நாடளாவிய ரீதியில் 40,000 போலி வைத்தியர்கள் / போலி நோட்டுக்கள் குறித்து, பொதுமக்களை விழிப்பாக இருக்குமாறு வேண்டுகோள் / பஸ் டிக்கெட்டுக்குப் பதிலாக முற்கொடுப்பனவு அட்டை

 

நாடளாவிய ரீதியில் 40,000 போலி வைத்தியர்கள்; கைது செய்ய நடவடிக்கை-
நாடளாவிய ரீதியில் உள்ள போலி வைத்தியர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. போலி வைத்தியர்களைக் கைது செய்வதற்கான சுற்றிவளைப்புக்களை தேசிய ஒளடதங்கள் அதிகார சபை மேற்கொள்வதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் பாலித்த மஹிபால தெரிவித்துள்ளார்.
நாட்டின் அநேக பகுதிகளில் சுமார் 40,000 போலி வைத்தியர்கள் இருப்பதாகவும் அவர்கள் தொடர்பில் தற்போது தகவல்கள் திரட்டப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான சட்டமூலங்களில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு பரிந்துரைகளை முன்வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் நலிந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, நாட்டிலுள்ள போலி வைத்தியர்கள் விரைவில் கைதுசெய்யப்படுவார்கள் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
போலி நோட்டுக்கள் குறித்து பொதுமக்களை விழிப்பாக இருக்குமாறு பொலிஸ் தலைமையகம் வேண்டுகோள்-
போலியாக அச்சிடப்படும் கள்ள நோட்டுக்கள் தொடர்பில் விழிப் புடனும், அவதானத்துடனும் செயற் படுமாறு பொலிஸ் தலைமையகம் பொதுமக்களை கேட்டுக் கொள்கிறது. கள்ள நோடுக்களை அச்சிடுதல், விநியோகித்தல், புழக்கத்துக்கு விடுதல் தொடர்பில் தகவல்கள் தெரிந்தவர்கள் உடனடியாக 119 என்ற பொலிஸ் அவசர அழைப்புக்கோ, அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கோ தெரியப்படுத்துமாறு பொலிஸ் தலைமையகம் வேண்டுகோள் விடுக்கிறது.
கடந்த சில தினங்களாக யடியந்தோட்டை, செவனகல, கொஸ்கொட உட்பட நாட்டின் சில பிரதேசங்களில் போலி ரூபா நோட்டுக்கள் வைத்திருந்த பல சந்தேக நபர்கள் பொலிஸாரினால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து போலியாக அச்சிடப்பட்ட 500 ரூபா, 1000 ரூபா மற்றும் 2000 ரூபா உள்ள நோட்டுக்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இதேவேளை சந்தேக நபர்கள் மூலம் கிடைக்கப் பெற்ற பல்வேறு தகவல்களின் அடிப்படையில் உள்ள நோட்டுக்கள் அச்சிடும் இடங்கள் பலவற்றை முற்றுகையிட்டுள்ள பொலிஸார், அங்கிருந்து பல்வேறு இயந்திரங்களையும் மீட்டெடுத்துள்ளனர்.
இந்நிலையிலேயே கள்ள நோட்டுக்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளும் பொலிஸ் தலைமையகம் அந்த கள்ள நோட்டுக்களை அடையாளம் காண்பதற்கான சில முக்கிய குறிப்புக்களை தந்துள்ளது.
ரூபா நோட்டில் காணப்படும் நீர் அடையாளம் உள்ளதா என்பதை பரிசோதிக்க வேண்டும். நோட்டின் குறுக்காக காணப்படும் பாதுகாப்பு நூல் அடையாளம் உரிய முறையில் உள்ளதா என்பதை அவதானிக்க வேண்டும். கள்ள நோட்டு உண்மையான நோட்டை விட தடிப்பானதாக காணப்படும்.
சில நோட்டுக்களில் இரண்டு தாள்கள் ஒட்டப்பட்டிருக்கும். கள்ள நோட்டின் நிறங்கள் உண்மையான நோட்டை விட மாறுபட்டதாக காணப்படும் இதனை உரிய முறையில் அவதானிக்க முடியும்.
ரூபா நோட்டுக்கள் பலவற்றை கொடுக்கல் வாங்கல் செய்யும் போது அது தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். ஏனெனில் அதற்கு நடுவில் போலி நோட்டுக்களும் இருக்கலாம் போலி நோட்டுக்களை உங்களிடம் வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.
எனவே அது தொடர்பில் உடனடியாக பொலிஸாருக்கு தெரியப்படுத்தவும் என்றும் பொலிஸ் தலைமையகம் கேட்டுக் கொள்கிறது.
பஸ் டிக்கெட்டுக்குப் பதிலாக முற்கொடுப்பனவு அட்டை-
பஸ்களில் டிக்கெட் பெறுவதற்குப் பதிலாக முற்கொடுப்பனவு அட்டை முறையை அறிமுகப்படுத்தும் திட்டத்தை முதற்கட்டமாக மேல் மாகாணத்தில் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன நேற்று தெரிவித்துள்ளார்.
இதனூடாக பஸ்களில் மீதிப்பணம் வழங்குதல் பஸ் உரிமையாளர்களுக்கு கிடைக்க வேண்டிய வருமானம் குறைதல் உட்பட பல பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேல் மாகாணத்தில் முற்கொடுப்பனவு அட்டை முறையை அமுல்படுத்துவதற்கு மக்கள் வங்கி உதவ முன்வந்துள்ளது. இது குறித்து மக்கள் வங்கித் தலைவர் காமினி செனரத்துடன் பேச்சு நடத்தியதாகவும் கெமுனு விஜே ரத்ன குறிப்பிட்டுள்ளார்.
முற்கொடுப்பனவு அட்டையை செலுத்தி பஸ்களில் பயணம் செய்யும் முறை பலநாடுகளில் காணப்படுகிறது. இது முதற்தடவையாக இலங்கையில் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் கெமுனு கூறினார்.
மேல்மாகாணத்தில் இந்தத் திட்டம் சிறப்பாக இடம்பெறும் பட்சத்தில் ஏனைய மாகாணங்களிலும் இதனை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதேவேளை தூர சேவை பஸ்களிலும் முற்கொடுப்பனவு அட்டைமுறையை முன்னெடுப்பது குறித்து தேசிய போக்குவரத்து ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளது.
 

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger