விமானத்தை தகர்ப்பதாக மிரட்டிய பிரிட்டானிய பாகிஸ்தானியர்களுக்கு ஆகஸ்ட் வரை காவல் / மியான்மரில் முஸ்லீம்கள் அதிக குழந்தைகள் பெற கட்டுப்பாடு: ஆங் சாங் சூகி கண்டனம் / எரிமலை குமுறியதையடுத்து அர்ஜென்டினாவும் சிலியும் அபாய எச்சரிக்கை

விமானத்தை தகர்ப்பதாக மிரட்டிய பிரிட்டானிய பாகிஸ்தானியர்களுக்கு ஆகஸ்ட் வரை காவல்-
பாகிஸ்தான் லாகூரிலிருந்து இங்கிலாந்து மான்செஸ்டருக்கு புறப்பட்ட விமானத்தை தகர்த்து விடுவதாக கடந்த வெள்ளியன்று பிரிட்டன் வாழ் இரு பாகிஸ்தானியர்கள் மிரட்டினர்.
இதையடுத்து பிரிட்டன் போர் விமானங்களால் நடுவானிலேயே இடைமறிக்கப்பட்ட அந்த பாகிஸ்தான் விமானம், ஸ்டேன்ஸ்டெட் விமானத்தளத்தில் அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டது.
பின்னர் அங்கு தயாராக இருந்த போலீசார், அதிரடியாக உள்ளே புகுந்து அந்த இரு பாகிஸ்தானியர்களான தய்யாப் சுபானி 30, முகமது சப்தர் 41 ஆகிய இருவரை கைது செய்தனர்.
அவர்கள் மீது கெம்ஸ்போர்டு கிரவுன் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த விசாரணையில் அவர்களை ஆகஸ்டு 5 வரை காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
கார் ஓட்டுனர் மற்றும் விடுதி வேலையாளான அவர்கள் பொய்யாக விமானத்தை தகர்த்து விடுவதாக மிரட்டியதால் அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
மியான்மரில் முஸ்லீம்கள் அதிக குழந்தைகள் பெற கட்டுப்பாடு: ஆங் சாங் சூகி கண்டனம்-
மியான்மரின் மேற்கு பகுதியில் வங்காளதேச எல்லையில் ராக்கின் மாகாணம் உள்ளது. இது ரோகியா முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகும்.
இந்த பகுதிகளில் முஸ்லீம்களுக்கும், புத்த மதத்தினருக்கும் கடந்த சில ஆண்டுகளாக நடந்து வரும் வன்முறைகளில் நூற்றுக்கணக்கான முஸ்லீம்கள் கொல்லப்பட்டுள்ளனர். 1 லட்சத்து 25 ஆயிரம் முஸ்லீம்கள் வீடுகளை இழந்தனர். உலகிலேயே அதிக அளவில் தாக்குதலுக்கு உள்ளானது ரோகியா முஸ்லீம் இனம் என்று கூறப்படுகிறது.
கலவரம் குறித்து விசாரணை நடத்த அரசு ஒரு குழுவை அமைத்தது. அக்குழு நடத்திய விசாரணையில் முஸ்லீம்களின் மக்கள் தொகை பெருக்கமே மதக்கலவரம் ஏற்பட காரணம் என தெரியவந்தது.
இந்த மாகாணத்தில், புத்தமதத்தினரைவிட முஸ்லீம்களின் மக்கள் தொகை 10 மடங்கு அதிகம் இருப்பதால் தான் இந்த கலவரம் உருவானது என்று அக்குழு தெரிவித்தது.
எனவே, மியான்மரில் முஸ்லீம்களுக்கும் குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை அமல்படுத்த அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி மியான்மரில் ராகின் மாகாண முஸ்லீம்கள் குடும்பத்துக்கு தலா 2 குழந்தைகள் மட்டுமே பெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், முஸ்லீம்களின் பலதார திருமணத்துக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய திட்டத்துக்கு மியான்மர் எதிர்க்கட்சித் தலைவர் ஆங் சாங் சூகி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-
முஸ்லீம் தம்பதியர் இரு குழந்தைதான் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாட்டு மனித உரிமைகளுக்கு எதிரானது, பாரபட்சமானது.
மியான்மரின் நீதித்துறையில் வெளிப்படைத்தன்மை இல்லை. நிர்வாகத்தில் உள்ளவர்களின் தலையீடு அதிகரித்து வருகிறது. நீதித்துறை நம்பகத்தன்மை பெற சுதந்திரமாக செயல்பட வேண்டும்.
உலக அளவில் மியான்மருக்கு, அனைத்து இனங்களையும் உள்ளடக்கிய ஒரு பொது அடையாளத்தை உருவாக்க வேண்டும். புத்த மதத்தினர், கிறிஸ்துவர்கள், இந்துக்கள் மற்றும் அனைத்து மதத்தினரும் தேசிய அடையாளத்தில் பங்குவகிக்க வேண்டும்.
அனைத்து விதமான பாகுபாடுகளையும் நாம் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். இரு இனங்களுக்கிடையே நடக்கும் வன்முறையை நிறுத்த வேண்டும். வன்முறை நடைபெற காரணமானவர்களை நீதியின் முன் நறுத்த வேண்டும்.
எரிமலை குமுறியதையடுத்து அர்ஜென்டினாவும் சிலியும் அபாய எச்சரிக்கை-
எல்லைப் பகுதியில் உள்ள ஹப்பஹியு எரிமலை குமுறியதை அடுத்து, அங்குள்ள தமது நாட்டு மக்களை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அர்ஜென்டினாவும், சிலியும் அபாய எச்சரிக்கையுடனான அறிவித்தல் விடுத்துள்ளன. சுமார் மூவாயிரம் பேரை அங்கிருந்து வெளியேறுமாறு அதிகாரிகள் பணிப்புரை விடுத்துள்ளனர்.
எரிமலை அமைந்துள்ள இருநாட்டிற்கும் இடையிலான எல்லைப் பகுதியில் ஆயிரக்கணக்கான நில அதிர்வுகளும் உணரப்பட்டுள்ளன.
இந்நிலையில், குறித்த பிராந்தியத்தில் மழை பெய்துவருவதால் மக்கள் அங்கிருந்து வெளியேறுவதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
அண்டிஸ் மலைத்தொடரில் அமைந்துள்ள இந்த எரிமலையை அண்மித்த வான்பரப்பில் விமானங்கள் பயணிப்பதைத் தவிர்த்துக்கொள்ளுமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger