உலகெங்கும் சுற்றுச்சூழல் பாதிப்புகளினால் வெய்யிலின் தாக்கம் அதிகரித்து வருகின்றது. இத்தகைய காலகட்டத்தில் இயற்கையாகவே உஷ்ண மண்டலப் பகுதிகளாக அமைந்துள்ள அரபு நாடுகளில் வெப்பத்தின் தாக்கம் இன்னும் அதிகமாகவே காணப்படும். இதனை உணர்ந்த சவுதி அரேபிய அரசு நாள் முழுவதும் திறந்தவெளியில் பணிபுரியும் தொழிலாளர்களின் நலன்களைக் கருத்தில்கொண்டு சில புதிய விதிமுறைகளை செயல்படுத்தியுள்ளது. அதன்படி வரும் செப்டம்பர் மாதம் முடிய வெளிப்புறங்களில் பணி புரியும் தொழிலாளர்கள் மதியம் 12 மணியிலிருந்து 3 மணி வரை வேலை செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றது.
எண்ணெய், எரிவாயு மற்றும் அவசரத் தேவைப் பணிகளில் ஈடுபடுவோரைத் தவிர மற்றவர்கள் அனைவருக்கும் இந்த விதிமுறை பொருந்தும்.இவர்களுக்குமே தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும் என்று அரசு வலியுறுத்தியுள்ளது. அவ்வாறு இல்லாவிடில் அவர்களின் பணி நிறுவனங்களுக்கு பெரும் அபராதம் விதிக்கப்படக்கூடும் அல்லது நிறுவனத்தையே மூடும் நிலைமையும் ஏற்படக்கூடும் என்று அரசு அறிக்கை விடுத்துள்ளது.
அனைத்து தொழில் ஆபத்துகளில் இருந்தும் பாதுகாப்பான வேலை சூழலை அளிக்க அரசு முயற்சிப்பதாகவும் இந்த அறிக்கை தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த விதிமுறை பின்பற்றப்படுவது குறித்த சந்தேகத்தை சில தொழிலாளர்கள் எழுப்பியுள்ளனர். இன்னும் சிலர் இதனால் தங்களின் ஊதியம் குறைக்கப்படலாம் என்ற அச்சத்தையும் தெரிவித்துள்ளனர்.
சவுதியின் அண்டை நாடான குவெட்டாரில் வரும் 2022ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடக்க உள்ளது. அதற்கான மைதானங்களை நிர்மாணிக்கும் ஏற்பாட்டில் மும்முரமாக இறங்கியுள்ள அந்நாட்டு அரசு ஆசியத் தொழிலாளர்களை நாள் முழுவதும் வேலை வாங்குவதாகப் புகார் எழுந்துள்ளது. ஆயினும் அவர்களின் பாதுகாப்பான பணி சூழலுக்கு தகுந்த ஏற்பாடுகளைச் செய்து தருவதாக அரசு தெரிவித்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
Post a Comment