சீனப் பிரதமரின் வருகையால் செல்போன் சேவைகளை நிறுத்திய பாகிஸ்தான் / கைதிகள் பரிமாற்றம், இந்தியா-தாய்லாந்து கூட்டு ஒப்பந்தம்



சீனப் பிரதமரின் வருகையால் செல்போன் சேவைகளை நிறுத்திய பாகிஸ்தான்-
சீனப் பிரதமர் இன்று பாகிஸ்தான் வருவதை முன்னிட்டு பாகிஸ்தான் அரசு தலைநகர் இஸ்லாமாபாத்திலும் அருகில் உள்ள ராணுவத்தளமான ராவல்பிண்டியிலும் அனைத்து செல்போன் சேவைகளையும் நிறுத்தி வைத்துள்ளது.
பாகிஸ்தானின் தொலைத்தொடர்பு நிறுவனம் இன்று மதியம் அந்நாட்டு நேரப்படி 1 மணி வரை அனைத்து செல்போன் சேவைகளையும் நிறுத்தி வைக்குமாறு அறிக்கை விடுத்தது.
போராளிகள் செல்போன்கள் மூலம் தாக்குதல்களைத் திட்டமிடுவதைத் தடுப்பதற்காகவே இத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சீனப் பிரதமர் வந்து இறங்கும் நுர்கான் ராணுவ விமானதளத்தில் இருந்து பிரதான பாதை வழியாக இஸ்லாமாபாத் வரையிலும், பின்னர், அதிபருடன் சந்திப்பு நடத்தக்கூடிய அவரது இல்லத்திலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சீனப் பிரதமர் லீ கி குயாங், இந்தியாவில் அரசுப் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று மதியம் பாகிஸ்தான் சென்று இரு தினங்கள் தங்குகின்றார். அங்கு முதலில் பாகிஸ்தானின் அதிபர் ஆசிப் அலி சர்தாரியை அவரது இல்லத்தில் சந்தித்து உரையாடுகிறார்.
செல்போன் சேவைகள் தடை செய்யப்படுவதால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாவதாகக் குறை கூறுகின்றனர். ஆயினும், செல்போன்கள் மூலம் வரும் அச்சுறுத்தல்களையும், சதித்திட்டங்களையும் தடுக்க வேண்டி, முக்கிய தினங்களிலும் தலைவர்கள் கூடும் நாட்களிலும் செல்போன் சேவையைத் தடை செய்ய பாகிஸ்தான் போலீசார் முடிவெடுத்துள்ளனர்.
கைதிகள் பரிமாற்றம், இந்தியா-தாய்லாந்து கூட்டு ஒப்பந்தம்-
போதை பொருள் கடத்தல், கொலை, கொள்ளை போன்றவற்றில் ஈடுபடுதல் போன்ற குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட 60 இந்தியக் கைதிகள் தாய்லாந்து சிறைகளில் உள்ளனர்.
இந்த குற்றங்களுக்கு தாய்லாந்து நாட்டில் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படுகின்றன. இந்நிலையில் இரு நாடுகளும் கைதிகளை பரிமாற்றும் ஒப்பந்தம் ஒன்றை நிறைவேற்ற முடிவு செய்துள்ளன.
இந்த ஒப்பந்தம் மூலம் அவரவர் நாட்டு கைதிகளை தங்களது சொந்த நாட்டிற்கு அழைத்து வரமுடியும். இவர்களில் குறைந்தகாலத் தண்டனை பெற்றவர்கள், தண்டனை காலத்தில் ஒரு வருடம் மீதம் வைத்திருப்பவர்கள் மட்டுமே இந்த ஒப்பந்தத்தின் மூலம் தங்களது சொந்த நாட்டுக்கு வர முடியும்.
எனவே, கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டவுடன் ஒவ்வொரு வழக்காக ஆராயப்பட்டு இந்த பரிவர்த்தனை நடைபெறும் என்று கூறப்படுகின்றது.
கைதிகளின் குற்றத்தைப் பொறுத்து மூன்று நிலைகளில் இது செயல்படுத்தப்படும் என்று தாய்லாந்து அரசு தெரிவித்துள்ளது.
தாய்லாந்தில் அடைக்கப்பட்டிருக்கும் இந்திய கைதிகளை, இந்தியத் தூதரக உறுப்பினர் ஒருவர், ஒரு மாதத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை பார்த்து விட்டு வருவதாகவும், கைதிகள் அனைவருடனும் தொடர்பு வைத்துள்ளதாகவும் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
 
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger