வங்கதேசத்தில் ஒரு ஆடைத் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டதில் குறைந்தபட்சம் 8 பேராவது கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
இரு வாரங்களுக்கு முன்னதாக மற்றுமொரு ஆடைத்தொழிற்சாலை அமைந்திருந்த கட்டிடம் இடிந்து விழுந்து, நூறுக்கணக்கானோர் இறந்ததை அடுத்து ஆடைத் தொழிற்சாலைகளின் பாதுகாப்பு குறித்து கடுமையான ஆய்வுகள் நடந்துகொண்டிருக்கும் நிலையில் இந்த விபத்து நடந்திருக்கிறது.
பல மாடிக்கட்டிடத்தில் அமைந்திருந்த இந்த ஆடைத்தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு தீயணைப்பு படையினர் மூன்று மணி நேரத்துக்கும் அதிகமாகப் போராடினார்கள்.
குளிர் ஆடைகளும் ஏனைய ஆயத்த ஆடைகளும் தயாரிக்கும் இந்த ஆலையில் இருந்து தீ விபத்து ஏற்படுவதற்கு சற்று முன்னதாகத்தான் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலை முடிந்து வீடுகளுக்கு சென்றுவிட்டிருந்தனர்.
விபத்து நடந்தபோது அந்தக் கட்டிடத்தின் உரிமையாளர், அங்கு வந்த ஒரு உள்ளூர் பொலிஸ் இன்ஸ்பெக்டருடன் மேல்மாடியில் பெசிக்கொண்டிருந்தார். அவர்களது சடலம் பின்னர் மீட்கப்பட்டது.
இரு வாரங்களுக்கு முன்னதாக மற்ற கட்டிடம் இடிந்து விழுந்ததில் குறைந்தபட்சம் 900 பேராவது கொல்லப்பட்டிருக்கலாம் என்று தற்போது தெரியவருகிறது.
சர்வதேச கொள்வனவாளர்களை திருப்திப்படுத்தவும், தொழில்துறை தரங்களை மேம்படுத்தவுமாக மேற்கொள்ளப்படும் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஏற்கனவே வங்கதேச அதிகாரிகள் 18 ஆடைத்தொழிற்சாலைகளை மூடிவிட்டார்கள்.
Post a Comment