வாஷிங்டன் அருகே பாலம் இடிந்ததால் தண்ணீருக்குள் விழுந்த வாகனங்கள் / விண்வெளி குப்பைகளுடன் ஈக்குவடோர் செய்மதி மோதியது / கஞ்சன்ஜங்கா சிகரத்துக்கு சென்று திரும்பிய 5 பேர் பலி?


 

0001வாஷிங்டன் அருகே பாலம் இடிந்ததால் தண்ணீருக்குள் விழுந்த வாகனங்கள்-
அமெரிக்காவில் வாஷிங்டன் மாகாணத்தின் வடமேற்குப் பகுதியில் உள்ள ஸ்ககிட் நதியின் மீது நெடுஞ்சாலைகளை இணைக்கும் பாலம் உள்ளது. இதன் ஒரு பகுதி, நேற்று இரவு 7 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது. அப்போது பாலத்தின் வழியாகச் சென்று கொண்டிருந்த வாகனங்களும் தண்ணீருக்குள் விழுந்தன.
பின்னால் வந்த வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அப்படியே நின்று விட்டன. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காவல்துறையினர் விரைந்து வந்து போக்குவரத்தை சீர் செய்தனர். தண்ணீருக்குள் விழுந்த இரண்டு கார்களும், மூன்று மனிதர்களும் மீட்கப்பட்டனர்.
தண்ணீருக்குள் விழுந்தவர்கள் காப்பாற்றப்பட்டனர் என்று வாஷிங்டன் நகரின் நெடுஞ்சாலைப் போக்குவரத்தின் ரோந்துப்பணியில் உள்ள மார்க் பிரான்சிஸ் தெரிவித்தார். இரவு நேரத்தில் இந்த விபத்து நடந்ததால் தண்ணீரில் மூழ்கிய அனைவரும் காப்பாற்றப்பட்டனரா என்று மீட்புக்குழுவினரால் உறுதியாகக் கூறமுடியவில்லை.
விண்வெளி குப்பைகளுடன் ஈக்குவடோர் செய்மதி மோதியது-
ஈக்குவடோர் நாட்டின் ஒரோயொரு செய்மதியான ‘பேகசஸோ’ விண்வெளிக் குப்பைகளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதையடுத்து அச்செய்மதியிருந்து மீண்டும் சமிக்ஞைகள் கிடைப்பதை உறுதிப்படுத்துவதற்கான தீவிர முயற்சிகளில் ஈக்குவடோர் விண்வெளி முகவரகம் ஈடுபட்டுள்ளது.
இச்செய்மதி ஒரு மாதத்துக்கு முன்னர் சீனாவின் ஜியுகுவான் விண்வெளி ஏவுதளத்திலிருந்து விண்வெளிக்கு ஏவப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அச்செய்மதி நேற்று விண்வெளி சிதைவுடன் மோதியுள்ளது.
பூமியிலிருந்து 650 கி.மீ. உயரத்தில் இச்செய்மதி பூமியை வலம் வந்து கொண்டிருந்தது. 1985ஆம் ஆண்டு சோவியத் யூனியனால் ஏவப்பட்ட ரொக்கெட் ஒன்றின் சிதைவுகளுடன் ஈக்குவடோரின் செய்மதி மோதியுள்ளதாக நிபுணர்கள் கணித்துள்ளனர்.
அச்செய்மதியிலிருந்து மீண்டும் சமிக்ஞைகளை பெற முடியுமா? என்பதை 3 அல்லது 4 நாட்களின் பின்னரே அறிய முடியும் என ஈக்குவடோர் விண்வெளி முகவரகத்தின் தலைவரான ரொனி நாடர் தெரிவித்துள்ளார்.
கஞ்சன்ஜங்கா சிகரத்துக்கு சென்று திரும்பிய 5 பேர் பலி?-
உலகின் மூன்றாவது உயரமான சிகரம் கஞ்சன்ஜங்கா. கடந்த திங்கட்கிழமை 8,586 மீ உயரமுடைய இந்த சிகரத்துக்கு ஒரு மலையேற்ற குழுவினர் சென்றனர். கஞ்சன்ஜங்கா மலை சிகரத்தை அடைந்தனர். பிறகு அவர்கள் கீழே இறங்க ஆரம்பித்தனர்.
7,900 மீ உயரத்தில் இருந்தபோது அவர்களில் ஐந்து பேரை காணவில்லை. குளிர்காற்று மிகவும் அதிகமாக இருந்ததால் ஹெலிகாப்டர் மூலம் தேட முடியவில்லை.
மலையேற்றக் குழுவின் அதிகாரி தீபேந்திர பவுடல், அந்த ஐந்து பேரும் இறந்திருக்கலாம் என்று இன்று அறிவித்துள்ளார்.
அவர்களில் இருவர் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்தவர்கள் எனவும், இரண்டு பேர் நேபாள நாட்டைச் சேர்ந்தவர்கள் எனவும், மற்றொருவர் கொரிய நாட்டுக்காரர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிகரத்தை அடைந்துவிட்டுத் திரும்பும்போது, ஐந்து பேர் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்று நேபாள நாட்டின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
 

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger