ஏப்ரல் 23 ம் திகதி 1945 ம் ஆண்டு.. ரஸ்யப்படைகள் அடொல்ஃப் ஹிட்லர் பதுங்கியிருந்த பேர்லின் நகரத்தை சுற்றிலும் முற்றுகையிட்டு சூழ்ந்து கொள்கின்றன..
இரண்டாம் உலக மகா யுத்தத்தின் இறுதி நாட்கள் அவைகள்.. ஜேர்மனியின் சர்வாதிகாரி அடொல்ஃப் ஹிட்லரின் தோல்வி நிட்சயம் என்பது உறுதியாகி விட்டது.. ஒரு புறம் அமெரிக்க வான் படையினர் மேலிருந்து குண்டு மாரி பொழிந்து கொண்டிருக்க.. மறுபுறத்தில் பேர்லினை சுற்றி வளைத்திருந்த ரஸ்ய தரைப் படையினர் அந்த நகரத்தை தரை மட்டமாக்குவதில் தங்கள் முழுக் கவனத்தையும் செலுத்திக் கொண்டிருந்தார்கள்…
இரண்டாம் உலக மகா யுத்தத்தின் இறுதி நாட்கள் அவைகள்.. ஜேர்மனியின் சர்வாதிகாரி அடொல்ஃப் ஹிட்லரின் தோல்வி நிட்சயம் என்பது உறுதியாகி விட்டது.. ஒரு புறம் அமெரிக்க வான் படையினர் மேலிருந்து குண்டு மாரி பொழிந்து கொண்டிருக்க.. மறுபுறத்தில் பேர்லினை சுற்றி வளைத்திருந்த ரஸ்ய தரைப் படையினர் அந்த நகரத்தை தரை மட்டமாக்குவதில் தங்கள் முழுக் கவனத்தையும் செலுத்திக் கொண்டிருந்தார்கள்…
நகரமெங்கும் குண்டுகள் விழுந்து வெடிக்கும் ஓசை காதை பிளந்து கொண்டிருந்தது.. தங்கள் உயிரை பாதுகாத்துக் கொள்ள தங்கள் பிள்ளை குட்டிகளுடன் வீதிகளில் இறங்கி ஓடிக் கொண்டிருந்த பல குடும்பங்களை ரஸ்ய வீரர்களின் ரைபிள்களில் இருந்து சீறிப் பாயும் குண்டுகள் ஈவிரக்கமில்லாமல் கொன்று குவித்துக் கொண்டிருந்தன ..
பல அடுக்கு மாடி குடியிருப்புகளில்.. நாங்கள் குடும்பம் குட்டிகளுடன் வாழும் பொதுமக்கள் என்று தெரிவிப்பதற்காக வெள்ளைக் கொடிகளை பறக்க விட்டிருந்தார்கள்.. அவைகளுக்கு மதிப்பளித்து ஆரம்பத்தில் அந்த குடியிருப்புகளை தாக்காமல்தான் இருந்தார்கள் ரஸ்ய படையினர்… ஆனால் அவைகளுக்குள்ளும் அத்துமீறி நுழைந்த ஹிட்லரின் நாசிப் படையினர், அங்கிருந்தபடி ரஸ்யப் படையினரை தாக்கும் முயற்சியில் ஈடுப்பட்ட போது.. நிலைமைகள் தலை கீழாக மாறத் தொடங்கின.. பிறகென்ன வெள்ளைக் கொடியாவது மண்ணாங் கட்டியாவது என்ற நிலை ஏற்பட்டு வெள்ளைக் கொடி பறந்த வீடுகளையே குறி வைத்து தகர்த்தெறியத் தொடங்கின ரஸ்ய டாங்கிகள்..
பேர்லின் நகரமே பேரழிவின் உச்சத்தை சந்தித்துக் கொண்டிருந்தது…. வீதியெங்கும் இறைந்து கிடக்கும் கட்டடங்களின் இடிபாடுகளுக்குள் நசுங்கிக் கிடக்கும் மனித உடல்கள்.. தீப்பற்றியெரியும் உயர்ந்த கட்டங்களுக்குள் இருந்து எழும் இறுதி நேர அபயக் குரல்கள்.. வெளியில் சென்றாலும் உள்ளே இருந்தாலும் மரணம் நிட்சயமே என்பதை உணர்ந்து கொண்டதாலோ என்னவோ உள்ளேயே கருகிச் செத்துக் கொண்டிருந்தன பல மனித ஜீவன்கள்..
அந்த இறுதிப் போர்.. பேர்லின் நகரத்தில் ருத்திர தாண்டவம் ஆடிக் கொண்டிருந்தது.. நிலைமை மோசமடைவதை உணர்ந்து கொண்ட சில நாசி இராணுவ தளபதிகள் தாமாகவே முன் வந்து சரணடைய தொடங்கியிருந்தார்கள், சிலர் தங்களுக்கு புகலிடம் தருவதற்கு தயாராயிருந்த அஜன்டீனா, உருகுவாய், பிரேசில் போன்ற நாடுகளுக்கு தப்பியோடும் முயற்சியில் இறங்கியிருந்தார்கள்.. சில நாசி உயரதிகாரிகளை அவர்கள் பதுங்கியிருந்த இடங்களில் வைத்தே கைது செய்து கொண்டிருந்தது அமெரிக்க ரஸ்ய பிரான்ஸ் இங்கிலாந்து கூட்டுப் படைகள்..
இப்படியாக ஒருபுறம் போரின் இறுதிக் கட்டங்கள் இப்படி அரங்கேறிக் கொண்டிருக்க.. மறுபுறம் அமெரிக்காவின் சி.ஐ.ஏ பிரிவை சேர்ந்த Joint Intelligence Objectives Agency என்று அழைக்கப்படும் கூட்டுப் புலனாய்வு பிரிவு அமைப்பொன்றை களத்தில் இறக்கி விட்டிருந்தது அமெரிக்கா. அமெரிக்க இராணுவ கட்டமைப்புள் கட்டுப்படாத இந்த அமைப்புக்கு எந்த யுத்த சூழ்நிலையிலும் ஐரோப்பாவின் எந்த பகுதிக்கும் சென்று வர அனுமதி பாஸ் வழங்கப்பட்டிருந்தது.. மேலும் எவரையும் சுட்டுக் கொல்லவதற்கும் கைது செய்யவதற்கும் இவர்களுக்கு அனுமதி இருந்தது..
இந்த நடவடிக்கைக்கு ஒப்பரேசன் பேப்பர் கிளிப் (Operatin Paperclip) என்று பெயர் சூட்டி களத்தில் இறக்கி விட்ட இந்த குழுவுக்கு, அமெரிக்க அரசாங்கத்தால் வழங்கப்பட்டிருந்த இரகசிய கட்டளை.. எப்படியாவது ஜேர்மனியின் ராக்கட் விஞ்ஞானியான வார்னர் ஃபொன் பிறவுனையும் ((Wernher von Braun) அவருக்கு அடுத்த ஸ்தானத்தில் ராக்கெட் வடிமைப்பாளரும் ராக்கெட் தொழில் நுட்பத்திலும் கில்லாடிகளாக இருந்த ஆர்தர் ருடல்ஃப் (Arthur Rudolph) என்பவரையும் ஹெல்மூட் குருட்ருப் (Helmut Groettrup) என்பவரையும், விண்வெளி மருத்துவத் துறைக்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய ஹுபேர்ட்ஸ் ஸ்ரூகோல்ட் (Hubertus Strughold) என்ற விண்வெளி மருத்துவ விஞ்ஞானியையும் மற்றும் இவர்களைப் போன்ற திறமைகள் உள்ள பல நாசி விஞ்ஞானிகளையும் அவர்களது உதவியாளர்களையும் அமெரிக்காவுக்கு இரகசியமாக கடத்திக் கொண்டு வரவேண்டும் என்பதே அந்த கட்டளை..
அதேபோல ரஸ்யாவும் ஒப்பரேசன் ஒசோவாவியக்கிம் (Operation Osoaviakhim) என்று பெயர் சூட்டப்பட்ட ஒரு இராணுவ புலனாய்வு பிரிவினரை இந்த விஞ்ஞானிகள் வேட்டைக்காக களமிறக்கி விட்டிருந்தது.. அவர்களுக்கும் அமெரிக்கா வழங்கியிருந்த போன்று பல சலுக்கைகளை வழங்கி அந்த விஞ்ஞானிகளை எப்படியாவது இரகசியமாக ரஸ்யாவிற்குள் கடத்தி வந்து விடும்படி கட்டளையிட்டிருந்தது..
இதே நோக்கத்தை கொண்டிருந்த இங்கிலாந்தும் அதேபோல தனது பங்கிற்கு ஒரு கொமாண்டோ குழுவை இரகசியமாக களமிறக்கியிருந்தது நம்பர் 30 (No 30) என்று அழைக்கப்பட்ட இந்த குழுவினர் இரண்டாம் உலக மகா யுத்தத்தில் பல சாதனைகளை புரிந்தவர்கள்.. ஆகவே அவர்களே இந்த நாசி விஞ்ஞானிகளை இங்கிலாந்திற்கு இரகசியமாக கடத்திவர தகுதியானவர்கள் என்று தீர்மானித்தது இங்கிலாந்து..
எனவே அவர்களிடம் இந்த கடத்தல் பொறுப்பு ஒப்படைக்கப் பட்டது… இதற்கு தலைமை தாங்கிய கொமாண்டோ படை தலைவர்தான் பின்னாளில் ஜேம்ஸ் பொண்ட் (James Bond) என்ற உலக பிரசித்தி பெற்ற கதாபாத்திரத்தை உருவாக்கி எழுதியிருந்த தனது நாவல்கள் மூலம் பிரபலமடைந்த ஐயான் ஃப்ளேமிங் (Ian Fleming) என்ற பிரிட்டிஸ் கடற்படை அதிகாரி…
(இவரது நாவல்கள் வரிசையாக Dr. No.. From Russia with love.. Gold finger..Thunder ball என்று திரைப்படங்களாக வெளி வந்த போது அவைகள் உலகத் திரை அரங்குகளில் மாதக் கணக்கில் ஓடி சக்கை போடு போட்டன.. சுமார் 55 வருடங்களுக்கு முன் உருவாக்கப்பட்ட இந்த ஜேம்ஸ் பொண்ட் என்ற பாத்திரம்.. இன்றைய தலை முறையினரின் வரவேற்பையும் பெற்று இன்று வரை ஒரு சிரஞ்ஜீவியாக பல புதிய திரைப்படங்களிலும் உலா வந்து கொண்டு இருக்கிறது என்பது வேறு விசயம்)
இப்படியாக இந்த மூன்று நாடுகளும் ஒருவருக்கொருவர் போட்டியாக கடத்திச் செல்ல விரும்பிய இந்த விஞ்ஞானிகள் யார்?.. ஆம் இவர்கள் அனைவருமே இந்த இரண்டாம் உலக மகா யுத்தத்தில், மனித பேரழிவு ஆயுதங்களை ஹிட்லருக்காக உற்பத்தி செய்ததில் முன்னின்று செயல்பட்ட நாசிக் குற்றவாளிகள்.. ஆனால் இவர்கள் அமெரிக்காவிற்கும் ரஸ்யாவிற்கும் இங்கிலாந்திற்கும் எதற்காக தேவைப்பட்டார்கள்?..
ஆம் .. எதிர்காலத்தில் தங்களுக்கு வேறு ஒரு நாட்டுடன் ஒரு யுத்தம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டால்.. அதற்கான நவீன பேரழிவு ஆயுதங்களை உற்பத்தி செய்ய இவர்களது விஞ்ஞான பேரறிவு தேவைப்படும் என்ற காரணத்திற்காக இவர்களை எப்படியாவது தங்கள் நாட்டிற்கு கடத்தி செல்வதற்கு இந்த மூன்று நாடுகளும் ஒன்றுடன் ஒன்று போட்டியிட்டுக் கொண்டிருந்தன….
அது மட்டுமல்ல ஜேர்மனியில் பதுக்கி வைத்திருக்கும் இந்த விஞ்ஞானிகளின் கண்டு பிடிப்பான அந்த அதிசய பேரழிவு ஆயுதங்கள் மற்றும் நவீன விமான வடிவமைப்புகள் .. அதிசய மருந்து வகைகள்.. நவீன எலக்ரோனிக் உபகரணங்கள் என்று ஒரு பாரிய பட்டியலே இவர்களிடம் கொடுக்கப்பட்டு.. இவைகள் யாவற்றையும் எப்படியாவது தேடியெடுத்து தங்கள் தங்கள் நாட்டுக்குள் பத்திரமாக கொண்டு வந்து சேர்க்கும்படி இந்த மூன்று இரகசிய புலனாய்வு பிரிவினருக்கும் திட்டமாக கட்டளையிடப் பட்டிருந்தது…
அவர்கள் நினைத்தது வீண்போகவில்லை.. பிற்காலத்தில் தங்கள் நாட்டிற்கு வெற்றிகரமாக கடத்திச் செல்லப்பட்ட இந்த விஞ்ஞானிகளின் மாதிரி கண்டு பிடிப்புகளையும் கடத்திச் செல்லப்பட்ட விஞ்ஞானிகளின் தொழில் நுட்ப அறிவின் துணையுடனும் அவர்கள் அமைத்துக் கொடுத்த ராக்கெடின் துணையுடனும் தான் கண்டம் விட்டு கண்டம் பாயும் நியூகிளியர் ஏவுகணைகளை அமெரிக்காவும் ரஸ்யாவும் உற்பத்தி செய்து மற்ற நாடுகளை அச்சுறுத்த முடிந்தது..
இவர்களின் அறிவின் துணையுடன் தான் இந்த இரு நாடுகளும் தங்கள் விண்வெளி பயணங்களை வெற்றிகரமாக மேற் கொள்ள முடிந்தது.. குறிபாக அமெரிக்காவில் வார்னர் ஃபொன் பிரவுனும், ரஸ்யாவில் ஹெல்மூட் குருட்ருப்பும்தான் இந்த நாடுகளின் கற்பனையில் மட்டும் இருந்து வந்த அந்த விண்வெளி பயணத்தை நிஜத்தில் செயல்படுத்தி முழுஉலகையே ஆச்சரியத்தில் மூழ்க வைக்க முடிந்தது என்பது பலரும் அறிந்திராத உண்மையாகும்.. இன்றுவரை உலகில் பலரும் இது அமெரிக்க ரஸ்ய விஞ்ஞானிகளின் சாதனை என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்..
அமெரிக்காவுக்கு கடத்திச் செல்லப்பட்ட இந்த மாஜி நாசி விஞ்ஞானிகளின் கடந்த கால வரலாறுகள் யாவுமே சி.ஐ.ஏயின் ரொப் சீக்ரட் ஃபைலுக்குள் சென்று மறைந்தன.. இவர்களை பற்றி அமெரிக்கர்கள் எவருமே அறிந்து கொள்ளக் கூடாது என்ற முன்னெச்சரிக்கையுன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.. இந்த விஞ்ஞானிகளில் ராக்கட் டெக்னோனஜியில் முதன்மையாக இருந்த வார்னர் ஃபொன் பிறவுனினதும் அவருடனே கடத்திச் செல்லப்பட்ட மருத்துவ விஞ்ஞானியான ஹுபேர்ட்ஸ் ஸ்ரூகோல்ட்டினதும் கடந்த கால வரலாறுகள் பல அதிர்ச்சி தரும் சம்பவங்கள் நிறைந்தவை..
ஹிட்லரின் ஆட்சிக் காலத்தில் இந்த இருவரும் புரிந்த அத்துமீறிய மனித உரிமை மீறல்களும்.. அவர்கள் புரிந்த மனிதப் படுகொலைகளும் காலப் போக்கில் வெளிச்சத்துக்கு வந்தன.. அவற்றை இன்றுவரை அமெரிக்கா மூடி மறைத்துதான் வருகிறது.. பயங்கரங்கள் நிறைந்த அந்த இருவரின் கடந்த வரலாறுகள் மீண்டும் இங்கே ஒரு முறை அசை போடப் படுகிறது..
முதலில் தனது ராக்கெட் ஏவுகணை தயாரிப்புகளான V1 V2 மூலம் உலகை திகைப்பில் ஆழ்த்திய வார்னரின் ஃபொன் பிறவுனின் மனித அத்துமீறல் வரலாறு இது…
உலகின் அனைத்து துறைகளிலும் அதி சிறந்த விஞ்ஞானிகளை கொண்டிருந்த நாடுகளில் ஜேர்மனிதான் முதல் இடத்தை பிடித்திருக்கிறது.. குறிப்பாக இரண்டாம் உலக மகா யுத்தத்தில் அதி நவீன ஆயுதங்களை உற்பத்தி செய்தத்தில் முதல் இடத்தை பிடித்திருந்த நாடும் இதுவே.. துப்பாக்கிகளும் ரைபிள்களும் பீரங்கிகளும் விமானத் தாக்குதல்களும் மட்டுமே இடம்பெற்றுக் கொண்டிருந்த அந்த இரண்டாம் உலக மகா யுத்தத்தில் ஹிட்லரின் கட்டளைக்கிணங்க நாசி விஞ்ஞானிகளால் பல உயர்தர நவீன ஆயுதங்களும் விமானங்களும் உற்பத்தி செய்யப்பட்டன.. அவற்றில் முதலிடத்தை பிடித்திருந்தது வார்னர் ஃபொன் பிறவுனின் கண்டுபிடிப்பான V1 V2 என்ற குண்டுகளை சுமந்து சென்று குறிப்பிட்ட இடத்தை தாக்கி அழித்து சர்வ நாசம் செய்யும் ராக்கட் வகையை சேர்ந்த பேரழிவு ஆயுதங்கள்…. இந்த நவீன ஆயுதங்களின் உற்பத்திக்காக சுமார் 15 பில்லியன் டொச் மார்கை ஹிட்டலர் ஒதுக்கியிருந்தார் என்று கூறப்படுகிறது..
V1 V 2 என்ற இரண்டு ஏவுகணை ரகத்தை சேர்ந்த ராக்கெட்டுகளும் அந்த நாளைய போர் ஆயுதங்களுக்குள் ஒரு தனி வல்லமையை பெற்றிருந்தன.. V 1 என்ற விமான வடிவமைப்பில் இருந்த இந்த பறக்கும் குண்டு.. தரையிலிருந்து வானுக்கு ஒரு விமான மூலம் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து ஏவி விடப்படும் பட்சத்தில் அது வான் வெளியில் இருந்து ஆளில்லாமல் பறந்து சென்று குறித்த இடத்தில் விழுந்து வெடித்து.. அங்கே பலத்த உயிர் சேதத்தையும் பொருட் சேதத்தையும் உண்டு பண்ணும் வல்லமை கொண்டதாக இருந்தது..
இந்த தொழில் நுட்பத்தை கண்டு பிடித்தவர் வார்னர் ஃபொன் பிறவுன்.. இவருக்கு அடுத்த ஸ்தானதில் இருந்து இதை வடிவமைத்த டெக்னிக்கல் வித்தகரும் ரேடியோ ஒலி எக்ஸ்பேட்டுமான ஹெல்முட் குரூட்டொப் இந்த வி1 ஏவுகணையை குறித்த இலக்கில் விழும்படி செய்வதற்கு தனது கண்டு பிடிப்பான ரேடியோ அலை வரிசை ரெமோட் கொன்ரோல் முறை மூலம் ஜேர்மனியில் இருந்தபடி இயக்கினார்..
1944 ம் ஆண்டு யூன் மாதத்தின் நடுப் பகுதியில் .. விமானிகள் எதுவும் இல்லாத.. சுமார் நூற்றுக்கும் அதிகமான இந்த வி 1 ஏவுகணைகள் லண்டன் மாநரத்தில் தென்கிழக்குப் பகுதியில் விழுந்து வெடித்துச் சிதறியபோது கட்டடங்கள் அதிர்ந்து வெடித்து தரை மட்டமாகி தீப்பிடித்து ஜூவாலை விட்டு எரிந்தன….
தீப்பற்றிக் கொண்ட அந்த கட்டட இடிபாடுகளில் சிக்கிக் கொண்ட பலர் உயிருடன் எரிந்து சாம்பாலானார்கள் .. மேலும் பலர் எரிகாயங்களுடம் உடைந்த கட்டட இடிபாடுகளில் இருந்து அபயக்குரல் எழுப்பினார்கள்.. தெருக்கள் எங்கும் தீயணைக்கும் படையினர்.. உதவிக்காக கடுகெதியில் விரைந்து கொண்டிருந்த அம்புலன்ஸ் வண்டிகள் என்று அன்று அல்லோலகல்லோலபட்டது லண்டன் மாநகரம்..
இந்த அதிசய பறக்கும் பொருளை மற்றவர்கள் ஆச்சரியத்துடன் அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில்.. பிரித்தானிய போர் விமானங்கள் தாமதியாது வானுக்கு விரைந்து சென்று அவைகளை தாக்கியளிக்கும் முயற்சியில் ஈடுப்பட்டனர்.. அவர்கள் அந்த நூற்றுக் கணக்கான V1 களில் சிலவற்றை வானில் வைத்தே தாக்கியழிக்க முடிந்தது..
அதனை தொடர்ந்து வார்னரின் இரண்டாவது கண்டு பிடிப்பான V 2 லண்டனை நோக்கி ஏவப்பட்டது.. இது V1 போல் அல்லாது தரையிலிருந்தே விண்ணுக்கு லோஞ்சர் மூலம் தாவி.. வான் வெளியில் மணிக்கு சுமார் 1500 கிலோ மீட்டர் வேகத்தில் பறந்து குறித்த இலக்கை ஒரு சில நிமிடங்களில் அடைந்து விடும் வல்லமை கொண்டது.. மேலும் இது சுமார் 1000 கிலோ வெடி மருந்தை இலகுவாக சுமந்து செல்லவும் வல்லமை கொண்ட ஒரு இராட்சத ஏவு கணையாகவும் இருந்தது…
இந்த தாக்குதல்களில் இருந்து ஜேர்மனி உலகில் எந்த நாடுகளும் தயாரித்திராத மிக வல்லமை பொருந்திய பேரழி ஆயுதங்களை உற்பத்தி செய்கிறது என்ற விடயம் வெளிச்சத்துக்கு வந்தது.. இதை இப்படியே விட்டு வைத்தால் ஹிட்லரின் தனது எதிரி நாடுகள் அனைத்தையும் அழித்து சுடு காடாக்கி விடுவார் என்பதை உணர்ந்து கொண்ட அமெரிக்காவும் இங்கிலாந்து கூட்டு சேர்ந்து இந்த நாசகார சக்திகளை எப்படியாவது அழித்து முற்றுப் புள்ளி வைத்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு களத்தில் இறங்கின….
முதலில் இந்த V1,,V2 என்ற ஏவுகணைகளை தயாரிக்கும் தொழிற்சாலைகளையும்.. அவைகளை இரகசியமாக பதுக்கி வைக்கப் பட்டிருக்கும் இடங்களும் கண்டு பிடிக்கப்பட்டன.. அவைகளின் பிரதான உற்பத்தி தொழிற்சாலைகள் ஜேர்மனியின் வடமேற்கு பிரதேசத்தில் உள்ள பேனமுண்ட (Peenemuende) என்ற தீவில்தான் இயங்கிக் கொண்டிருக்கிறன என்பதை ஊர்ஜிதம் செய்து கொண்ட பின் கிடுகிடுவென்று காரியத்தில் இறங்கின..
1945 மே மாதம் இந்த பீனமுண்டா தீவு அமெரிக்க பிரிட்டிஸ் விமானப் படையினரால் முற்றாக தாக்கி அழிக்கப்பட்டது.. அங்கிருந்த ராக்கெட் தொழிற்சாலைகள் யாவும் நிர்மூலமாக்கப்பட்டன.. ஆனால் இந்த தாக்குதலை எதிர்பார்த்திருந்த ஜேர்மனி இந்த தொழிற்சாலையில் உற்பத்தியில் இருந்த ஆயிரக்கணக்கான வி2 ஏவுகணைகளை புகையிரத மூலம் நோர்ட்கவுசனில் (Nordhausen) உள்ள மிட்டல்பவு (MIttelbau) என்ற மலைக் குகைக்கு தாக்குதல் நடைபெறுவதற்கு முன்பே புத்திசாலித்தனமாக மாற்றியிருந்தது..
சுமார் இரண்டு கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த அண்டர் கிரவுண்ட் பாரிய குகையை அமைப்பதற்காக பல்லாயிரக் கணக்கான யூதக் கைதிகள் உபயோக்கிக்கப்பட்டார்கள்.. பின்னர் இந்த அபாயகரமான ஏவுகணை தயாரிப்புகளுக்கும் இவர்களையே உபயோகித்தது ஹிட்லரின் அந்த நாசி ஜேர்மனி.. இந்த யூதக் கைதிகளுக்காக மிட்டல்பவு டோரா (Mittelbau-Dora) என்ற தடுப்பு முகாம் விசேசமாக அமைக்கப்பட்டது.. அங்கு இந்த யூதர்கள் அனுபவித்த கொடுமைகளும்.. அவர்களின் பரிதாப மரணங்களும்.. அதில் வார்னர் ஃபொன் பிறவுனின் பங்கும் எனது அடுத்த பாகத்தில் தொடர்கிறது.. (தொடரும்)
அன்புடன்
சித்திறெஜினா
சித்திறெஜினா
Post a Comment