இந்தியாவின் பீஹார் மாநிலத்தில் கழிப்பறை வசதிகளின்றி, காலைக்கடன்களை கழிக்க மறைவான வெளியிடங்களுக்குச் செல்வதாலேயே பெரும்பாலான பெண்களும் சிறுமியரும் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாவதாக காவல்துறையினரும் சமூக ஆர்வலர்களும் தெரி்விக்கின்றனர்.
இந்தியாவின் வறிய மாநிலங்களில் ஒன்றான பீஹார் மாநிலத்தில் 85 வீதமான கிராமப்புற வீடுகளில் கழிப்பறை வசதிகள் கிடையாது. இதனால் அங்குள்ள மக்கள், இயற்கைக் கடன்களைக் கழிக்க மறைவான காட்டுப் புதர்களையும் ஆற்றோரங்களையும் ஏனைய திறந்தவெளிகளையுமே தேடிச்செல்ல வேண்டியிருக்கிறது.
இயற்கைக் கடன்களைக் கழிப்பதற்காக வெளியிடங்களுக்குச் செல்லும்போது பல பெண்களும் சிறுமியரும் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டச் சம்பவங்கள் அண்மைய காலங்களில் பீஹாரில் நடந்துள்ளன.பீஹாரில் கடந்த ஆண்டில் மட்டும் 870-க்கும் அதிகமான பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இம்மாதம் 5-ம் திகதி, ஜெஹானாபாத் மாவட்டத்தில் 11- வயதுச் சிறுமி இரவு நேரத்தில் இயற்கைக் கடன் கழிப்பதற்காகச் சென்றபோது பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டாள்.
ஏப்ரல் மாதம் 28-ம் திகதி, தலைநகர் பாட்னாவிலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவிலுள்ள கலப்பூர் என்ற கிராமத்தில் திறந்தவெளிப் பகுதியொன்றுக்குச் சென்ற இளம்யுவதி கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
ஏப்ரல் 24-ம் திகதி ஷீக்புரா மாவட்டத்தில் சௌன்னியா என்ற கிராமத்தில் இன்னொரு சிறுமி இதேவிதமாக பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கபட்டுள்ளாள்.
இப்படியான சம்பவங்கள் பீஹாரில் ஒவ்வொரு மாதமும் நடப்பதாக காவல்துறை மூத்த அதிகாரி அரவிந்த பாண்டே பிபிசியிடம் தெரிவித்தார்.
50 கோடிப் பேர்
இந்தியாவில் சுமார் 50 கோடிப் பேருக்கு அடிப்படை சுகாதார வசதிகள் கிடையாது. இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு எந்தவிதமான கழிப்பறை வசதிகளும் இல்லை.
டெல்லியில் கடந்த ஆண்டில் ஒடும்பேருந்தில் பலரால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் எதிர்ப்பலைகளை உருவாக்கிய நிலையில், இந்தியாவில் பாலியல் கொடுமைகள் தொடர்பான பிரச்சனைகள் ஆழமாக ஆராயப்படுகின்றன.
அதன் தொடர்ச்சியாக, பாலியல் குற்றம் புரிவோருக்கு மரண தண்டனை உட்பட கடுமையான தண்டனைகளை அறிவித்து கடந்த மார்ச் மாதம் புதிய சட்டமொன்றும் இந்தியாவில் கொண்டுவரப்பட்டது
Post a Comment