மலேசியத் தேர்தலில் நடந்ததாகக் கூறப்படும் மோசடிக்கு எதிராக கடுமையான ஒரு போராட்டத்தை முன்னின்று நடத்தப்போவதாக, தோல்வியடைந்த எதிர்க்கட்சித்தலைவர் அன்வார் இப்ரஹீம் கூறுகிறார்.
ஞாயிற்றுக்கிழமை நடந்த மலேசிய நாடாளுமன்றத் தேர்தல்களில் ஆளும்கட்சித் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது.
எதிர்க்கட்சி தேர்தலில் தோற்றால், தான் அரசியலை விட்டே ஒதுங்கிவிடப் போவதாக முன்னர் அறிவித்திருந்த அன்வார் இப்ரஹீம், இப்போதைக்கு அந்த முடிவைத் தான் ஒத்திப்போட்டிருப்பதாகக் கூறுகிறார்.
நாடாளுமன்றத்தேர்தலில், பதிவான வாக்குகளில் பெரும்பகுதி வாக்குகளை எதிர்க்கட்சி வென்றிருந்தாலும், 89 நாடாளுமன்ற இடங்களையே அதனால் பிடிக்க முடிந்தது. ஆளும் கூட்டணிக்கு 133 இடங்கள் கிடைத்தன.
தேர்தலில் மோசடி நடந்ததாகக் கூறப்படுவதை மறுக்கு அரசு, எதிர்க்கட்சியினர் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாகக் கூறுகிறது.
மலேசியத் தேர்தல்களில் முறைகேடு நடந்திருப்பதாக, பெர்சி என்ற மலேசியத் தேர்தல் கண்காணிப்பு அமைப்பும் கூறியிருக்கிறது.
வெளிநாட்டிலிருந்து வந்த குடியேறிகள் பலர் பல்வேறு தேர்தல் வாக்குச் சாவடிகளில் வாக்களித்ததை தங்களால் காண முடிந்ததாக அது கூறியிருக்கிறது
வாக்குப் பதிவின் போது வாக்காளர்கள் கைவிரல்களில் வைக்கப்படும் அழிக்கமுடியாத மையும் எளிதில் அழிக்கமுடிவதாக இருந்ததை சில மலேசிய வாக்காளர்கள் பிபிசியிடம் காட்டினர்கள்.
ஆனால் இந்த முறைகேடுகள் எந்த அளவிற்கு வாக்குப்பதிவின் முடிவுகளை பாதித்திருக்கும் என்று தெளிவாகவில்லை.
இது குறித்து மேலும் சாட்சியங்களையும் ஆதாரங்களையும் திரட்ட, ஆர்வலர்கள் ஒரு பொது விசாரணையை உருவாக்கிவருகிறார்கள் என்று பிபிசியின் கோலாலம்பூர் செய்தியாளர் கூறுகிறார்
Post a Comment