பீட்ரூட் சாறு உயர் ரத்தஅழுத்தத்தை தணிக்கிறது



பீட்ரூட் சாறு மனிதர்களின் உயர் ரத்த அழுத்தத்தை தணிக்கவல்லது என்று மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
ஒரு தேநீர் கோப்பை அளவு, அதாவது சுமார் 250 மிலி லிட்டர் பீட்ரூட் சாறு குடித்தால் ஒருவரின் உயர் ரத்த அழுத்தம் சுமார் 10 எம் எம் அளவால் குறைவதாக லண்டன் மருத்துவக் கல்லூரியும் பார்ட்ஸ் சுகாதார மையமும் இணைந்து நடத்திய ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.
பதினைந்து பேரிடம் நடத்திய ஆய்வின் முடிவில் ஒரு சிலருக்கு அவர்களின் உயர் ரத்தஅழுத்தம் சாதாரண அளவுக்கு குறைந்ததாகவும் இந்த ஆய்வாளர்கள் தெரிவித்திருப்பதாக, மருத்துவ சஞ்சிகையான ஹைபர்டென்ஷன் தெரிவிக்கிறது.
இவர்கள் பீட்ரூட் சாற்றை குடித்து மூன்று முதல் ஆறுமணி நேரம் கழித்து இவர்களின் உயர் ரத்த அழுத்தம் கணிசமாக குறைந்ததாக இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் கணக்கிட்டிருக்கிறார்கள். மேலும் மறுநாளும் கூட இவர்களின் உயர் ரத்தஅழுத்தம் குறைந்தே காணப்பட்டதாகவும் இவர்கள் தெரிவிக்கிறார்கள்.
பீட்ரூட்டில் இருக்கும் நைட்ரேட் சத்து மனிதர்களின் ரத்தநாளங்களை விரிவடையச் செய்வதனால் இரத்த ஓட்டம் சீராக செல்வதால், மனிதர்களின் உயர் ரத்தஅழுத்தம் குறைவதாக மருத்துவ விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
ஏற்கெனவே அஞ்ஞைனா என்கிற இரத்தநாள வலிநோயால் அவதிப்படுபவர்களுக்கு நைட்ரேட் மருந்து அளிப்பதன் மூலம் அவர்களின் வலியை குறைக்க முடிவதை சுட்டிக்காட்டும் மருத்துவர்கள், இங்கே நைட்ரேட் சத்து அதிகம் கொண்டிருக்கும் பீட்ரூட் சாறு அதே வேலையை செய்வதாக கருதுகிறார்கள்.
நைட்ரேட் சத்து ரத்த நாளத்தை விரிவடையச்செய்யும்
மண்ணில் இயற்கையிலேயே இருக்கும் நைட்ரேட் சத்து, தாவரங்களின் வேர்கள் மூலம் உறிஞ்சப்பட்டு அவற்றின் இலை, தண்டு மற்றும் கிழங்குகளில் சேமிக்கப்படுகிறது. ஒவ்வொரு தாவரமும் இந்த நைட்ரேட் சத்தை ஒவ்வொருவிதமாக உறிஞ்சும் தன்மையையும், சேமிக்கும் தன்மையையும் கொண்டிருக்கின்றன. இதில் பீட்ரூட் தாவரம் நிலத்தில் இருந்து உறிஞ்சும் நைட்ரேட் சத்தை தனது கிழங்கில் அடர்த்தியாக சேமிக்கும் தன்மை கொண்டது.
எனவே இந்த பீட்ரூட் கிழங்கின் சாற்றை குடிக்கும் போது, அதில் இருக்கும் நைட்ரேட் மனிதர்களின் ரத்த நாளங்களை விரிவடையச் செய்யும் வேலையை செய்கிறது.
இவ்வளவு குறைவான நைட்ரேட், உயர் இரத்த அழுத்தத்தில் இவ்வளவு பெரிய நல்ல பலனை அளிக்கும் என்பது தாங்கள் எதிர்பார்க்கவில்லை என்கிறார் இந்த ஆய்வை மேற்கொண்ட ஆய்வாளர் அம்ரிதா அலுவாலியா.
எனவே நைட்ரேட் சத்து அதிகம் இருக்கும் பீட்ரூட் போன்ற காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம், ஒருவரின் உயர் ரத்தஅழுத்தத்தை கணிசமாக குறைக்க முடியும் என்பது நோயாளிகளுக்கும் எளிதில் கடைபிடிக்கக்கூடிய, பக்கவிளைவுகளற்ற சிகிச்சைமுறையாக மாறும் வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார் அவர்.
அதேசமயம், நைட்ரேட் அதிகம் உள்ள காய்கறிகளை அதிகம் சாப்பிடுவதன் மூலம் நாள்பட்ட உயர் ரத்த அழுத்தத்தை தொடர்ந்து கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியுமா என்பது குறித்து முடிவு செய்வதற்கு மேலதிக ஆய்வுகள் செய்யவேண்டியது அவசியம் என்றும் அம்ரிதா அலுவாலியா தெரிவித்தார்.
அந்த ஆய்வின் முடிவுகளுக்காக காத்திருக்காமல், பச்சைக் காய்கறிகளை அதிகம் உண்பது உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு நன்மைதான் என்கிறார் அவர்.
அதேசமயம், பீட்ரூட் சாற்றை குடிப்பவர்களின் சிறுநீர் இளஞ்சிகப்பு நிறமாக மாறும் என்றும் அவர் எச்சரிக்கிறார்.
எனவே சிறுநீரின் நிறத்தை பற்றி கவலைப்படாதவர்கள், பீட்ரூட் சாற்றை குடித்து தங்களின் உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க முயலலாம் என்பது இந்த ஆய்வாளர்களின் யோசனை.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger