இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்த பதினைந்து இராஜதந்திர தலைவர்கள் இன்று புதன்கிழமை மாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விடயங்கள் குறித்து கலந்துரையாடினர்.
பங்களாதேஷ், ஈரான், எகிப்து, இந்தோனேசியா, குவைத், மலேசியா, மாலைதீவு, நைஜீரியா, பலஸ்தீனம், துருக்கி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா மற்றும் கட்டார் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இராஜதந்திரிகள் இச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
இச் சந்திப்பில் உரையாற்றிய பலஸ்தீன தூதுவர், இலங்கையில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு அமைதி நிலவுவதைக் கண்டு மகிழ்ச்சியடைகின்றோம். இலங்கை மேலும் அதிகளவில் அபிவிருத்தியடைவதை காண விரும்புகின்றோம். மற்றும் வேறொரு நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுவதை நாம் அனுமதிப்பதில்லை என தூதுக் குழுவினர் தெரிவித்தனர்.
இதேவேளை, நாட்டில் இன அல்லது மத ஒருமைப்பாட்டை சீர்குலைப்பதற்கு எவருக்கும் அரசாங்கம் இடமளிக்காது. அத்தகைய சம்பவங்கள் தொடர்பாக எவரிடமாவது நிரூபிப்பதற்கு சாட்சியங்கள் இருப்பின் இத்தகைய தகவல்களை அவர்கள் வழங்க வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
குறிப்பாக கடந்த மாதம் ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரின் போது இஸ்லாமிய நாடுகள் இலங்கைக்கு வழங்கிய ஒத்துழைப்புக்கும் ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.
Post a Comment