சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய பணிகள் ஆரம்பம் / சப்புகஸ்கந்தவை அரேபியாவிற்கு விற்பனை செய்ய சூழ்ச்சி / கருக்கலைப்பு வில்லைகள் மீட்பு / வீடு உடைத்து கொள்ளை, பெண் உட்பட மூவர் கைது

 

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய பணிகள் ஆரம்பம்-
கொழும்பு, சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின், சுத்திகரிப்பு நடவடிக்கைகளை இன்றுமாலை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
கொழும்பு துறைமுகத்தில் இருந்து சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் வரை மசகு எண்ணெயை கொண்டு செல்லும் குழாயில், அவசர திருத்த வேலைகள் காரணமாக சுத்திகரிப்பு நடவடிக்கைகளுக்கு தேவையான மசகு எண்ணெயை விநியோகிப்பதில் தடங்கள் ஏற்பட்டது.
எது எவ்வாறிருப்பினும் நேற்றையதினம் மாலை குறித்த குழாயின் இறுதிக் கட்ட திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக பெற்றோலிய கூட்டுத்தாபன பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இதன்படி இன்று மாலை சுத்திகரிப்புக்குத் தேவையான மசகு எண்ணெயை வழங்க முடியும் என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
சப்புகஸ்கந்தவை அரேபியாவிற்கு விற்பனை செய்ய சூழ்ச்சி-
கொழும்பு, சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அரேபிய நிறுவனமான ‘அரம்கோ’ விற்கு விற்பனை செய்ய சூழ்ச்சிகள் இடம்பெற்றுவருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் அக் கட்சியின் பொதுச் செயலாளருமான திஸ்ஸ அத்தநாயக்க இன்று ஊடகத்திற்கு தகவல் வெளியிட்டுள்ளார்.
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அரேபிய நிறுவனமான ‘அரம்கோ’ விற்கு விற்பனை செய்வதற்கு தற்போது சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தற்போது அங்கு அனைத்து விதமான வேலைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனை மூடி மறைப்பதற்கு அரசாங்கம் பல காரணங்களைத் தெரிவித்து வருகின்றது.
ஆனால் இதன் பின்னணியில் விற்பனைக்கான சூழ்ச்சிகள் இடம்பெற்று வருகின்றன என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருக்கலைப்பு வில்லைகள் மீட்பு-
5 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியுடைய கருக்கலைப்பு வில்லைகள் சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சட்டவிரோதமாக நாட்டிற்குக் கொண்டு வரப்பட்ட 2,800 கருக்கலைப்பு வில்லைகளுடன் சந்தேநபர் ஒருவர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி குறிப்பிட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்ட கருக்கலைப்பு வில்லைகள் அரச உடைமையாக்கப்பட்டதன் பின்னர் சந்தேகநபர் விடுவிக்கப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
வீடு உடைத்து கொள்ளை, பெண் உட்பட மூவர் கைது-
மட்டக்களப்பு, சேத்துக்குடா பிரதேசத்தில் வீடொன்றை உடைத்து பொருட்களை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டிருந்த பெண் சந்தேகநபர் ஒருவரிடம் பெற்றுக் கொண்ட தகவல்களுக்கு அமைய ஏனைய சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்களிடமிருந்த தங்க காப்பு உள்ளிட்ட தங்க நகைகள் பல கைப்பற்றப்பட்டுள்ளன. சந்கேநபர்கள் திருப்பெருந்துறை மற்றும் இருதயபுரம் பிரதேசத்தில் வசித்து வருபவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இவர்கள் இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
 
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger