பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபயவின் கைத்தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்புஅதி நவீன தொலைத் தொடர்பு சாதனங்கள் ஊடாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் கைத்தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தனது கைத்தொலைபேசி ஊடான உரையாடல்கள் திருட்டுத்தனமான முறையில் ஒட்டுக் கேட்கப்பட்டமை, தேசிய பாதுகாப்புத் தொடர்பான விடயங்களை சட்டவிரோதமான முறையில் அதனூடாகப் பெற்றுக் கொள்ள முயற்சித்தமை தொடர்பில் குறித்த கைத்தொலைபேசி நிறுவனத்திடம் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ முறைப்பாடு செய்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.
இதனையடுத்து இந்த விடயம் தொடர்பில் விசேட விசாரணைப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது வெளிநாட்டுத் தூதுவராலயம் மற்றும் பிரபலமான வெளிநாட்டு புலனாய்வுச் சேவை அமைப்பு ஒன்றினாலும் இந்த ஒட்டுக்கேட்டல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தமை தெரிய வந்துள்ளது.
இதனைவிட மேலும் பல முக்கியஸ்தர்களின் கைத்தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளமையும் இதற்காக நவீன தொலைத் தொடர்பு சாதனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளமையும் விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது. இந்த விடயங்கள் தொடர்பில் குறித்த கைத்தொலைபேசி நிறுவனம் முழுமையான விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
கூட்டமைப்பின் வட மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளராக மாவை? 3 கட்சிகளுக்கிடையே கருத்தொருமிப்பு-வட மாகாண சபைக்கானத் தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில் அரசியற் கட்சிகள் தமது முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை தெரிவு செய்யும் நடவடிக்கையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.
இந் நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு, கட்சியின் நீண்டகால உறுப்பினரும், சிரேஷ்ட தலைவர்களில் ஒருவருமான மாவை சேனாதிராஜாவை முதலமைச்சர் வேட்பாளராக களத்தில் இறக்க முயற்சிப்பதாக கூட்டமைப்பு வட்டாரங்களில் இருந்து தெரிய வருகிறது.
இது தொடர்பில் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் இதர கட்சிகள் மத்தியில் கருத்தொருமிப்பு காணப்படுவதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, கூட்டமைப்பின் சிரேஷ்ட உறுப்பினரான மாவை சேனாதிராஜாவிடம் இந்த விடயம் தொடர்பில் தொடர்பு கொண்டு கேட்ட போது, அதற்கு மாவை சேனாதிராஜா பதிலளிக்கையில், கட்சிக்குள் அனைவரும் ஒற்றுமையாகச் செயற்படவேண்டும் என்பதே எனது நோக்கம். நான் இது தொடர்பில் எந்தவிதமான குழப்பத்தையும் உண்டு பண்ணப் போவதில்லை.
நான் கட்சியின் தொண்டன் மாத்திரமே. கட்சி எதைக்கூறுகின்றதோ அதனை நான் தலையாயப் பணியாகக் கருதி செயற்படு வேன். எந்தக்கட்டத்திலும் எமது ஒற்றுமை சீர்குலையவோ, அன்றேல் கட்சி பலம் இழக்கவோ நான் அனுமதிக்கப் போவதில்லை.
அந்த வகையில் கட்சி எடுக்கும் முடிவே இறுதியும், உறுதியும் வாய்ந்ததாகும். இது தொடர்பில் கட்சி உறுப்பினர்கள் மட்டத்தில் அவ்வப்போது பேசப்பட்டு வருகின்றது. அவர்கள் கூடி ஆராய்ந்து எடுக்கும் முடிவுக்கு தலைசாய்க்க நான் கடமைப் பட்டுள்ளேன். கூட்டமைப்பின் ஏகமனதான விருப்பத்தின் பேரிலேயே அனைத்தும் அமையும் என்று கூறினார். இதேவேளை, கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக வேறு எவரின் பெயராவது முன்வைக்கப்பட்டுள்ளதா? என்று கேட்கப்பட்ட போது,
அதற்குப் பதிலளித்த அவர் வேறு பெயர்களும் முன்வைக்கப்படலாம். அவை தொடர்பிலும் பரிசீலிக்கப்படும். இந்த விடயத்தில் போட்டித் தன்மை என்பதற்கு அப்பால், அர்ப்பணிப்புடன் கூடிய சேவையே முக்கியமானதாகும். அந்தவகையில் கட்சி எடுக்கும் தீர்மானத்துக்கு நாங்கள் முழுமையான ஆதரவை வழங்குவோம் என்றார்.
இதேவேளை, கிழக்கு மாகாணத்தின் இன்றைய சூழலை கருத்திற்கொண்டு வடக்கில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக மாவை சேனாதிராஜாவை நிறுத்துவதே பொருத்தமானதாக இருக்குமென ஈ.பி.ஆர்.எல்.எப், டெலோ, புளொட் ஆகிய கட்சிகள் தெரிவிக்கின்றன.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் இக்கட்சிகள் தேர்தலுக்குப் பின்னர் முதலமைச்சராக தெரிவு செய்யப்படுபவர் பாரிய சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும். அந்த வகையில் சவால்களுக்கு முகம் கொடுக்கக்கூடியவர் மாவை சேனாதிராஜா என்பதே எமது கருத்தாகும்.
வட மாகாண சபைத் தேர்தலில் தமிழரசுக் கட்சியைச் சார்ந்த ஒருவரே முதலமைச்சர் வேட்டபாளராக நிறுத்தப்படுவார். கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கப் போவதில்லை. இந்த நிலையில் வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக மாவை சேனாதிராஜாவை நிறுத்துவதே பொருத்தமானதாக இருக்குமென ஈ.பி. ஆர். எல். எப் செயலாளர் நாயகம் சுரேஷ் பிரேமச்சந்திரன் எம். பி.தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண முதலமைச்சர் வேட்பாளராக மாவை சேனாதிராஜாவை தெரிவு செய்வதற்கு டெலோ மற்றும் புளொட் ஆகிய அமைப்புக்கள் முழு ஆதரவையும் வழங்கும் என்று டெலோ அமைப்பின் செயலாளர் நாயகம் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. தெரிவித்தார்.
கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் பல சவால்களுக்கு தேர்தலுக்கு முன்னரும் பின்னரும் முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும். இந்த சவால்களை சமாளிக்கும் ஆற்றல் மாவை சேனாதிரா ஜாவிடம் இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
Post a Comment