13ம் திருத்தச் சட்டத்தில் மாற்றம் செய்யப்பட வேண்டுமென மத்திய மாகாணசபையில் இன்றைய தினம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தற்போது அமுலில் உள்ள 13ம் திருத்தச் சட்டத்தின் சில சரத்துக்களில் மாற்றம் செய்யப்பட வேண்டுமென ஆளும் கட்சி வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக இரண்டு மாகாணசபைகளை இணைத்தல் உள்ளிட்ட அதிகாரங்கள் ரத்து செய்யப்பட வேண்டுமென கோரி வருகின்றது.
இவ்வாறான ஓர் பின்னணியில் 13ம் திருத்தச் சட்டத்தில் மாற்றம் செய்யப்பட வேண்டுமென மாகாணசபைகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வருகின்றது.
இதற்கு முன்னதாக வடமேல் மற்றும் தென் மாகாணசபைகளில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இரண்டு ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரின் ஆதரவுடன் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்ட இந்தத் தீர்மானம் 30 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.
13ம் திருத்தச் சட்டம் இலங்கையின் மீது பலவந்தமாக திணிக்கப்பட்டது – அரசாங்கம்
13ம் திருத்தச் சட்டம் இலங்கையின் மீது பலவந்தமாக திணிக்கப்பட்டது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
1987ம் ஆண்டு இலங்கை – இந்திய உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட போதிலும், உடன்படிக்கையில் இலங்கை சுய விருப்பின் அடிப்படையில் கைச்சாத்திடப்படவில்லை என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கத்தின் மீது கடுமையான அழுத்தங்களை பிரயோகித்தே இந்திய இலங்கை உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
13ம் திருத்தச் சட்டத்தின் நல்ல விடயங்களும் தீய விடயங்களும் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
எனவே இந்த விடயத்தில் மாற்றம் செய்யப்பட வேண்டிய அவசியம் எழுந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சமாதானத்தை பெற்றுக்கொள்வதற்காக அனைத்து விடயங்களையும் மேற்கொள்ள மக்கள் தயாராக இருக்கின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய இலங்கை உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட காலத்திலேயே ஜே.வி.பியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் 13ம் திருத்தச் சட்டத்தை எதிர்த்ததாகத் தெரிவித்துள்ளார்.
தற்போது மீண்டும் 13ம் திருத்தச் சட்டம் தொடர்பில் கேள்விகள் விவாதங்கள் எழுந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சிலர் அதனை எதிர்ப்பதாகவும், சிலர் அதனை ஆதரிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே இந்த விடயம் குறித்து பாராளுமன்றம் தீர்மானிக்கட்டும் என ஜனாதிபதி அறிவுறுத்தல் விடுத்துள்ளதாக அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
Post a Comment