இலங்கையில் ஆளுங்கூட்டணி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அரசியல்கட்சிகளும் எதிரணிக் கட்சிகளும் தலைநகர் கொழும்பு உட்பட நாட்டின் நாலாபுறங்களிலும் மேதின பேரணிகளையும் கூட்டங்களையும் நடத்தியுள்ளன.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கொழும்பில் அவரது கட்சியின் மேதினக் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
மக்கள், ஐக்கிய தேசியக் கட்சி, சோசலிஸ முன்னிலைக் கட்சி உள்ளிட்ட கட்சிகளும் தமது பெருந்திரளான ஆதரவாளர்களுடன் கொழும்பில் மேதினக் கூட்டங்களை நடத்தியுள்ளன.
மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணியின் மேதினக் கூட்டமும் கொழும்பில் நடந்தது.
இலங்கையில் ஒட்டுமொத்த சமூகமும் தொழிலாளர் சமூகமாக வாழும் மலையகத்தில் நுவரெலியா மாவட்டத்திலேயே பிரதான தமிழ் தொழிற்சங்கங்கள் தமது மேதினக் கூட்டங்களை நடத்தியிருந்தன.
நுவரெலியாவில் நடந்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மேதினக் கூட்டத்தில் ஜனாதிபதியின் தம்பி, அமைச்சர் பசில் ராஜபக்ஷ கலந்துகொண்டார்.
தலவாக்கலையில் நடந்த மலையக மக்கள் முன்னணி மற்றும் திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கம் ஆகிய கட்சிகளின் கூட்டங்களில் ஜனாதிபதியின் மகன் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கலந்துகொண்டார்.
மலையகத்தில் தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுக்கும் போராட்டத்தை விட கட்சிகள் தமது அரசியல் பலத்தை காட்டவே மேதினக் கூட்டங்களை நடத்துவதாக செயற்பாட்டாளர்கள் விமர்சிக்கின்றனர்.
Post a Comment