப் போகிறாரா?
இதில் எது நடந்தாலும், அது இலங்கைத் தீவின் அரசியல் முறுகலை தீவிரப்படுத்துமே தவிர குறைக்கப் போவதில்லை.
– தொல்காப்பியன்
Gotabaya-Rajapaksa 1
 

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger