பொதுபலசேனாவுடன் தொடர்பென நிரூபித்தால் பதவி விலகத் தயார்! சவால் விடும் கோத்தபாய



பொதுபலசேனாவுடன் தமது எவ்வித தொடர்புகளும் இல்லையென்று இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இலங்கையின் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு செவ்வியளித்த அவர், அந்த அமைப்புடன் தமக்கு தொடர்பு உள்ளதாக நிரூபிக்கப்பட்டால் தாம் பதவியை இராஜினாமா செய்யத் தயார் எனக் கூறினார்.

முஸ்லிம் அமைப்புக்கள் உட்பட்ட பல்வேறு தரப்புக்கள் இந்தக்குற்றச்சாட்டை முன்வைக்கின்றன. ஊடகங்களும் இந்தக் குற்றச்சாட்டை முன்வைக்கின்றன. இவையாவும் அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களாகும்.

இறுதியில் மக்களே இந்த விடயத்தில் உண்மை எதுவென்பதை தெரிந்து கொள்வார்கள் என்றும் கோத்தபாய குறிப்பிட்டார்.

இதேவேளை ஜனாதிபதி அழைப்பு விடுத்தால் தாம் அரசியலுக்கு வருவது மாத்திரமல்லாமல், தற்போதைய அரசியல்வாதிகளை காட்டிலும் சிறந்த சேவையை ஆற்றமுடியும் என்று அவர் தெரிவித்தார்.

போரை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்திய விடயங்களில் தமக்கு அதிகமான பங்கு உள்ளது. இந்தநிலையில் நாட்டில் ஒன்று வன்முறை ஏற்படுவது நாட்டின் கீர்த்தியை பாதிக்கும் என்பதை தாம் மறுக்கவியலாது. இதனடைப்படையில் தான் தாம் அளுத்கம சம்பவத்தை பார்ப்பதாக கோத்தபாய குறிப்பிட்டார்.

மாத்தறையில் பொது பல சேனாவின் அலுவலகத்தை தாம் திறந்து வைத்தமை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் வழங்கிய அவர், மரியாதைக்குரிய பிக்குவான க்ராமா விமலஜோதி அழைப்பு விடுத்தமை காரணமாகவே தாம் அதனை திறந்து வைத்ததாக குறிப்பிட்டார்.

விமலஜோதி தேரர் இலங்கையின் எதிர்க்கட்சி தலைவர் உட்பட்ட பலருக்கும் பரிச்சயமானவராவார் என்றும் கோத்தபாய தெரிவித்தார்.

அளுத்கம வன்முறைகளின் போது பொலிஸார் உரியவகையில் செயற்படவில்லை என்ற குற்றச்சாட்டை மறுத்த அவர், அனைவரும் பொதுமக்கள் விடயத்தில் பொலிஸார் வேறுபட்ட விதத்தில் நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் என்று குறிப்பிட்டார்.

மன்னார் ஆயர் வணக்கத்துக்குரிய ராயப்பு ஜோசப் நாட்டுக்கு எதிராகவும் சமூகங்களுக்கு எதிராகவும் பேசுகிறார். எனினும் யாரும் அவரை கைதுசெய்ய கோருவதில்லை. முஸ்லிம் தலைவர்களும் அதே வழியை பின்பற்றுகின்றனர் என்றும் கோத்தபாய குற்றம் சுமத்தினார்.

வெறுப்பை ஏற்படுத்துபவர்கள் மீது பயங்கரவாத தடை சட்டத்துக்கு கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறப்பட்டாலும், நாளாந்தம் நடக்கும் போராட்டங்களை, அதனைக்கொண்டு தடுக்க முடியாது. எனவே பொலிஸாரை குறை கூறுவது பொருத்தமற்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

எனினும் வெறுப்பூட்டும் பேரணிகளை தடுக்காமல் விட்டமையானது பாதுகாப்பு குறைபாடு என்பதை ஏற்றுக்கொள்ள முடியும் என்று அவர் கூறினார்.

அதேநேரம் அளுத்கமவில் வன்முறைகளுக்கு காரணம் என்று கூறப்படும் பௌத்த பிக்கு தாக்கப்பட்ட சம்பவம் உண்மையானது என்றும் அவர் தெரிவித்தார்.

மருத்துவ அறிக்கையில் குறித்த பௌத்த பிக்கு தாக்கப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளமை தொடர்பில் கருத்து தெரிவித்த கோத்தபாய, உடல் ரீதியாக சேதங்கள் ஏற்பட்டால் மாத்திரமே மருத்துவ அறிக்கை அதனை காட்டும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

அளுத்கம சம்பவம் திட்டமிடப்பட்ட சம்பவம் என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளமையானது தரமற்ற அரசியல் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger