பொதுபலசேனா அமைப்பின் பின்னணியில் நோர்வே: அளுத்கமை சதியை போட்டுடைத்த அமைச்சர்!!


அளுத்கமை, பேருவள மற்றும் வெலிபென்ன ஆகிய பகுதிகளில் கடந்த 15ஆம் திகதியும் 16ஆம் திகதியும் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட கொலை, கொள்ளை, தீ வைத்தல்  போன்றவன் செயல்களால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னமும் அகதிகளாக  ஆங்காங்கே தங்கியிருக்கிறார்கள். அவர்களது அழிக்கப்பட்ட மற்றும் சேதமாக்கப்பட்ட வீடுகளையும்   கடைகள் போன்ற தொழில் நிலையங்களையும் புனரமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதற்காக அரசாங்கம் 20 கோடி ரூபா ஒதுக்கியுள்ளதாக செயதிகள் கூறின. ஏற்பட்ட சேதம் 20 கோடி அல்ல என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் 20 கோடி ரூபாவால் அரசாங்கம் சேதமுற்ற கட்டிடங்களை புனரமைக்கப் போகிறது. தற்போது இராணுவம் புனரமைப்புப் பணிகளை ஆரம்பித்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இருந்தாலும் இது தேவை தானா வன்முறைகள் வெடிக்காத வகையில் அன்று அந்தக் கூட்டத்தை தடுத்து இருந்தால் இந்த உயிர், உடைமை சேதங்களும் இல்லை, 20 கோடி ரூபாவாவை செலவழிக்கவும் தேவையில்லை.
வன்செயல்களில் ஈடுபட்டதற்காக பொலிஸார் சுமார் 50 பேரை கைது செயதுள்ளனர். இதைப் பற்றிக் குறிப்பிடுகையில் கடற்றொழில் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன சுமார் 150 கடைகளை உடைத்ததற்காக 50 பேரை கைது செய்து இருக்கிறார்கள, அவ்வாராயின் ஒருவர் மூன்று கடைகள் வீதம் எரித்துள்ளனரா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
வன்முறைகளில் ஈடுபபட்டதாகத் தான் சிலரை கைது செய்து இருக்கிறார்களே தவிர வன்முறைகளை தூண்டியவர்களை கைது செய்யவில்லை என்று முஸ்லிம் தலைவர்கள் முறைப்பட்டுக் கொள்கிறார்கள். சிலர் பொது பல சேனாவின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை கைது செய்ய வேண்டும் என்றும் நேரடியாகவே கோரிக்கை விடுத்தனர்.
ஆனால் அத் தேரர் இனக் குரோதத்தை தூண்டினார் என்பதற்கு ஆதாரம் இல்லை என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன கூறியிருக்கிறார். இதே பொலிஸார் தான் தயா மாஸ்டர் புலிகள் அமைப்பின் சார்பில் செயற்பட்டாரா என்பதற்கு ஆதாரங்கள் இல்லை என்றும் கூறி அவருக்கு நீதிமன்றம் பிணை வழங்கச் செய்தனர்.
அரசாங்கம் இப்போது பல சர்வதேச அரங்குகளில் அளுத்கம தாக்குதல்களைப் பற்றி விளக்கமளித்து வருகிறது. உதாரணமாக அண்மையில் அரச பிரதிநிதிகள் ஐ.நா. மனித உரிமை பேரவையிலும் இலங்கைக்கான முஸ்லிம் நாடுகளின் தூதுவர்களுக்கான கூட்டமொன்றிலும் அவ்வாறு விளக்கமளித்துள்ளனர்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தான் கொழும்பிலுள்ள முஸ்லிம் நாடுகளின் தூதுவர்களை சந்தித்து விளக்கமளித்துள்ளார். அப்போது அவர் முக்கிய விடயம் ஒன்றை கூறியுள்ளார். அதாவது அளுத்கம வன்செயல்களுக்கு பின்னால் ஒரு சதி இருக்கிறது என்பதே.
இந்த சதிகாரர்கள் இரண்டு நோக்கங்களை கொண்டுள்ளனர் எனஅமைச்சர் கூறுகிறார். ஒன்று நாட்டில் வாழும் முஸ்லிம்களின் மனதில் அரசாங்கத்தைப் பற்றிய வெறுப்பை ஏற்படுத்துவதாகும். மற்றையது அரசாங்கத்துக்கும் முஸ்லிம் நாடுகளுக்கும் இடையே பகைமையை ஏற்படுத்தி சர்வதேச அரங்குகளில் அரசாங்கம் பெறும் ஆதரவை தடுப்பதாகும் என அமைச்சர் தூதுவர்களிடம் கூறினார்.இந்த சதி நன்கு திட்டமிடப்பட்டது என்றும் அதற்கு வெளிநாட்டு மூலங்களிடமிருந்து நிதி மற்றும் பொருள் உதவி வழங்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.
இது மிகப் பாரதூரமான தகவலாகும். ஏனெனில் உள் நாட்டில் முஸ்லிம்களையும் சர்வதேச ரீதியில் முஸ்லிம் நாடுகளையும் அரசாங்கத்திற்கு எதிராக செயற்படச் செய்வதன் நோக்கம் இலங்கையில் ஆட்சி மாற்றமேயல்லாது வேறொன்றாக இருக்க முடியாது. அந்த சதிக்கு வெளிநாடுகள் நிதி உதவி வழங்குவதாக கூறுவது மிகப் பாரதூரமானதாகும்.
ஆனால் இந்த சதிகாரர்கள் யார் என்பதை அமைச்சர் அம்பலப்படுத்தவில்லை.அதேவேளை அவர் இரு தரப்பினரிலும் தீவிரவாதிகள் இருப்பதாகவும் தூதுவர்களிடம் கூறியிருக்கிறார். அவ்வாறாயின் இந்த சதிகாரர்கள் சிஙகளவர்களா அல்லது முஸ்லிம்களா? அமைச்சர் அதனையும் கூறவில்லை.
ஒரு புறம் அரசாங்கத்தற்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலும் மறுபுறம் அரசாங்கத்திற்கும் முஸ்லிம் நாடுகளுக்கும் இடையலும் முரண்பாட்டை ஏற்படுத்த சதி நடப்பதாக வெளிவிவகாரஅமைச்சர் கூறும் போது அவரது அமைச்சின் கீள் செயற்படும் ஜெனிவாவிலுள்ள ஐ.நா.வுக்கான இலங்கையின் பிரதி நிரந்தர பிரதிநிதி மனீஷா குணசேகர மற்றொரு கதையைக் கூறுகிறார்.
இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக வெடித்த வன்செயல்களைப் பற்றி நோர்வே, கனடா மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் ஐ.நா. மனித உரிமை பேரவையின் 26 ஆவது கூட்டத் தொடரின் விவாத நேரத்தில் கருத்துக்களைதெரிவித்திருந்தனர்.
இதனை அடுத்து பதிலளிப்பதற்கான உரிமையின் அடிப்படையில் அங்கு விளக்கமளித்த குணசேகர சர்ச்சையொன்றை அடுத்து பௌத்த பிக்கு ஒருவர் கடந்த 12ஆம் திகதி முஸ்லிம்களால் தாக்கப்பட்டதாகவும் பின்னர் 15ஆம் திகதி அந்த பிக்கு மற்றும் சிலருடன் விகாரைக்குச் செல்லும் போது கல் வீச்சுக்கு இலக்காகியதாகவும் அதுவே வன்முறைகளுக்கு காரணமாகியது என்றும் கூறியிருக்கிறார்.
அவரது கருத்துப் படி இந்த வன்செயல்கள் எவ்வித பின்னணி நிலைமையும் இல்லாமல் தற்செயலான இரு சம்பவங்களின் காரணமாகவே உருவாகியுள்ளன. கடந்த கால முஸ்லிம் விரோத பிரசாரங்கள் மற்றும் குரோத பேச்சுக்கள் இதற்கு எவ்வகையிலும் காரணமாகவில்லை என்றும் வன் முறைகளை தூண்டுவதற்காகவே அன்று அளுத்கமவில் கூட்டமொன்று நடத்தப்பட்டவில்லை என்றம் அவர் கூறுகிறார் போலும்.
பிக்கு இரண்டு முறை முஸ்லிம்களால் தாக்குதலுக்குள்ளானமை தான் வன்முறைக்கு காரணம் என வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் முஸ்லிம் நாடுகளின் தூதுவர்களிடம் கூறவில்லை.
அதேபோல் இலங்கை அரசாங்கத்தைப் பற்றி உள்நாட்டு முஸ்லிம்மக்கள் மத்தியிலும் முஸ்லிம் நாடுகள் மத்தியிலும் வெறுப்பை ஏற்படுத்தும் சதியொன்றின் விளைவாகவே அளுத்கம பகுதியில் வன்முறைகள் வெடித்ததாக அமைச்சின் அதிகாரியான குணசேகர ஐ.நா. மனித உரிமை பேரவையில் கூறவும் இல்லை. இருவரும் கூறுவது ஒன்றாக இருந்தால் சதிகாரர்கள் யாராக இருக்கலாம்?
அதேவேளை, திருமதி குணசேகரவின் விளக்கத்தை இலங்கை அரசாங்கம் செய்தி அறிக்கையாக வெளியிட்டது. ஆனால் அதிலும் பிக்கு தாக்கபக்பட்டமை தான் வன்முறைகளுக்கு காரணம் என்ற கருத்து அகற்றப்பட்டு இருந்தது. அதற்கு பதிலாக ‘வன்முறைக்கு ஏதுவான நிலைமை’என்று சுருக்கமாக கூறுப்பட்டு இருந்தது. அமைச்சரினதும் குணசேகரவினதும் அரசாங்கத்தினதும் இந்த மூன்று விளக்கங்களையும் மேற்படி தூதுவர்களும் வாசித்திருப்பார்கள். மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடுகளின் பிரதிகளும் ஏனைய நாடுகளின் பிரதிநிதிகளும் வாசித்திருப்பார்கள். அவர்கள் இவற்றில் உள்ள முரண்பாட்டை விளங்கிக் கொண்டிருக்க மாட்டார்களா?
கடந்த இரண்டு வருடங்களாக மனித உரிமை பேரவையில் அமெரிக்கா தலைமையிலான சில நாடுகளால் சமர்ப்பிக்கப்பட்டு இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக நிறைவேற்றப்பட்ட இரண்டு பிரேரணைகளிலும் இலங்கையில் சிறுபான்மை சமயத்தவர்கள் தாக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. அவ்வாறிருக்கத் தான் குணசேகர பிக்கு ஒருவர் தாக்கப்பட்டமை தான் வன்முறைகளுக்கு காரணம் என கூறுகிறார்.
முஸ்லிம்கள் உட்பட சிறுபான்மை சமயத்தவர்கள் தாக்கப்பட்டு வருவதாக, அமெரிக்கா உட்பட பிரதான நாடுகள் அரசாங்கத்தை குற்றஞ்சாட்டி வரும் நிலையில் உண்மையிலேயே அமைச்சர் கூறுவதைப் போல் முஸ்லிம்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில முறுகல் நிலையை உருவாக்க சதியொன்று இருப்பதாக இருந்தால், அதனை எடுத்துக் காட்டி அந்த சதியின் காரணமாகவே சிறுபான்மை சமயத்தவர்கள் தாக்கப்பட்டு வருகிறார்கள்,
இது அரசாங்கத்திற்கு எதிரான சதியே தவிர அரசாங்கம் அந்த தாக்குதல்களை நியாயப்படுத்தவில்லை என்பதை அரசாங்கம் மனித உரிமை பேரவையிலேயே கூறியிருக்க வேண்டும்.
அதேவேளை, உண்மையிலேயே முஸ்லிம்கள் தான் வன் முறைகளுக்கு காரணமாக இருந்தால் அதனை முஸ்லிம் நாடுகளின் தூதுவர்களிடம் கூறாது அவர்களிடம் அந்த சதி இந்த சதி என்றெல்லாம் வேறு கதைகளை ஏன் கூற வேண்டும்?
முஸ்லிம்களுக்கு எதிரான பிரசாரங்கள் மற்றும் தாக்குதல்களின் பின்னால் சதியொன்று இருப்பதாக அமைச்சர் விமல் வீரவன்சவும் நீண்ட காலமாக கூறி வருகிறார்.7 வீதமான முஸ்லிம் வாக்குகளை அடுத்த ஜனாதிபதித் தேர்தலின் போது மஹிந்த ராஜபக்ஷவுக்கு கிடைக்காமல் செய்து ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்துவதே இந்த சதியின் நோக்கமாகும் என வீரவன்ச கூறுகிறார்.
ஆனால் வெளிவிவகார அமைச்சரைப் போலல்லாது அவர் சதி காரர்களாக பொது பல சேனாவையே குறிப்பிடுகிறார். அவ் அமைப்பினருக்கு நோர்வேயிடமிருந்து இந்த சதிக்காக நிதி உதவி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.
உண்மையிலேயே அவரது குற்றச்சாட்டுக்கு அடித்தளம் இல்லாமல் இல்லை. 2011 ஆம் ஆண்டு பொது பல சேனா அமைப்பின் தலைவர்கள் 8 பேர் நோர்வேக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். அப்போது இந்த அமைப்பு அமைக்கப்பட்டு இருக்கவில்லை. ஆனால் அந்த விஜயத்தை அடுத்து அதே குழுவினர் தான் பொது பல சேனா அமைப்பை உருவாக்கினர்.
இந்த விஜயத்தைப் பற்றி பின்னர் கொழும்பிலுள்ள நோர்வே தூதரகம் அறிக்கையொன்றை வெளியிட்டு இருந்தது. அதில் இவ்வாறு குறிப்பிடப்பட்டு இருந்தது.
இலங்கையின் இனச் சவால் தொடர்பான அரசியல் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக பொதுக் கொள்கையொன்றை உருவாக்கிக் கொள்வதற்கான வழிமுறைகளை கண்டறியுமுகமாக நோர்வேயிலுள்ள புலம்பெயர் தமிழர்களை சந்திப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக 2011ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கலகொடஅத்தே ஞானசார தேரர் வேர்ல்ட் வீவ் இண்டர்நெஷனல் நிறுவனத்தை அணுகினார்.
அதன் படி அவ்வாண்டு ஒக்டோபர் மாதம் நோர்வேயில் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த விஜயத்தின் தொடர்ச்சியாக நோர்டிக் இண்டர்நெஷனல் பவுண்டேஷன் நிறுவனத்தின் கோரிக்கையின் பிரகாரம் நோர்வே வெளியுறவுத்துறை அமைச்சு இலங்கையில் நல்லிணக்கத் திட்டமொன்றுக்காக நிதி உதவி வழங்கியது.
நோர்வே நிதியுதவியுடன் செயற்படும் இந்த நல்லிணக்க திட்டம் என்ன என்பது இதுவரை தெளிவாகவில்லை.  எனவே, தான் இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக நோர்வே நிதியுதவி பெற்று பொது பல சேனா அமைப்பு செயற்படுகிறது என வீரவன்ச கூறுகிறார்.
அவரது வாதத்தின் படி மேற்கத்திய நாடுகள் இலங்கையில் இன முறுகல் நிலைமையை உருவாக்கி அந்த முறுகல் நிலையின் பொறுப்பை இலங்கை அரசாங்கத்தின் தலையிலேயே போடுகிறது. அதன் மூலம் ஆட்சி மாற்றத்திற்காக அந் நாடுகள் செயற்படுகின்றன. இது உண்மையாக இருந்தால் நாட்டின் தலைவர்களும் தமது இனவாதத்தின் காரணமாக இந்த விடயத்தை புரிந்து கொள்ளாமல் பொது பல சேனா அமைப்பு விடயத்தில் நெகிழ்வுத்தனமாக நடந்து கொள்கிறார்கள் என்றே விளங்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது.
ஆனால், வெளியுறவுத்துறை அமைச்சரே சதியொன்று இருப்பதாக கூறுகிறார். இதனை அரசாங்கம் நிராகரிப்பதாக கூற முடியாது. இது அரசாங்கத்தின் நிலைப்பாடாகத் தான் இருக்க வேண்டும். ஆனால் அரசாங்கம் வீரவன்சவின் நிலைப்பாட்டை ஏற்கவில்லை.
அதனால், தான் அரசாங்கம் பொது பல சேனா விடயத்தில் நெகிழ்வாக நடந்து கொள்கிறது. அதேவேளை அமைச்சர்களான ரவூப் ஹக்கீம் மற்றும் ரிஷாத் பதியுத்தீன் ஆகியோர் பொது பல சேனாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சரவையில் கூறிய போது ஜனாதிபதி கோபமாக நடந்து கொண்டார் என்றும் கூறப்படுகிறது.அவ்வாறாயின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கூறும் சதி யாருடையது?
இலங்கையில் இன முறுகலை ஏற்படுத்துவது அரசாங்கமே என மக்கள் விடுதலை முன்னணி கூறுகிறது. மக்களின் உண்மையான பொருளாதார பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காகவே அரசாங்கம் இவ்வாறான முறுகல்களை வளர்க்கிறது என அக் கட்சி கூறுகிறது.
அண்மையில் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்ய்பட்பட்ட கூட்டமொன்றில் உரையாற்றும் போது ம.வி.மு. தலைவர் அனுர குமார திஸாநாயக்கவும் இக் கருத்தை தெரிவித்தார்.
ஐக்கி தேசிய கட்சியும் இதே கருத்தைத் தான் கொண்டிருக்கிறது. ஐ.தே.க. தலைவர்களில் ஒருவரான மங்கள சமரவீர இந்த வாதத்தை மேலும் முன்னெடுத்துச் சென்று பாதுகாப்புத் துறையினரும் இந்த வன்முறைகக்குப் பின்னால் இருப்பதாக கூறுகிறார். இப்போது அது அரசியல் அரங்கில் பெரும் சர்ச்சையாகியுள்ளது.
ஆனால், அரசாங்கமே முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை தூண்டுவதானால் அரசாங்கமே நட்டமடையப் போகிறது என வெளியுறவுத்துறை அமைச்சர் வாதாடுகிறார். அரசாங்கம் முஸ்லிம் வாக்குகளை இழக்க விரும்பவில்லை தான்.
ஆனால், இது போன்ற சமபவங்களின் போது சிங்கள மக்களா முஸ்லிம் மக்களா என்ற நிலை ஏற்பட்டால் அரசாங்கம் சிங்கள மக்களின் பக்கத்தை தான் எடுக்கும். அல்லது இது போன்ற பிரச்சினைகளின் மூலம் சிங்கள மக்களின் ஆதரவை தக்கவைத்துக் கொள்ளலாம் என நினைக்கும் தலைவர்களும் அரசாங்கத்தில் இருக்கலாம்.
பேராசிரியர் பீரிஸ் கூறுவதைப் போல் முஸ்லிம்களை அந்நியப்படுத்தி அரசாங்கத்தை கவிழ்க்கும் சதியொன்று இருந்தால் அரசாங்கம் அதனை தமது ஆதரவாளர்களான சிங்கள மக்களுக்கே முதலில் அம்பலப்படுத்த வேண்டும். ஏனெனில் அந்த மக்களே இந்த அரசாங்கத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று உறுதியாக இருக்கிறார்கள்.
-எம்.எஸ்.எம்.ஐயூப்
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger