கடந்த வருடம் டிசம்பர் மாதம், தலைநகர் டெல்லியில், கல்லூரி மாணவி ஒருவர், கற்பழிப்புக் கும்பலால் தாக்கப்பட்டு மரணத்தைத் தழுவியது, இந்தியாவில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெண்களின் பாதுகாப்பு குறித்த சட்டங்கள் கடுமையாக்கப்பட்டன. கைது செய்யப்பட்ட குற்றவாளிகளின் மீது இன்னும் விசாரணை நடந்துகொண்டிருக்கின்றது.
இளம்பெண்கள் பலரையும் இந்த சம்பவம் பாதித்தது. பெண்களின் இயலாமை, சட்டத்தின் நிதானப் போக்கு போன்ற தடைகளைத் தாண்டிப் பெண்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் எழுந்தது. அதில் ஒருவர்தான் சென்னை எஸ்.ஆர்.எம். கல்லூரியில் விமானத்துறை பொறியியல் கல்வி பயிலும் மனிஷா மோகன் என்ற மாணவி ஆவார்.
இவர், தனது தோழிகளான நீலாத்ரி, ரிம்பி ஆகியோருடன் இணைந்து, தங்களுடைய பொறியியல் திறனை உபயோகித்து தக்க பாதுகாப்பு சாதனம் ஒன்றை உருவாக்க வேண்டும் என யோசித்தனர்.
படிப்பு மற்றும் பணி நிமித்தம் தனியாக இருக்க நேரிடும் பல பெண்களின் கருத்துகளை அறிந்த பின்னர், அவர்கள் மின்சாரம் பாயக்கூடிய ஒரு பெண்கள் உள்ளாடையை வடிவமைத்தனர். இதனை அணிந்து கொள்பவர்களுக்கு எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாத வகையில் இந்த ஆடையின் அமைப்பு உள்ளது.
யாரேனும் இவர்களைத் தாக்க முற்பட்டால், இந்த உடையிலிருந்து 3800 கிலோ வாட் சக்தி கொண்ட மின்சாரம் பாய்ந்து எதிராளியைச் செயலிழக்கச் செய்யும்.
மேலும், தாக்கப்படும் பெண்கள் தங்களின் நண்பர்களுக்கோ, காவல்துறையினருக்கோ செய்தி அனுப்பக்கூடிய வசதியும் இந்த ஆடையில் செய்யப்பட்டுள்ளது என்று மனிஷா மோகன் தங்களின் கண்டுபிடிப்பைப் பற்றிக் குறிப்பிடுகின்றார்.
Post a Comment