வரும் நொவம்பர் மாதம் கொழும்பில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள கொமன்வெல்த் தலைவர்களின் உச்சி மாநாட்டில், பிரித்தானிய மகாராணி பங்கேற்கமாட்டார் என்பது தொடர்பாக சிறிலங்காவுக்கு இன்னமும் முறைப்படி அறிவிக்கப்படவில்லை.
எனினும், பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து வெளியாகியுள்ள அறிவிப்பு சிறிலங்கா அரசாங்கத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் றொட்னி பெரேரா தகவல் வெளியிடுகையில்,
“எலிசபெத் மகாராணி மாநாட்டுக்கு வரமாட்டார் என்று அதிகாரபூர்வமாக இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை.
அவர் மாநாட்டில் பங்கேற்கமாட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அதனை உறுதிப்படுத்தும் முயற்சியில் லண்டனில் உள்ள சிறிலங்கா தூதரகம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது“ என்று கூறியுள்ளார்.
அதேவேளை, 1973ம் ஆண்டுக்குப் பின்னர் முதல் முறையாக, கொழும்பில் நடக்கும் கொமன்வெல்த் மாநாட்டில் எலிசபெத் மகாராணி பங்கேற்கமாட்டார் என்று பக்கிங்ஹாம் அரண்மனை உறுதிப்படுத்தியுள்ளது.
மகாராணிக்குப் பதிலாக இளவரசர் சாள்ஸ் இந்த மாநாட்டில் பங்கேற்பார் என்று பக்கிங்ஹாம் அரண்மனைப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
“87 வயதாகும் மகாராணி நீண்டதூரம் பயணம் செய்வதில் உள்ள சிரமங்களைக் கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சிறிலங்காவின் அரசியல் நிலைமைக்கும் மகாராணியின் இந்த முடிவுக்கும் எந்தத் தொடர்புமில்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
1971ம் ஆண்டில் நடந்த முதலாவது கொமன்வெல்த் மாநாட்டில் மகாராணி பங்கேற்காத போதிலும், 1973ம் ஆண்டு ஒட்டாவாவில் நடந்த இரண்டாவது மாநாட்டில் இருந்து, எல்லா மாநாடுகளிலும் அவர் பங்கேற்று வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment