-முஹம்மட் அர்ஷாத், காத்தான்குடி-
பைபிளின் பழைய ஏற்பாட்டில் நிறைந்து காணப்படுகின்ற ஓரிறைக் கொள்கையை வலியுறுத்துகின்ற போதனைகளை நோக்குவதற்கு முன்னர் பழைய ஏற்பாட்டை -நியாயப்பிரமாணத்தை- பின்பற்றுவதன் அவசியம் குறித்து இறைத்தூதர் இயேசு (அலை) அவர்கள் என்ன கூறியுள்ளதாக பைபிள் விபரிக்கின்றது என நோக்குவோம்.
“நியாயப் பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள். அழிக்கிறதற்கு அல்ல. நிறைவேற்றுகிறதற்கே வந்தேன். வானமும் பூமியும் ஒழிந்து போனாலும், நியாயப்பிரமாணத்திலுள்ளதையெல்லாம் நிறைவேறுமளவும், அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்து போகாது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆகையால், இந்தக் கற்பனைகள் எல்லாவற்றிலும்சிறிதானதொன்றையாகிலும் மீறி, அவ்விதமாய் மனுஷருக்குப் போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் சிறியவன்என்னப்படுவான். இவைகளைக் கைக் கொண்டு போதிக்கிறவனோ, பரலோகராஜ்யத்தில் பெரியவன் எனப்படுவான். வேதபாரகர் பரிசேயர் என்பவர்களுடடைய நீதியிலும் உங்கள் நீதி அதிகமாயிராவிட்டால், பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.” (மத்தேயு 5:17-20)
பழைய ஏற்பாட்டை பின்பற்றுவதன் அவசியம் குறித்து மற்றொரு இடத்தில் பைபிளின் மத்தேயு அதிகாரம் பின்வருமாறு விபரிக்கின்றது.
“பின்பு, இயேசு ஜனங்களையும் தம்முடைய சீஷர்களையும் நோக்கி: வேதபாரகரும் பரிசேயரும் மோசேயினுடைய ஆசனத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள். ஆகையால், நீங்கள் கைக்கொள்ளும்படி அவர்கள் உங்களுக்குச் சொல்லுகிறயாவையும் கைக்கொண்டு செய்யுங்கள். அவர்கள் செய்கையின்படியோ செய்யாதிருங்கள். ஏனெனில், அவர்கள் சொல்லுகிறார்கள், சொல்லியும் செய்யாதிருக்கிறார்கள்.” – மத்தேயு – 23:1-3
பழைய ஏற்பாட்டை பின்பற்றுவதன் அவசியம் குறித்து இயேசு வலியுறுத்திக் கூறியதாக பைபிளே விபரிக்கின்றது. இனி விடயத்திற்கு வருவோம்.
ஆதியும் அந்தமுமற்ற கர்த்தர்
தனக்கு முன்னும், பின்னும் தன்னைத்தவிர வேறு கடவுள்கள் கிடையாது என்று அகிலங்களின் அதிபதியாக கர்த்தர் கூறுகின்றார். தீர்க்கத்தரிசிகளும் இந்த ஓரிறைக் கொள்கையையே போதித்தார்கள். இது குறித்து ஏசாயா அதிகாரம் பின்வருமாறு குறிப்பிடுகின்றது.
“எனக்கு முன் ஏற்பட்ட தேவன் இல்லை. எனக்குப் பின் இருப்பதுமில்லை. நான், நானே கர்த்தர். என்னையல்லாமல் ரட்சகர் இல்லை. நானே அறிவித்து இரட்சித்து, விளங்கப் பண்ணினேன். உங்களில் இப்படிச் செய்யத்தக்க அந்நிய தேவன் இல்லை. நானே என்பதற்கு நீங்கள் எனக்குச் சாட்சிகள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.“ (ஏசாயா 43:10-12)
அல்லாஹ்வைத் தவிர வணக்கத்துக்கு தகுதியான கடவுள் கிடையாது என்பதை இறைமறை இவ்வாறு கூறிக்காட்டுகின்றது.
‘அளவற்ற அருளாளனைத் தவிர வணங்கப்படும் கடவுள்களை நாம் ஆக்கியுள்ளோமா?’ என்று உமக்கு முன் நாம் அனுப்பிய தூதர்களிடம் கேட்பீராக! (திருக்குர்ஆன் 43:45)
ஆதியும், அந்தமுமற்ற கடவுளைத் தவிர வணங்கி வழிபடத் தகுதியான வேறெந்த அந்நிய தேவர்களும் கிடையாது என்று இறைத்தூதர் இயேசு (அலை) அவர்கள் போதித்ததை பைபிளும் உறுதிப்படுத்துகின்றது.
வானங்கள், பூமியின் அதிபதியாகிய ஒரே இறைவன்
கிறிஸ்த்தவ அன்பர்களால் மோசே (அலை) அவர்கள் போதித்தாக நம்பப்படுகின்ற உபாகமம் நூல் கர்த்தராகிய ஒரே இறைவனைத் தவிர வேறு இறைவன் கிடையவே கிடையாது என்றும், வானங்களுக்கும், பூமிக்கும் அவனே ஒரே இறைவன் என்றும் கூறுகின்றது.
“ஆகையால் உயர வானத்திலும், தாழ பூமியிலும் கர்த்தரே தேவன். அவரைத் தவிர ஒருவரும் இல்லை என்பதை நீ இந்நாளில் அறிந்து, உன் மனதிலே சிந்தித்து…” (உபகாமம் 4:39)
மகத்துவமிக்க இறைவனே வானங்கள் மற்றும் பூமியின் அதிபதி என்பதை இறைவேதம் திருக்குர்ஆன் விபரிக்கையில்,
(அவன்) வானங்கள், பூமி மற்றும் அவற்றுக்கு இடைப்பட்டவற்றுக்கு இறைவன். கிழக்குகளுக்கும் இறைவன்.” (திருக்குர்ஆன் 37:4,5)
என்று கூறிக் காட்டுகின்றது
வானங்கள், பூமி அவற்றுக்கிடைப்பட்ட சகலவற்றுக்கும் சர்வ வல்லமை பொருந்திய கர்த்தர் ஒருவரே இறைவன் என்கின்ற ஓரிறைக் கொள்கையை பைபிளும் உறுதி செய்கின்றது
முந்தினவரும், பிந்தினவருமான கர்த்தர்
கிறிஸ்த்தவர்களால் இறைவேதமாக நம்பப்படுகின்ற பைபிளின் பழைய ஏற்பாடு ஓரிறைக் கொள்கை குறித்து எடுத்துரைக்கையில், முந்தினவரும், பிந்தினவருமான கர்த்தரை தவிர வேறு தேவர்கள் கிடையாது என்றும், இஸ்ரவேலின் கடவுளும் அந்த ஏக இறைவன்தான் என்றும் குறிப்பிடுகின்றது.
“நான் முந்தினவரும், நான் பிந்தினவருந்தானே, என்னைத் தவிர தேவன் இல்லையென்று இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தரும் சேனைகளின் கர்த்தராகிய அவனுடைய மீட்பரும் சொல்லுகிறார். (ஏசாயா 44:6)
முந்தினவரும், பிந்தினவரும் அகிலங்களின் அதிபதியுமான கர்த்தரின் போதனைகளை பின்பற்றிய மக்கள், பரிசுத்த கடவுள் ஒருவரை மாத்திரம் வணங்கி வழிபட்டு வந்தததையும், இஸ்ரவேல் சமுதாய அந்நன்மக்களை கொடுமைப்படுத்தி வந்த பர்வோன் மன்னன் கர்த்தரின் தண்டனைக்கு உட்படும் போது, இஸ்ரவேல் மக்கள் நம்பிய ஈடுஇணையற்ற ஏகஇறைவனை நம்புவதாக கூறியதையும் உலகப்பொதுமறை திருக்குர்ஆன் பின்வருமாறு கூறிக் காட்டுகின்றது.
“இஸ்ராயீலின் மக்களைக் கடல் கடக்கச் செய்தோம். ஃபிர்அவ்னும், அவனது படையினரும் அக்கிரமமாகவும், அநியாயமாகவும் அவர்களைப் பின் தொடர்ந்தனர். முடிவில் அவன் மூழ்கும் போது ”இஸ்ராயீலின் மக்கள் நம்பியவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை என நம்புகிறேன்; நான் ‘முஸ்லிம்’’ என்று கூறினான்.” திருக்குர்ஆன் 10:90
ஆதியும், அந்தமுமற்ற சர்வ வல்லமை பொருந்திய கர்த்தர் ஒருவர் மாத்திரம் வணங்கி வழிபடத் தகுதியானவர் என்கின்ற ஏகத்துவ கொள்கையையே பைபிளின் பழைய ஏற்பாடு போதிக்கின்றது.
வானங்கள், பூமியை சிருஷ்டித்த கர்த்தர்
வானங்களையும், பூமியையும் சிருஷ்டித்த சர்வ வல்லமை மிக்க ஏகனான கர்த்தர், ‘நானே கர்த்தர் என்னைத் தவிர கர்த்தர் கிடையாது’ என்று கூறியதாக பழைய ஏற்பாட்டு நூலான ஏசாயா குறிப்பிடுகின்றது.
“வானங்களைச் சிருஷ்டித்துப் பூமியையும் வெறுமையாயிருக்கச் சிருஷ்டியாமல் அதைக் குடியிருப்புக்காகச் செய்து படைத்து, அதை உருவேற்படுத்தின தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: நானே கர்த்தர், வேறொருவர் இல்லை.” (ஏசாயா 45:18)
இதனை திருமறைக் குர்ஆன் பின்வருமாறு எடுத்தியம்புகின்றது.
‘வானங்களுக்கும், பூமிக்கும் இறைவன் யார்?’ என்று கேட்டு, அல்லாஹ் என்று கூறுவீராக! (திருக்குர்ஆன் 13:16)
மேலும், வானங்கள் பூமியை சிருஷ்டித்த கர்த்தரிடமே அவற்றின் அதிகாரம் உள்ளது என்பதை திருமறைக்குர்ஆன் பின்வருமாறு உறுதி செய்கின்றது.
“அவனுக்கே வானங்கள் மற்றும் பூமியின் அதிகாரம் உள்ளது. அவன் பிள்ளையை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அதிகாரத்தில் அவனுக்கு எந்தப் பங்காளியும் இல்லை. அவன் ஒவ்வொரு பொருளையும் படைத்தான். அதைத் திட்டமிட்டு அமைத்தான்.” (திருக்குர்ஆன் 25:2)
வானங்களையும், பூமியையும் சிருஷ்டித்து அதன் அதிகாரத்தை தன்வசம் வைத்திருக்கும் நித்திய ஜீவனான கர்த்தருக்கு அதிகாரத்தில் யாரையும், யாதையும் இணையாக்க கூடாது என்கின்ற ஓரிறைக் கொள்கையையே பைபிளின் பழைய ஏற்பாடு போதிக்கின்றது.
இயேசுவின் போதனைகள் என்று நம்பப்படுகின்ற பைபிளின் புதிய ஏற்பாடும், இயேசு பின்பற்றுமாறு வலியுறுத்திக் கூறிய பழைய ஏற்பாடும் இயேசு மாத்திரமல்ல இயேசுவுக்கு முன் சென்ற தீர்க்கதரிசிகளும் ஓரிறைக் கொள்கையை போதித்த முஸ்லிம்களாகவே இருந்தார்கள் என்பதை நிரூபித்து நிற்கின்றன.
Post a Comment