ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, வரும் 2014ம் ஆண்டில் அடுத்த ஜனாதிபதித் தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கு உத்தேசித்திருப்பதாக நம்பகமான தகவலறிந்த வட்டாரங்களிலிருந்து தெரிய வந்துள்ளது. ஜனாதிபதிக்கு மிக நெருக்கமான ஜோதிடர் ஒருவரின் ஆலோசனைப்படி அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக அலரி மாளிகை தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2014ம் ஆண்டின் இறுதிக்குப் பின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஜோதிட ரீதியாக சாதகமான பலன்கள் கிட்டுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று அவருக்கு நெருக்கமான ஜோதிடர் ஒருவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதனைக் கருத்திற் கொண்டே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, தனது பதவிக்காலத்தை மூன்றாவது தவணைக்கு நீட்டித்துக் கொள்ளும் வகையில் முன்கூட்டியே ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளார். மேலும் இந்தத் தேர்தலின் போது மாகாண சபை முறை ஒழிப்பு, சிறுபான்மை கட்சிகளுக்கு எதிரான புதிய நடைமுறைகள் போன்ற விடயங்களை முன்வைத்து அவர் பெரும்பான்மை சிங்கள மக்களின் அதிகூடிய ஆதரவைப் பெற்று ஜனாதிபதித் தேர்தலை வெற்றிகொள்ள முனைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் மூலம் இலங்கை மக்கள் மாகாண சபை முறையை எதிர்ப்பதாகவும், அதனை மாற்றியமைப்பதற்கு தனக்கு சர்வஜன ஆணையை வழங்கியுள்ளதாகவும் சர்வதேசத்திற்கு காட்டிக்கொள்ள முடியும் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கருதுவதாக தெரிகிறது. இதற்கிடையே ஜனாதிபதியின் காய் நகர்த்தல்கள் தொடர்பில் நம்பகமான தகவல்களை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சரத் பொன்சேகாவின் ஜனநாயக தேசிய முன்னணி போன்றவற்றை இணைத்துக் கொண்டு எதிர்கால அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் ஆர்வம் காட்டி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment