மதுவுக்கு அடிமையானோருக்கு மறுவாழ்வு அளிக்கும் விடுதி; சாவகச்சேரி வைத்தியசாலையில் ஆரம்பம் / 2012ம் ஆண்டில் 80 ஊடகவியலாளர்களுக்கு புகலிடம் / பதிவு செய்யப்படாத 263 தனியார் மருந்தகங்கள்

 

2012ம் ஆண்டில் 80 ஊடகவியலாளர்களுக்கு புகலிடம்- 
2012ம் ஆண்டில் 80 ஊடகவியலாளர்கள் உலகின் பல நாடுகளில் புகலிடம் பெற்றுக் கொண்டுள்ளனர். உலக அகதிகள் தினத்தை முன்னிட்டு எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள விசேட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு நோக்கிலும் அச்சுறுத்தல் காரணமாகவும் இவ்வாறு ஊடகவியலாளர்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
இலங்கை, சிரியா, எரித்திரியா, ஈரான் மற்றும் சோமாலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் இவ்வாறு நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். குறித்த நாடுகளில் ஊடகத்துறை மிகவும் ஆபத்தானதாக அமைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் முதல் அரையாண்டுப் பகுதியிலும் பெருமளவிலான ஊடகவியலாளர்கள் இவ்வாறு புகலிடம் கோரியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அழுத்தங்கள் நெருக்கடிகளை ஈடு செய்யும் நோக்கிலேயே ஊடகவியலாளர்கள் இவ்வாறு வெளிநாடுகளில் புலிடம் கோருகின்றனர்.
புலம்பெயர்ந்து வாழும் ஊடகவியலாளர்களுக்கு குறித்த நாடுகளின் தூதரக அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் பல்வேறு வழிகளில் அச்சுறுத்தல் விடுத்து வருவதாகவும், அவர்களின் செயற்பாடுகளை கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வெளிநாடுகளில் புகலிடம் பெற்றுக் கொண்டுள்ள ஊடகவியலாளர்கள் பல்வேறு நிதி நெருக்கடிகளினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு வெளிநாடுகளில் புகலிடம் கோரியுள்ள ஊடகவியலாளர்களுக்கு கூடியளவில் உதவிகள் வழங்கப்பட வேண்டுமென எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு இவ்வாறு புலம்பெயர்ந்து வாழும் ஊடகவியலாளர்களுக்கு நிதி உதவிகளை வழங்கி வருகின்றது
மதுவுக்கு அடிமையானோருக்கு மறுவாழ்வு அளிக்கும் விடுதி; சாவகச்சேரி வைத்தியசாலையில் ஆரம்பம்-
வடமாகாணத்தில் மதுபோதைக்கு அடிமையாகி அதிலிருந்து மீள முடியாதவர்களுக்கு மறுவாழ்வளிக்கும் விடுதியொன்று முதன் முதலாக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் விரைவில் ஆரம்பித்து வைக்கப்படும் என்று உளநல மருத்துவ நிபுணர் சிவயோகன் தெரிவித்துள்ளார். வைத்தியசாலை பணியாளர்களுடனான நேற்றைய கூட்டத்தின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளரின் வழிகாட்டலில் யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஏற்பாட்டில் யாழ்.போதனா வைத்தியசாலை உளநல வைத்திய நிபுணர் சிவயோகனின் நெறிப்படுத்தலில் இந்த விடுதி இயங்கவுள்ளது. இது விடுதியாக அல்லாது பாதிக்கப்பட்டவர்களுக்கு புனர்வாழ்வு வழங்கக்கூடிய ஆற்றுப்படுத்தல் நிலையமாகவே செயற்படவுள்ளது.
யாழ். குடாநாட்டில் சந்தர்ப்ப வசத்தால் மதுபோதைக்கு அடிமையானவர்களே அதிகமானோர் என்பதாலும், அவர்களை நல்வழிப்படுத்துவது இலகுவான விடயம் எனக் கருதப்படுவதாலும் போதைக்கு அடிமையாகி அதிலிருந்து மீள முடியாமல் தவிப்பவர்கள் தாமாக முன்வந்து வைத்திய நிபுணருடன் கலந்தாலோசித்து நிலையத்தில் தங்கலாம்.
இவ்வாறான நிலையங்கள் இலங்கையில் குருணாகல், கொழும்பு ஆகிய இடங்களில் அரச சார்பற்ற நிறுவனங்களால் நடத்தப்பட்டு வருகின்றன. வடக்கு மாகாணத்தில் முதன்முறையாக இத்தகைய நிலையமொன்றை அமைக்க சுகாதாரத் திணைக்களத்தினர் முன்வந்துள்ளமை பாராட்டக் கூடியது.
அத்துடன் இந்த வைத்தியசாலையில் சிற்றூழியர்கள் பற்றாக்குறையான நிலையிலும் இங்கு பணியாற்றுவோர் மேலதிக நேரம் பணியாற்ற மனவிருப்பத்துடன் முன்வந்தமை சுகாதாரத் திணைக்களத்தினர் எடுத்த நடவடிக்கைக்கு உந்து சக்தியாக அமைகிறது.
இந்த முயற்சி வெற்றியளிக்குமாயின் இலங்கையில் மட்டுமன்றி வெளிநாடுகளில் இளவயதில் போதைக்கு அடிமையாகியுள்ள எமது மக்களின் இளையோர் இங்கு வந்து புனர்வாழ்வு பெற முடியும்.
வடபகுதியில் டெங்கு மற்றும் எயிட்ஸ் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களை விட மதுபோதைக்கு அடிமையாகி அதிலிருந்து மீள முடியாதிருப்போரின் எண்ணிக்கை மிக மிக அதிகமாகும்” என உளநல வைத்திய நிபுணர் கருத்து வெளியிட்டுள்ளார்.
பதிவு செய்யப்படாத 263 தனியார் மருந்தகங்கள்-
நாட்டில் 2000 தனியார் மருந்தகங்கள் பதிவு செய்யப்படாதுள்ளதாக வெளியாகியுள்ள செய்தியில் எதுவித உண்மையுமே இல்லை என்று அழகு சாதனப் பொருட்கள் மற்றும் மருந்து பொருட்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை நேற்றுத் தெரிவித்துள்ளது.
தற்போது நாட்டில் இருப்பதோ 2766 தனியார் மருந்தகங்கள் மாத்திரமே. அவற்றில் 2503 தனியார் மருந்தகங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இன்னும் 263 தனியார் மருந்தகங்கள் மாத்திரமே அவ்வருடத்திற்குள் பதிவு செய்யப்படவிருப்பதாகவும் அந்த அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
எஞ்சிய தனியார் மருந்தகங்கள் பதிவு செய்ய வேண்டிய காலத்திற்குள் பதிவு செய்யப்படும் என்றும் அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
நாட்டில் 4000 தனியார் மருந்தகங்கள் இருப்பதாகவும், அவற்றில் 2000 மருந்தகங்கள் பதிவு செய்யப்படா திருப்பதாகவும் தொழிற்சங்கமொன்று ஊடகங்களுக்குத் தகவல் வழங்கியுள்ளது.
இத்தகவல்களில் எதுவித உண்மையுமே இல்லை என்றும் அந்த அதிகார சபை தெரிவித்துள்ளது
 


Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger