தெற்கு ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளை பிரிட்டிஷ் ராணுவத்தினர் எதிர்த்துப் போரிட்டபோது, அவர்களுக்கு 600-க்கும் மேற்பட்ட ஆப்கானிய மக்கள் மொழிபெயர்ப்பாளர்களாக உதவி புரிந்தனர். அயல்நாட்டவருக்கு உதவி புரிந்த தாங்கள், சொந்த நாடான ஆப்கானிஸ்தானிலேயே தங்கினால் தலிபான்களால் தங்களுக்கு ஆபத்து வரக்கூடும் என்று மொழிபெயர்ப்பாளர்களில் பலர் கருதுகின்றனர். அவர்களுக்கு உதவி புரியும் வகையில் அவர்கள் பிரிட்டனில் தங்க அனுமதி வழங்கப்படுவதாக பிரிட்டிஷ் பிரதமர் அலுவலகம் இன்று அறிவித்துள்ளது.
ஆரம்பத்தில் பிரதமர் டேவிட் கேமரூன், ஆப்கானியர்களும் அவர்களது குடும்பங்களும் பிரிட்டனில் தங்குவது குறித்து எதிர்ப்புத் தெரிவித்தபோதிலும், தீவிர பிரசாரத்திற்குப் பின்னர் அவர் தனது சம்மதத்தைத் தெரிவித்துள்ளார். ஒரு வருடத்திற்கும் மேலாக பிரிட்டிஷ் படையினருக்கு உதவியவர்களுக்கு பிரதமர் ஐந்து வருட விசா அனுமதி கொடுக்க முடிவு செய்துள்ளார்.
தங்களுடைய வாழ்க்கையை பணயம் வைத்து பிரிட்டிஷ் அரசின் திட்டத்தில் வெற்றிபெற உதவியவர்களுக்கு தாம் உதவி வழங்க மறுக்கக்கூடாது என்று பிரதமர் கருதியதாக அவரது அலுவலகத்தில் இருந்து வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆப்கானிஸ்தானிலேயே இருக்க விரும்புபவர்களுக்கும் ஐந்து வருடங்களுக்கு தக்க ஊதியம் அளிக்கப்படும். அவர்கள் தங்கள் திறமைகளை வளர்த்து கொள்வதற்கு ஏதுவாக உதவிகள் செய்யப்படும் என்றும் பிரிட்டிஷ் அரசு அறிவித்துள்ளது.
Post a Comment