தமிழகத்தில் அண்மையில் மரக்காணம் பகுதியில் நடந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் நீதிவிசாரணை வேண்டுமென்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸின் மகன் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
மாமல்லபுரத்தில் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா நடத்தியபோது, அவ்விழாவில் பங்கேற்கச் சென்றவர்களுக்கும் விழுப்புரம், மரக்காணம் பகுதி மக்களில் ஒரு சிலருக்குமிடையே நடந்த மோதல்களுக்கு வன்னிய சங்கத்தினரே காரணம் என்ற ரீதியில் முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இந்நிலையில், இன்று புதன்கிழமை சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த இராமதாசின் மகனும் பாமகவின் இளைஞர் அணித் தலைவருமான அன்புமணி ராமதாஸ், சம்பவங்களுக்கு தலித் அமைப்பான விடுதலைச் சிறுத்தைகளே பொறுப்பேற்கவேண்டும் என்று கூறினார்.அந்த சம்பவத்தைத் தொடர்ந்து ராமதாஸ் உட்பட பாமக தலைவர்கள் சிலர் கைது செய்யப்பட்டனர்.
ஆனால் போலீசார் கொடுத்த தவறான தகவலின் பேரில்தான் முதல்வர் பாமக மீதும் வன்னியர் சங்கத்தின் மீதும் வீண்பழி சுமத்தியிருக்கிறார் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையிலேயே தாம் நீதிவிசாரணை கோருவதாகவும், அக்கோரிக்கையை வலியுறுத்தி தொடர்ந்து தாங்கள் அறவழியில் போராடவிருப்பதாகவும் அன்புமணி தெரிவித்தார்.
சமச்சீர் கல்வி முறையை ரத்து செய்ய முயன்றது முதல் மதுவைக் கொடுத்து மக்களைக் கெடுப்பது வரை அனைத்துப் பிரச்சினைகளிலும் தமிழக அரசின் மக்கள் விரோத போக்கை பாமக அம்பலப்படுத்தி வந்துள்ளதாக அவர் கூறினார்.
அதேநேரம், மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழாவுக்கு தடைகளையும் மீறி பல லட்சம் பேர் குவிந்ததையும் பொறுத்துக்கொள்ள முடியாமல்தான் இத்தகைய பழிவாங்கும் நடவடிக்கைகளை முதலமைச்சர் ஜெயலலிதா கட்டவிழ்த்து விட்டுள்ளார் என்றும் அன்புமணி குற்றஞ்சாட்டினார்.
அவ்வாறே, தமது விழாவில் ஆத்திரமூட்டும் வகையில் சிலர் பேசியதற்கும் மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் வளாகத்தில் சிலர் அத்துமீறி நுழைந்ததற்கும் வருத்தம் தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.
Post a Comment