உள்நாட்டில் அமெரிக்காவை எதிர்த்து, அவர்கள் கொண்டு வந்த தீர்மானங்களை கணக்கிலும் எடுக்க மாட்டோம் என அமைச்சர்கள் ஜி.எல். பீரிசும், கெஹலிய ரம்புக்வலவும் வீரம் பேசுகிறார்கள். ஆனால், அமெரிக்க அரசை கவர ஒரு மாதத்திற்கு116,000 டாலர்களை செலவழித்து நமது அமெரிக்கத் தூதுவர் விக்கிரமசூரியவும், மத்திய வங்கி ஆளுநர் கப்ராலும் அமெரிக்க தொடர்பு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளார்கள். அதேவேளை இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதுவர் மிசெல் சிசன், இலங்கை தொடர்பாக மிகவும் கோபத்துடன் பேசியுள்ளார்.
உண்மையில் இலங்கை - அமெரிக்க அரசாங்கங்களுக்கு இடையிலான உறவு என்ன? அது சண்டையா? சமாதானமா? 'லவ்வா, இழவா" ? இந்தக் கேள்விகளுக்கு அரசாங்கம் பதில் கூறவேண்டும். அதேபோல் இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதுவரும் பதில் கூற வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
நேற்று புதன்கிழமை கொழும்பில் நடைபெற்ற அதிகாரத்தைப் பகிர்ந்து ஐக்கியப்படுவோம் இயக்கத்தின் ஊடக மாநாட்டில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதுவர் மிசெல் சிசன், இலங்கை தொடர்பாக முக்கியமாக பேசியுள்ளார். 2012ஆம் ஆண்டிலும் 2013ஆம் ஆண்டிலும் நிறைவேற்றப்பட ஐ.நா. மனித உரிமை மன்ற தீர்மானங்கள் பற்றியும், அவை தொடர்பில் இலங்கை அரசு செய்ய வேண்டிய மற்றும் செய்யத் தவறிய காரியங்கள் தொடர்பிலும் அவர் பேசியுள்ளார்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சிபாரிசுகளை அமுல் செய்ய இலங்கை அரசு உருவாக்கி அறிவித்த மனித உரிமை செயற்திட்டம் தொடர்பிலும் பேசியுள்ளார். இவை இலங்கை அரசாங்கத்துக்கு எதிரே இன்று இருக்கின்ற சர்வதேச கடப்பாடுகளை ஞாபகப்படுத்துகின்றன.
இவற்றை இலங்கை அரசு செய்யாவிட்டால் ஆபத்து காத்திருக்கிறது என்று அமெரிக்கத் தூதுவர் மறைமுகமாமாக சொல்லுகிறார். இதன் மூலம் அவர் இலங்கை அரசுக்கு பூச்சாண்டி காட்டுகிறாரா அல்லது தமிழ் மக்களை நம்ப வைத்து ஏமாற்றுகிறாரா என்பது விரைவில் தெரியவரும்.
ஆனால், ஐ.நா. தீர்மானங்களை தாம் ஒருபோதும் ஏற்றுகொள்ளப் போவதில்லை என பாராளுமன்றத்தில் வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் கூறியுள்ளார். நேற்று இதையே அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவும் கூறியுள்ளார். அமெரிக்க அரசாங்கம் சொல்வதை கேட்கும் தேவை எமக்கு இல்லை என்று சொல்லி, அமெரிக்காவை நிராகரித்து இவர்கள் இலங்கை மக்கள் முன்னாள் பேசுகிறார்கள்.
ஆனால், அமெரிக்காவில் என்ன நடக்கிறது? வெளிவிவகார அமைச்சர் பீரிசுக்கும் தெரியாமல் பெருந்தொகையை செலவழித்து அமெரிக்க அரசாங்கத்தை கவரும் நடவடிக்கைகளை, இலங்கையில் அமெரிக்காவை எதிர்த்து வீரம் பேசும் அரசாங்கம் செய்கிறது.
அமெரிக்காவில் உள்ள இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்கிரமசூரிய, மெஜொரிட்டி குரூப் என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளார். இதன் பெறுமதி மாதம் ஒன்றுக்கு 50,000 அமெரிக்க டொலர் ஆகும். அதேவேளை மத்திய வங்கி ஆளுநர் அஜீத் நிவாட் கப்ரால், தொம்சன் குரூப் என்ற இன்னொரு நிறுவனத்துடன் மாதம் ஒன்றுக்கு 66,000 அமெரிக்க டொலருக்கு ஒப்பந்தம் செய்துள்ளார். இரண்டு வருடத்திற்கு அமுலில் இருக்கும் இந்த ஒப்பந்தங்களுக்கு எவ்வளவு ஆகும் என கணக்குப் போட்டுப் பாருங்கள். இந்த நிறுவனங்களின் வேலை அமெரிக்க உயர் மட்டத்தில் இலங்கை தொடர்பாக நல்லெண்ணத்தை ஏற்படுத்துவது ஆகும்.
எனவே, இலங்கை அரசு ஒன்றை தெளிவு படுத்த வேண்டும். அமெரிக்காவுடன் உங்கள் உறவு என்ன? சண்டையா? சமாதானமா? 'லவ்வா, இழவா"? இது தொடர்பாக அமெரிக்க தூதுவரும் தமிழ் மக்களுக்கு உண்மை கூற வேண்டும். இலங்கை அரசு மக்களை தொடர்ந்து ஏமாற்றாமல் ஐ.நா. தீர்மானங்களை அமுல் செய்து நாட்டில் நல்லாட்சியையும், அதிகாரப் பிரிவினையையும் நடைமுறையாக்கி இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும் என்பதுவே எமது ஒரே எதிர்பார்ப்பு என்பதை இலங்கை அரசும், அமெரிக்காவும் அறிந்துகொள்ள வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment