உத்தரகாண்ட் வெள்ளத்தில் 5 ஆயிரம் பேர் பலி: பலத்த மழையால் மீட்பு பணி பாதிப்பு



உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் அந்த மாநிலமே உருக்குலைந்து போனது. இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த மாநிலத்தில் பள்ளத்தாக்குகள் மத்தியில் ஏராளமான சிற்றாறுகளும், நதிகளும் ஓடுகின்றன. இங்குதான் கேதார்நாத் என்ற புனித தலம் அமைந்துள்ளது. மலைப்பாதை வழியாக சென்று நதிகளை கடந்து தான் கேதார்நாத் செல்ல வேண்டும். வழக்கமாக 6 மாதம்தான் கேதார்நாத் கோவில் திறந்து இருக்கும். மழைகாலம் தொடங்கி விட்டால் கோவில் மூடப்படும். 

இந்த ஆண்டு மழை சீசன் தொடங்கும் முன் இறுதிக்கட்ட தரிசனத்துக்காக பல்லாயிரக்கணக்கான யாத்திரீர்கள் கேதார்நாத் வந்து குவிந்து இருந்தனர். அப்போது தான் எதிர்பாராத விதமாக பெரு வெள்ளம் ஏற்பட்டது. இமயமலையே பிளந்தது போல் வெள்ளம் கொட்டியது. கடல் அலை திடீர் என்று சீறிப் பாய்ந்து வருவது போல் நதியில் திடீர் என்று பல மீட்டர் உயரத்துக்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதில் கேதார்நாத் மிக மோசமாக பாதிக்கப்பட்டது. 

ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. கேதார்நாத் செல்லும் அனைத்து மலைப்பாதைகளிலும் நிலச்சரிவு ஏற்பட்டு சின்னாபின்னமானது. பாலங்களும் சேதம் அடைந்தன. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்கள் தவிர மற்றவர்கள் உயிர் பிழைக்க ஆங்காங்கே இருந்த இடங்களில் தஞ்சம் புகுந்து இருந்தனர். அங்கு உணவு, தண்ணீர் இன்றி தவித்தார்கள். கேதார்நாத் சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டு தீவாக மாறியது. வான் வழியாகத்தான் மீட்க முடியும் என்ற நிலையில் ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்பு பணி நடை பெறுகிறது. 

மலைகளில் சிக்கித் தவித்தவர்களை ஹெலிகாப்டரில் மீட்டு அழைத்து வருகிறார்கள். இதுவரை கேதார்நாத் பகுதியில் தவித்த 12 ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ளனர். நேற்று மழை பெய்தாலும் மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்றது. இதற்கிடையே மற்றொரு புனித தலமான பத்ரிநாத் பகுதியில் 10 ஆயிரம் பேர் சிக்கி தவிக்கிறார்கள். அவர்களை மீட்கும் பணி நடைபெறுகிறது. மீட்கப்பட்ட ஆயிரக்கணக்கானவர்கள் டேராடூன் ராணுவ முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

வெளியூர் பயணிகள் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். உள்ளூர் மக்கள் தொடர்ந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு குழுவினர் சென்ற போது ஆங்காங்கே பாறைகள் புதர்களிலும் மணலிலும் பிணங்கள் புதையுண்டு கிடந்தன. மீட்கப்பட்ட பிணங்களின் அடிப்படையில் பலியானவர்கள் எண்ணிக்கை கணக்கிடப்படுகிறது. இதுவரை 1000 பிணங்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்னும் ஆயிரக்கணக் கானோரை காணவில்லை. காணாமல் போனவர்களில் சுற்றுலா பயணிகள் 700 பேர் என்றும் உள்ளூர் வாசிகள் 5,000 பேர் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. 

எனவே பலி எண்ணிக்கை 5 ஆயிரத்தை எட்டும் என்று மீட்பு குழுவினர் தெரிவித்தனர். உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பிணங்கள் அருகில் உள்ள உத்தர பிரதேசத்தில் பல இடங்களில் கரை ஒதுங்கி வருகின்றன. அவற்றை உத்தரபிரதேச அதிகாரிகள் மீட்டு வருகிறார்கள். இறந்தவர்கள் உடல்கள் அடையாளம் காணமுடியாத அளவுக்கு உள்ளன. 

உத்தரகாண்ட்டில் தற்போது உயிருடன் தவிப் பவர்களை மீட்கும் பணிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. பிணங்கள் ஆங்காங்கே சிதறிக்கிடக்கின்றன. உள்ளூர் மக்கள் அவற்றை மீட்டு வருகிறார்கள். பிணங்கள் ஒருவாரமாக மீட்கப்படாமல் கிடப்பதால் வெள்ளம் பாதித்த பகுதிகளில் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ராணுவத்தினர் நோய் தடுப்பு மருந்து பொருட்களை விநியோகித்து வருகிறார்கள். 

வெள்ளப் பகுதியில் இருந்து மீட்கப்படுவோருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. உணவின்றி தவிப்போருக்கு இதுவரை 1 1/2 லட்சம் உணவுப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. அங்கு சிக்கியுள்ள அனைவரையும் மீட்க இன்னும் 15 நாட்கள் ஆகும் என்றும் அடுத்து கேதார்நாத் யாத்திரை தொடங்க இன்னும் 2 வருடங்கள் ஆகும் என்றும் மீட்பு குழுவினர் தெரிவித்தனர். 

இந்தநிலையில் உத்தர காண்ட்டில் மீண்டும் மழை கொட்ட தொடங்கியுள்ளது. தலிசியான் பகுதியில் மேகம் வெடித்தது போல் மழை கொட்டுகிறது. பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த மழை மேலும் 5 நாட்களுக்கு நீடிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. நேற்று மழை தொடங்கினாலும் கொட்டும் மழையில் மீட்பு பணி நடந்தது. ஆனால் இன்று வானம் பிளந்து கொட்டுவது போல் மழை பெய்வதால் மீட்பு பணி பாதிக்கப்பட்டுள்ளது.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger