புதிய மின் கட்டண உயர்வை 20 சதவீதத்தால் குறைக்குமாறு ஜனாதிபதி மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சிற்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
அதன்படி 150 யுனிற்கு குறைவாக மின்சாரத்தை பயன்படுத்துவோரின் மின் கட்டண பட்டியலுக்கு 20 சதவீத கட்டண குறைப்பு மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கூறியுள்ளதாகவும் இது குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பை நாளையதினம் இடம்பெறும் மே தின கூட்டத்தில் விடுப்பார் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்காது கட்டணத்தை குறைத்து தற்பெயர் வாங்கிக் கொள்ள ஜனாதிபதி முன்னிற்பதாக அவர் குறிப்பிட்டார்.
ஆனால் 100ற்கு 20 சதவீதம் மின் கட்டணத்தை குறைப்பதன் மூலம் பிரச்சனை குறையாது எனவும் 80 சதவீத சுமை மக்கள் மத்தியிலேயே இருக்கும் என்பதை மறந்து விடக் கூடாது என திஸ்ஸ கூறினார்.
அரசாங்கத்தில் உள்ள அமைச்சர் விமல் வீரவன்ச நாளை தனியாக மே தின கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளதாகவும் அதில் கட்டாயம் கலந்து கொள்ளுமாறு தேசிய வீடமைப்பு அதிகாரசபை ஊழியர்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மே தினத்திற்கு இவ்வாறு இலங்கை போக்குவரத்து பஸ், அரசாங்க ஊழியர்களை பயன்படுத்த நடவடிக்கை எடுத்துவருவதாக திஸ்ஸ அத்தநாயக்க சுட்டிக் காட்டினார்.
இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சி பிரபல அமைச்சர் ஒருவரோடு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அத்தோடு அமைச்சர்கள் சிலரும் எதிர்க் கட்சியோடு பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் தெரிவித்தார்.
எனினும் அந்த அமைச்சர்களின் பெயர் விபரங்கள் தெரிவிக்க முடியாது எனவும் அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் அரச அமைச்சர்களே அதிருப்தி அடைந்துள்ளதாகவும் திஸ்ஸ அத்தநாயக்க சுட்டிக் காட்டினார்.
Post a Comment