இலங்கையில் ஒரு வருட வீசாவிலுள்ள வெளிநாட்டவருக்கு 8 வருடங்கள் செல்லுபடியாகும் சாரதி லைசன்ஸ்


இலங்கையில் ஒரு வருட வீசாவிலுள்ள வெளிநாட்டவருக்கு 8 வருடங்கள் செல்லுபடியாகும் சாரதி லைசன்ஸ்-
இலங்கையில் தங்கியிருப்பதற்கென ஒருவருட வீசா வழங்கப்பட்டுள்ள வெளிநாட்டவர்களுக்கு மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தினால் எட்டு வருடங்கள் செல்லுபடியாகும் சாரதி லைசன்ஸ் வழங்கப்பட்டு வருகிறது. இதனைப் பயன்படுத்தி அவர்கள் சட்டவிரோதமான முறையில் இலங்கையில் தங்கியிருப்பது தெரிய வந்துள்ளது.
வீசா முடிவடைந்திருந்தும் இந்த நாட்டில் சட்டவிரோதமாக தங்கி யிருப்பதற்கு இந்த லைசன்ஸ்களையே பயன்படுத்துவதாக குடிவரவு, குடியகல்வு திணைக்களம் தெரிவிக்கின்றது.
வீசா முடிவடைந்ததன் பின்னர் சட்டவிரோதமாக உள்நாட்டிலே தங்கியிருந்து பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்ற வெளிநாட்டவர்களை தேடி சுற்றி வளைப்புக்களை மேற்கொண்டு வருகின்ற குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் புலனாய்வு சுற்றி வளைப்புப் பிரிவுக்கு மேற்படி சாரதி அனுமதிப்பத்திரத்தை சமர்ப்பித்து வருவதாகவும் அதனை பயன்படுத்தி தமது உரிமைக்காக வாதிடுவதாகவும் குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம் மேலும் கூறுகின்றது.
வெளிநாட்டு அனுமதிப்பத்திரம் ஒன்றினை சமர்ப்பிக்காது மேற்படி சாரதி அனுமதிப் பத்திரத்தை சமர்ப்பிக்கின்ற ஒருசில வெளிநாட்டவர்கள் பாதுகாப்பு உத்தியோகத்தர்களையும் ஏமாற்றி விட்டு அந்த இடங்களிலிருந்து நழுவிச் செல்வதாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் ஒருவருட வீசாவுள்ள வெளிநாட்டவர்களுக்கு எட்டு வருடங்கள் செல்லுபடியான சாரதி அனுமதிப்பத்திரம் ஒன்றினை வழங்குவது இந்நாட்டின் பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தலாக அமைவதாகவும் தேசிய புலனாய்வுத் துறை மற்றும் கண்காணிப்புப் பிரிவுகள் சுட்டிக் காட்டுகின்றன.
எனவே, ஒருவருட வீசா வழங்கப்படுகின்ற வெளிநாட்டவர்களுக்கு 8 வருடங்கள் செல்லுபடியான சாரதி அனுமதிப் பத்திரமொன்று ஏன் வழங்கப்படுகின்றது? என மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் வேரஹெர கிளையின் பிரதி ஆணையாளர் சஞ்ஜீவ பந்துகீர்த்தியிடம் கேட்கப்பட்டது.
ஒரு வருடம் அல்லது அதற்கு மேற்பட்ட வீசா உள்ள வெளிநாட்டவர்களுக்கு இந்நாட்டிலே சாதாரண வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு வழங்கப்படுகின்ற எட்டு வருடங்கள் செல்லுபடியான சாரதி அனுமதிப் பத்திரமே வழங்கப்படுவதாகவும், ஆறு மாதங்கள் அல்லது அதிலும் குறைந்த காலத்திற்குரிய வீசா வழங்கப்பட்டுள்ளவர்களுக்கு மாத்திரம் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
புதிய சாரதி அனுமதிப் பத்திரம் வழங்கும் கணனி மயப்படுத்தப்பட்டுள்ள நடைமுறைக்கேற்ப ஒரு வருடத்திற்கு செல்லுபடியான வாகன அனுமதிப்பத்திரம் ஒன்றினை வழங்க முடியாத நிலை காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஒருவருடத்திற்காக மாத்திரம் வெளிநாட்டவர் ஒருவர் சாரதி அனுமதிப் பத்திரம் ஒன்றினை கோரும் பட்சத்தில் அவரது சொந்த நாட்டின் சாரதி அனுமதிப்பத்திரத்தை சமர்ப்பித்து ஓட்டோ மொபைல் நிறுவனத்திடமிருந்து சாரதி அனுமதிப் பத்திரம் ஒன்றினை பெற்றுக்கொள்ள முடியுமெனவும் பிரதி ஆணையாளர் சஞ்ஜீவ பந்து கீர்த்தி சுட்டிக் காட்டினார்.
குடிவரவு, குடியகல்வு உத்தியோகத்தர்கள் இது வரையில் வெளிநாட்டவர்களின் மேற்படி முறைகேடான சம்பவங்கள் தொடர்பாக மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்திடம் தெரிவிக்கவில்லை எனவும் வீசாக்காலம் நீடிக்கப்படாத ஒருவருக்கு உள்நாட்டிலே தொடர்ந்தும் தங்கியிருப்பதற்கு சாரதி அனுமதிப் பத்திரத்தை எவ்வகையிலும் பயன்படுத்த முடியாதெனவும் மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் வலியுறுத்தினார்.
 

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger