பதிமூன்று படுத்தும் பாடு!! -(சிறப்பு கட்டுரை)

JUNE 10TH, 2014


இந்திய  பிரதமர் நரேந்திர மோடி தமது பதவிப்பிரமாண  வைபவத்திற்கு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு விடுத்த அழைப்பை இலங்கையின் ஆளும் கட்சியின் பலர் ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்ட பெரும் கௌரவம் என நினைத்திருக்கலாம். ஆனால் அந்த வைபவத்தில் கலந்து கொண்ட ஜனாதிபதி இந்திய பிரதமருடன் நடத்திய பேச்சுவார்த்தையின் பின்னர் மோடி, ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்காமலே விட்டிருக்கலாம் என்று அவர்கள் நினைத்திருக்கக் கூடும்.

ஏனெனில் மறக்கப்பட்டு இருக்க வேண்டும் என அவர்கள் நினைத்திருந்த ஒரு விடயம் ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் காரணமாக மேலெழுந்து மீண்டும் அரசியல் அரங்கில் பிரதான தலையங்கமாக மாறியிருக்கிறது. அதாவது அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை  பூரணமாக அமுலாக்க வேண்டும் என இந்திய  பிரதமர் இலங்கை  ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையின் போது வலியுறுத்தியமையையே இங்கு குறிப்பிடுகிறோம்.
13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை பூரணமாக அமுலாக்குவது மட்டுமல்லாது அதற்கு அப்பாலும் செல்ல வேண்டும் என்றே மோடி, ஜனாதிபதியிடம் கூறியிருக்கிறார். இவ்வாறானதோர் நிலைமையை இலங்கை தலைவர்கள் எதிர்ப்பார்த்திருக்க மாட்டார்கள்.
இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சி நிலவிய காலங்களிலேயே இலங்கை இனப் பிரச்சினை தொடர்பான விடயங்களின் போது இந்திய மத்திய அரசாங்கம் இலங்கை அரசாங்கத்தின் மீது பெருமளவில் நெருக்குதல்களை மேற்கொண்டிருந்துள்ளது. அதேவேளை  தமிழ்  நாட்டின்  நெருக்குதலின் காரணமாகவே  இந்திய மத்திய அரசாங்கம் அவ்வாறு இலங்கை அரசாங்கத்தின் மீது நெருக்குதல் செலுத்துகின்றது என்ற ஒரு கருத்தும் நிலவுகிறது.
இப்போது அந்த இரண்டு  காரணிகளும் இல்லை. மத்திய அரசாங்கத்தில் பதவியில் இருப்பது காங்கிரஸ் கட்சியல்ல, பாரதிய ஜனதாக் கட்சியே. மறு புறத்தில் தமிழ் நாட்டில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இம் முறை பொதுத் தேர்தலின் போது  தமிழகத்திலுள்ள 39 லோக் சபா தொகுதிகளில் 37 தொகுதிகள் கிடைத்த போதிலும்  தமிழகத்தில் எந்தவொரு கட்சியினதும் ஆதரவு இப்போது பாஜகவுக்குத் தேவையில்லை.
ஏனெனில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மட்டுமன்றி பாஜகவுக்கே நாடாளுமன்றத்தில அறுதிப் பெரும்பான்மை கிடைத்துள்ளது.
எனவே, இந்திய மத்திய அரசாங்கம் இலங்கை மீது நெருக்குதல் கொடுக்க காரணமாக இருந்த இரண்டு காரணங்களும் இப்போது இல்லாததால் இந்திய புதிய பிரதமர் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை வலியுறுத்த மாட்டார் என்றே ஆளும் கட்சியினர் நினைத்திருந்தனர்.
மாநில கட்சிகளின் ஆதரவின்றி ஆட்சியை நடத்த முடியும் என்பதால் இப்போது மோடி சுதந்திரமாக முடிவுகளை எடுக்க முடியும் என்றும் இது ஆறுதல் அளிக்கும் நிலைமையாகும் என்றும் அண்மையில் அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்லவும் கூறியிருந்தார்.
ஆனால் காங்கிரஸ் மற்றும் தமிழ் நாடு நெருக்குதல் ஆகிய இரண்டு காரணிகள் இல்லாத் நிலையிலும் இலங்கை விடயத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றம் எற்படவில்லை என்பதை மோடி-ராஜபக்ஷவின் முதலாவது பேச்சுவார்த்தையின் போதே இலங்கையின் ஆளும் கட்சியினர் புரிந்து கொள்ள வேண்டியதாயிற்று.
இலங்கை ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்னர் இந்திய பிரதமர் இலங்கையுடனான பிரச்சினைகளைப் பற்றி நன்றாக ஆராய்ந்து உள்ளார். பதவிப் பிரமாண வைபவம் நடைபெற்ற தினம் இரவே வெளியுறவுத்துறை செயலாளர் சுஜாதா சிங்கை அiழைத்த மோடி இலங்கையுடனான உறவின் விவரங்களை நன்றாக கேட்டு அறிந்துள்ளார்.
13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாகவே இரு நாட்டுத் தலைவர்களும் முக்கியமாக ஆராய்ந்ததாக கூறப்படுகிறது. அதனை பூரணமாக அமுலாக்க வேண்டும் என்பதே மோடியின் கருத்தாக இருந்துள்ளது. அதேவேளை முன்னாள் பிரதமர் மன்மோஹன் சிங்கிற்கு இலங்கை இந்த விடயத்தில் என்ன என்ன வாக்குறுதிகளை அளித்துள்ளது என பேச்சுவார்த்தையின் இடையில் மோடி சுஜாதா சிங்கிடம் கேட்டுள்ளார். 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை அமுலாக்குவதும் அதற்கு அப்பால் செல்வதுமே அந்த வாக்குறுகளாகும் என சுஜாதா சிங் கூறியிருக்கிறார்.
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கடைபிடித்த வெளியுறவுக் கொள்கையையே மோடியும் பின்பற்றப் போகிறார் என்பதற்கு இது சிறந்த சமிக்ஞையாகும். 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை அமுலாக்குமாறு மோடி கூறிய போது இது போன்ற விடயங்கள் அவசரமாக செய்து முடிக்கக் கூடியவையல்லவென ஜனாதிபதி ராஜபக்ஷ கூறியிருக்கிறார். அதற்கு மோடி இலங்கையில் போர் முடிவடைந்து ஐந்தாண்டுகள் முடிவடைந்துவிட்டது என பதிலளித்துள்ளார்.
13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை அமுலாக்குமாறு தாம் கூறிய போது இலங்கை ஜனாதிபதி என்ன பதிலளிப்பார் என்பதை மோடி முன்கூட்டியே எதிர்ப்பார்த்திருந்தார் போலும். அது தான் உடனடியாகவே போர் முடிவடைந்து ஐந்தாண்டுகள் முடிவடைந்துவிட்டது என அவர் பதிலளித்துள்ளார்.
ஐ.நா. மனித உரிமை பேரவை கூட்டத்தின் போதும் இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளின் தலைவர்களின் முன்னிலையிலும் இது போன்ற இக்கட்டான நிலைமைகளை எதிர்நோக்கும் போது அவசரமாக பிரச்சினைகளை தீர்க்க முடியாது என்பதே இலங்கைத் தலைவர்கள் வழங்கும் பதிலாகும். அந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அந்த வெளிநாட்டுத் தலைவர்கள் மோடி கூறியதைப் போல் போர் முடிவடைந்து நான்கு அல்லது ஐந்து வருடங்கள் கடந்துள்ளதாக கூறுவார்கள்.
மோடி திருப்பி ராஜபக்ஷவுக்கு இந்த பதிலை வழங்க ஒன்றில் அவர் நீண்ட காலமாக இலங்கை நிலைமையை அவதானித்து இருக்க வேண்டும். அல்லது முதல் நாள் சுஜாதா சிங் அவருக்கு நிலைமையை விவரித்து இருக்க வேண்டும்.
ஜனாதிபதியின் இந்த விஜயத்தைப் பற்றிய இலங்கை அரசாங்கம் வெளியிட்ட அறிக்கையில், பேச்சுவார்த்தையின் போது 13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக ஆராயப்பட்டதாக எதுவுமே குறிப்பிடப்படவில்லை. அது தான் அங்கு ஆராயப்பட்ட முக்கிய விடயமாகும். ஆனால் மீனவர்களின் பிரச்சினை, மறுவாழ்வு, மறுசீரமைப்பு, மீள் குடியேற்றம் மற்றும் நல்லிணக்கம் ஆகிய விடயங்கள் ஆராயப்பட்டதாகவே அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் எந்தளவு அரசாங்க தலைவர்களுக்கு கசப்பாக இருக்கிறது என்பது இதன் மூலம் தெரிகிறது. இலங்கை அரசாங்கம் பேச்சுவார்த்தையின் போது 13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக ஆராயப்பட்டதாக கூற மறுத்தாலும் அதன் பின்னர் இந்திய வெளியுறவுச் செயலாளர் ஊடகவியலாளர் மாநாடொன்றின் போது இதை அறிவித்தார்.
ஜனாதிபதி நாடு திரும்பிய பின்னர் நீர்ப்பாசன மற்றும் நீர்வள முகாமைத்துவ அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஊடகவியலாளர் மாநாடொன்றின் போது இந்த விடயத்தைப் பற்றி பேசினார். அது இந்திய பிரதமருக்கு பதில் அளிப்பதற்கு சமமாகும்.
இந்த அரசியலமைப்புத் திருத்தம் இலங்கை மீது பலாத்காரமாக திணிக்கப்பட்ட ஒன்று என்றும் அதனை அமுலாக்குவதில் நடைமுறை பிரச்சினைகள் இருப்பதாகவும் கூறிய அவர,; இந்த விடயத்தில் இந்திய கருத்தை அறிய இலங்கை அரசாங்கம் விரும்பிய போதிலும் இலங்கைக்கு உத்தரவு பிறப்பிக்க வேறு எவருக்கும் அதிகாரம் இல்லை என்றும் அவர் கூறினார்.
கடந்த புதன் கிழமை இந்த விடயம் நாடாளுமன்றத்திலும் எழுப்பப்பட்டது. 13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக புது டில்லியில் நடைபெற்ற பேச்சுவார்த்கைளின் போது ஆராயப்பட்டதாக ஊடகங்கள் கூறியிருப்பதாக கூறிய எதிர்க்கட்சித் தலைவர் ரனில் விக்கிரமசிங்க அது தொடர்பான உண்மையான நிலைமை என்ன என்று அரச தரப்பினரிடம் கேட்டார்.
அதற்கு பதிலளித்த வெளியுறவுத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்க முடியாது என்பதை ஜனாதிபதி ராஜபக்ஷ பிரதமர் மோடியிடம் விளக்கிக் கூறியதாக கூறினார். இந்த இரு அமைச்சர்களினதும் கூற்றுக்களை கவனிக்கும் போது இந்த விடயத்தில் அரசாங்கம் சிக்கியுள்ள நெருக்கடியின் பாரதூரத்தமன்மை தெரிகிறது.
இந்த விடயத்தில் இலங்கை;கு அறிவுறுத்தல் கூற எவருக்கும் அதிகாரம் இல்லை என அமைச்சர் சிலவா கூறுகிறார். அதாவது 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தைப் பற்றி ஆலோசனை கூறவோ அல்லது அதைப் பற்றி விசாரிக்கவோ இந்திய தலைவர்களுக்கு உரிமை இல்லை.
ஆனால் பொலிஸ் அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்க முடியாது என இந்திய பிரதமருக்கு விவரித்ததாக அமைச்சர் பீரிஸ் கூறுகிறார்.
அமைச்சர் சில்வா கூறுவது உண்மையாக இருந்தால் இலங்கையின் உள் விவகாரங்களைப் பற்றி இந்திய பிரதமர் ஏன் விசாரிக்க வேண்டும்? இலங்கை ஜனாதிபதி ஏன் அதற்கு பதிலளிக்க வேண்டும்? மறுவாழ்வுப் பணிகள், மீள் குடியேற்றம் போன்ற உள் நாட்டு விவகாரங்களை இந்திய பிரதமருக்கு ஏன் விவரிக்க வேண்டும்?
சித்தாந்த ரீதியாக பார்த்தால் அமைச்சர் சில்வா கூறுவது உண்மை தான். இலங்கை ஒரு சுதந்திரமான இறைமையுள்ள நாடாகவே கருதப்படுகிறது. எனவே இலங்கையின் அரசியலமைப்பைப் பற்றி கேள்வி எழுப்ப இந்திய பிரதமருக்கு உரிமையில்லை. காஷ்மீர் பிரச்சினையைப் பற்றி கேள்வியெழுப்ப இலங்கைக்கும் உரிமை இல்லை.
ஆனால் சித்தாந்தம் எதைக் கூறினாலும் நடைமுறையில் பலம் வாய்ந்த நாடுகள் சிறிய நாடுகள் மீது பல்வேறு விதமாக நெருக்குதல்களை திணிப்பது உலகெங்கும் காணக்கூடியதாக இருக்கும் நிலைமையாகும். பலம் வாய்ந்த நாடுகள் அயல் நாடுகளில் கிளர்ச்சிகளை உருவாக்குவதும் கிளர்ச்சிகளை முறியடிப்பதும் இந்த அடிப்படையிலேயே விளங்கிக் கொள்ள வேண்டும்.
இலங்கைத் தலைவர்கள் எதைக் கூறினாலும் இந்திய பிரதமர் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தைப் பற்றி கேள்வி எழுப்புவதையும் இலங்கை ஜனாதிபதி அதற்கு பதிலளிப்பதையும் அந்த அடிப்படையிலேயே விளங்கிக் கொள்ள வேண்டும்.
அமைச்சர்களான விமல் வீரவன்ச மற்றும் சம்பிக்க ரணவக்க ஆகியோர் எவ்வளவு தான் தேசப்பற்றாளர்களாக தம்மை காண்பித்துக் கொண்டாலும் அவர்களிடமும் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு இல்லை. தமிழீழ விடுதலை புலிகளும் இந்த பூகோள அரசியலை விளங்கிக கொள்ளவில்லை.
எவர் தேசப்பற்றை பேசினாலும் பலம் வாய்ந்த நாடுகளே நிலைமைகளை உருவாக்குகின்றன என்பதை கடந்த வருடம் இலங்கை தலைவர்கள் நன்றாக உணர்ந்து இருக்க வேண்டும். இலங்கை தலைவர்கள் கடந்த வருடம் மாகாண சபைகளை ரத்துச் செய்ய முயற்சி செய்தார்கள்.
அமைச்சர்களான விமல் வீரவன்ச மற்றும் சம்பிக்க ரணவக்க ஆகியோர் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை மாகாண சபைகளிடம் இருந்து பறிக்காமல் வட மாகாண சபைத் தேர்தலை நடத்தக் கூடாது என்று பெரும் கோஷம் நடத்தினர். ஆனால் இந்திய நெருக்குதலின் காரணமாக அந்த எதனையும் செய்யாது அரசாங்கம் வட மாகாண சபைத் தேர்தலை நடத்த நேரிட்டது.
வெளிநாட்டு நெருக்குதல்களை நிராகரிக்கும் அரசாங்கம் அதேவேளை வெளிநாட்டு நெருக்குதல்களை அழைப்பதையும் காணலாம். உதாரணமாக இலங்கையின் இனப் பிரச்சினையை தீர்ப்பதற்கு உதவுமாறு கடந்த நவம்பர் மாதம் பொதுநலவாய அமைப்பின் தலைவர்களின் மாநாட்டுக்காக இலங்கைக்கு வந்திருந்த தென் ஆபிரிக்க ஜனாதிபதி ஜாகொப் சூமாவிடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேட்டுக் கொண்டார்.
அதன் பிரகாரம் இலங்கைக்கான விசேட தூதுவராக சுமா பிரபல தொழிற்சங்கவாதியான சிறில் ரமபோஸாவை நியமித்துள்ளார். ரமபோஸா இந்த மாதம் இலங்கைக்கு வரவிருக்கிறார். அதற்கிடையில் அவர் தென் ஆபிரிக்காவின் பிரதி ஜனாதிபதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

cyril ramaposha 
ரமபோஸாவும் அனேகமாக இனப் பிரச்சினையின் தீரவாக அதிகார பரவலாக்கலையே சிபார்சு செய்யலாம். அப்போது அரசாங்கம் தாம் வரவழைத்தவரின் தீர்வையே நிராகரிக்கலாம். இந்த நிலைமையை விமல் வீரவன்ச முன்கூட்டியே ஊகித்துள்ளார் போலும். அதனால் அவர் அரசாங்கத்திடம் கையளித்துள்ள 12 அம்ச திட்டத்தில் தென் ஆபிரிக்க தலையீட்டை நிராகரித்துள்ளார்.
எவர் எதைச் செய்தாலும் சொன்னாலும்; 13ஆவது அரசியலமைப்புத் திருத்தமானது இந்திய இலங்கை உறவில முக்கிய துருப்புச் சீட்டாக அமைந்திருப்பதை எவராலும் மறுக்க முடியாது. அதேவேளை 13க்கு அப்பால் செல்ல வேண்டும் என்று இந்தியா ஒரு போதும் இலங்கையை கேட்கவில்லை. இலங்கை ஜனாதிபதி தான் அதனை முதன் முதலாக இந்து பத்திரிகையுடனான பேட்டியொன்றின் போது கூறினார். அதனை இப்போது இந்தியா வற்புறுத்திக் கேட்கிறது.
இந்திய தலையீடுகளுக்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கின்றன. ஒன்று இந்து சமுத்திர பிராந்தியத்தில் தமது ஆதிக்கத்தை நிலைநாட்ட இந்தியாவுக்குள்ள தேவையாகும். அதற்காக இந்தியா அயல் நாடுகளுக்கு பலவேறு நெருக்குதல்களை கொடுக்கிறது.
இரண்டாவது தான் தமிழ் நாட்டை சமாதானப்படுத்தி வைப்பதற்கான இந்தியாவின் தேவை. அதற்காக மத்திய அரசாங்கம் பலவீனதாக இருக்கிறதா பலமானதாக இருக்கிறதா என்பது முக்கியமாவதில்லை. இலங்கையின் முன்னாள் இந்திய தூதுவராகவிருந்து பின்னர் இந்திய வெளியுறவுத்துறை செயலாளராகவிருந்த நிருபமா ராவ் 2011ஆம் ஆண்டு ஜூன் 4அம் திகதி இலங்கையிலிருந்தும் மாலைத்தீவிலிருந்தும் இந்தியாவிற்குச் சென்றிருந்த ஊடகவியலாளர்கள் சிலரை சந்தித்த போது கூறிய கூற்றொன்று இந்த இடத்தில் கவனத்தில் கொள்வது முக்கியமாகும்.
தமிழ்நாடு என்பது இந்தியவிலிருந்து பிரிக்க முடியாத ஒரு பகுதி என்பதால் தமிழக மக்களின் கருத்தை புறக்கணிக்க இந்தியா தயாரில்லை என அவர் அப்போது கூறினார். இந்த இரண்டு காரணங்கள் இருக்கும் வரை இந்தியா இலங்கை விடயத்தில் தலையிடும். அதனை தடுக்க எவராலும் முடியாது.
ஆனால் இலங்கை தமிழ் மக்களிடமும் உலகமெங்கும் உள்ள தமிழர்கள் மத்தியிலும் தமிழீழத்திற்காக வாக்கெடுப்பை நடத்த ஐ.நா மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய புதிய பிரதமர் மோடியுடனான தமது முதலாவத சந்திப்பின் போது தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் விடுத்த கோரிக்கையை இந்திய பிரதமர் ஏற்றுக் கொள்வார் என்று கூற முடியாது.

-எம்.எஸ்.எம். ஐயூப்-
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger