வடபகுதி மக்கள் நாட்டை விட்டு வெளியேற அவசியமில்லை -அமைச்சர் பீரிஸ் / கைதிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட சிம் அட்டைகள் / 13ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தப்படுவது அவசியம் -அமைச்சர் திஸ்ச விதாரண

 

வடபகுதி மக்கள் நாட்டை விட்டு வெளியேற அவசியமில்லை -அமைச்சர் பீரிஸ்-
வடக்கில் வாழும் மக்களுக்கு நாட்டில் இருந்து வெளியேறி செல்வதற்கான தேவையில்லை என்று வெளிவிவகார அமைச்சர் ஜீ எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். அவுஸ்ரேலிய வானொலி ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வி ஒன்றிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் தற்போது ஏனைய பகுதிகளை விட, வடக்கு பகுதியின் அபிவிருத்திக்கு அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்துகின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புலிகள் யுத்ததால் தோற்கடிக்கப்பட்டாலும், அவர்களது ஆதரவாளர்கள் சர்வதேச ரீதியில் பல்வேறு செயற்பாடுகளில் ஈடுப்பட்டு வருகின்றனர். சர்வதேச அமைப்புக்கள் மற்றும் அரசியல் வாதிகளின் ஒத்துழைப்புகளுடம் இலங்கைக்கு எதிரான பிரசாரங்களை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இது இலங்கையின் நன்மதிப்பை பாதிக்கும் செயற்பாடாகும்.
அத்துடன், யுத்தில் 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்படடதாக தெரிவிக்கப்படுகிறது. ஒரு பொய்யான விடயத்தை பல தடவைகள் சொல்லிக் கொண்டு வரும்போது அது மெய்யான தோற்றத்தை காட்டுவதாக மாறி விடும்.
இதன்போது, அவுஸ்ரேலியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்க முடியுமா? என்று அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் வழங்கிய அவர், அவுஸ்திரேலியாவில் அகதிகள் அந்தஸ்து கோரியுள்ளோர் நாடு திரும்பினால் அவர்களின் பாதுகாப்புக்கு நிச்சயம் உறுதியளிக்கப்படும் குறிப்பிட்டுள்ளார்.
கைதிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட சிம் அட்டைகளை பயங்கரவாத விசாரணைப் பிரிவிடம் கையளிக்க நடவடிக்கை-
நீர்கொழும்பு மற்றும் கொழும்பு மெகசின் சிறைச்சாலைகளில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் கண்டு பிடிக்கப்பட்ட தொலைபேசி சிம் அட்டைகளை பயங்கரவாத விசாரணைப் பிரிவிடம் ஒப்படைக்கவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த சிம் அட்டைகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் தொடர்பில் கண்டறிய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான காமினி குலதுங்க சுட்டிக் காட்டியுள்ளார்.
மெகசின் சிறைச்சாலையில் நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது 13 கையடக்கத் தொலைபேசிகளும் பல சிம் அட்டைகளும் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்துடன் கடந்த 20ஆம் திகதி நீர்கொழும்பு சிறைச்சாலையிலும் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இதன்போது, 23 கையடக்கத் தொலைபேசிகளும் 27 சிம் அட்டைகளும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
13ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தப்படுவது அவசியம் -அமைச்சர் திஸ்ச விதாரண-
மாகாண சபை முறைமை வெள்ளை யானை அல்லவென சிரேஸ்ட அமைச்சர் திஸ்ச வித்தாரண தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். 13வது திருத்தச் சட்டத்தை திருத்த முனைவது அதிலுள்ள பயனை முழுமையாக பெற்றுக் கொள்வதற்கே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
13வது அரசியல் அமைப்பை சில சீர்திருத்தம் செய்ய வேண்டும் அதனை நாம் ஏற்கிறோம். இதனை திருத்தி மேலும் சக்திமயப்படுத்தி சிறந்த மாகாண சபைகளை அமைப்பதே எமது நோக்கம்.
இதனை சிலர் வெள்ளை யானை என்று கூறுகின்றார்கள், அதனை ஏற்க முடியாது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் ரெஜினல் குரே, தேசிய பிரச்சினைக்கு அதிகார பகிர்வு அத்தியாவசியம் என்று குறிப்பிட்டுள்ளார்.
அதிகார பகிர்வின் ஊடாகவே இந்த நாட்டு மக்கள் ஐக்கியத்துடன் வாழமுடியும் என்பதே உண்மையான நிலை என அவர் மேலும் சுட்டிக் காட்டியுள்ளார்.
 

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger