பொதுபலசேனா அமைப்பினரால் தாக்கப்பட்டதாக தேரர் குற்றச்சாட்டு / கண்டியில் பிக்குகள் ஆர்ப்பாட்டம்


 

பொதுபலசேனா அமைப்பினரால் தாக்கப்பட்டதாக தேரர் குற்றச்சாட்டு- 
பௌத்த பிக்கு ஒருவர் தனது கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை மீறும் வகையில் பொதுபலசேனா அமைப்பினர் தன் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
இதுகுறித்து வணக்கத்திற்குரிய மாலவ்வே கல்யாண தம்ம தேரர் தெரிவிக்கையில், கடந்த புதனன்று தும்முல்லையில் அமைந்துள்ள பொதுபலசேனாவின் தலைமையகத்திற்கு வெளியே அமைதி வழிப் போராட்டமொன்றை மேற்கொள்ள நான் முயன்ற போது பொதுபலசேனா உறுப்பினர்கள் என்னை இழிவுபடுத்தும் வகையில் தூஷித்ததுடன், என் மீது தாக்குதலை நடத்தினர்.
அநாதை சிறுவர் சிலரை எனது கவனிப்பின் கீழ் பராமரிப்பதற்கேற்ற வகையில் வீடொன்றை வழங்குமாறு நான் பொதுபலசேனாவிடம் விடுத்திருந்த கோரிக்கைக்கு பலனேதும் கிட்டாத நிலையிலேயே அந்த அமைதிவழி போராட்டத்தை நான் மேற்கொள்ள முயற்சித்தேன்.
கலப்பலுவாவவில் நான் ஏற்கெனவே வாடகைக்கு எடுத்திருந்த வீட்டை திருப்பி ஒப்படைக்க வேண்டியிருந்ததால் குறித்த அநாதை சிறுவர்கள் நட்டாற்றில் விடப்பட்டிருந்த நிலையில் நான் பொது பலசேனாவிடம் இடமொன்றை தந்துதவுமாறு கோரியிருந்ததுடன், ஆரம்பத்தில் அதனிடமிருந்து சிறிதளவு சாதகமான பதிலொன்று கிடைத்திருந்தது.
ஆயினும், அதன் பின்னர் அதுகுறித்து பொதுபலசேனா சிரத்தையெதுவும் எடுக்காமல் அப்படியே இருந்து விட்டதும் என்றார். மேற்படி கோரிக்கை நிராகரிக்கப்பட்டமைப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக குறித்த தேரரினால் பொதுபலசேனா தலைமைக் காரியாலயத்திற்கு வெளியே நடத்தப்பட்ட அமைதிப் பேரணியை பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் வணக்கத்திற்குரிய கலகொட அத்த ஞானசார தேரர் தடுத்து நிறுத்தியதுடன் தன்னைத் தூஷித்து தன்னைத் தாக்கியதாகவும்,
சுமார் பத்து நிமிடங்கள் வரை தான் மூச்சையிழந்த நிலையில் கிடந்ததாகவும், அதன் பின்னர் அங்கு விரைந்து வந்த பொலிஸாரினால் தான் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் பொலிஸில் முறைப்பாடு செய்ததாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.
கண்டியில் பிக்குகள் ஆர்ப்பாட்டம்- 
தீக்குளித்த போவத்தை இந்திர ரத்ன பிக்குவின் கோரிக்கையை நிறைவேற்றுமாறு கண்டியில் பிக்குகள் ஆர்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்தனர்.
கண்டி ஜோர்ஜ் டி சில்வா மேற்தளப் பூங்காவில் இடம் பெற்ற இவ்வார்ப்பாட்டத்தில் அவர்கள் பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
பௌத்த தர்மத்திற்காகவும் நாட்டு நலனுக்காகவும் தன்னுயிரைத் தியாகம் செய்த மேற்படி தேரரின் கோரிக்கைகள்அபிலாசைகள் நிறைவேற்றப்பட வேண்டும்.
பௌத்த தர்மத்தை பிரதி பலிக்கும் வகையிலும் அதற்கு ஏற்றவாறும் சட்ட மூலங்கள் பாராளுமன்றத்தில் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும். மத மாற்றத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சர்வமத அமைப்புக்கள் ஒழிக்கப்பட வேண்டும். மாடுவெட்டுதல் முற்றாகத் தடை செய்யப்பட வேண்டும். இவை உட்பட இன்னும் பல தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger