இலங்கையில் பௌத்த தீவிரவாதிகள் சில ஆண்டுகளாக மேற்கொண்டு வரும் வெறுப்பை தூண்டும் மோசமான முஸ்லிம் விரோத வன்முறை அலை தடுத்து நிறுத்த வேண்டும் என நியூயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
இலங்கையின் தென் பகுதி நகரான அளுத்கமவில் ஜூன் 15 ஆம் திகதி இடம்பெற்ற இரத்தம் தோய்ந்த வன்முறைகள் காரணமாக 4 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதுடன் 78 பேர் காயமடைந்தனர்.
அத்துடன் முஸ்லிம்களின் வீடுகள் மற்றும் அவர்களின் வர்த்தக நிலையங்கள் அழிக்கப்பட்டன.
ஆளும் கட்சியான ராஜபக்ஷ குடும்பத்தினருடன் தொடர்புகளை கொண்டுள்ள பொதுபல சேனா என்ற புத்த சக்தி படை ஏற்பாடு செய்திருந்த முஸ்லிம் விரோத பேரணியை அடுத்தே இந்த பிரதேசத்தில் பதற்றம் அதிகரித்து வன்முறைகள் அரங்கேற்றப்பட்டன.
இலங்கையின் சிறுபான்மை இனம் ஒன்றுக்கு எதிரான அண்மைய தாக்குதல்கள், கடும் போக்கு பொதுபல சேனா, பாதுகாப்பு படைகள் மற்றும் ராஜபக்ஷவினர் இடையிலான உறவுகளை கோடிட்டு காட்டியுள்ளது.
பொதுபல சேனா கடந்த 15 ஆம் திகதி மேற்கொண்ட தாக்குதல்களை தடுக்க அரசாங்கம் தவறியமை தொடர்பில் சர்வதேச ரீதியில் எழுந்த கண்டங்களை அடுத்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சம்பவம் நடைபெற்ற பிரதேசங்களுக்கு விஜயம் செய்தார்.
அத்துடன் சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகளை நடத்தி சம்பந்தப்பட்டவர்களை சட்டத்திற்கு முன் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் ஐ.நா மனித உரிமை பேரவையிடம் உறுதியளித்தது.
ஐ.நா மனித உரிமை பேரவையில் கடந்த மார்ச் 27 ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைய நாட்டின் இறுதிக்கட்டப் போரில் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்த இலங்கை அரசாங்கம் அனுமதி மறுத்திருந்த நிலையில், அரசாங்கத்தின் மேற்படி உறுதி மொழி பலத்த கேள்வியை எழுப்பியுள்ளது.
ஜனாதிபதியின் கவலை மற்றும் செயற்பாடுகளுக்கு சிறந்த காரணம் உள்ளது. இந்த வன்முறைகள் நேரடியாக அவரது குடும்ப உறுப்பினர்கள் சம்பந்தப்பட்டுள்ள சுற்றுலா மற்றும் வர்த்தக துறையின் வளர்ச்சியை அச்சுறுத்துகிறது.
முஸ்லிம் சிறுபான்மையினரை வன்முறைகளில் இருந்து பாதுகாப்பதில் அரசாங்கம் தோல்வியடைந்தமை தொடர்பில் இலங்கை ஊடகங்களில் அரிதான விமர்சனங்கள் வெளியிடப்பட்டன.
இலங்கையின் நீதியமைச்சரும் நாட்டின் மூத்த முஸ்லிம் அமைச்சருமான ரவுப் ஹக்கீம், முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை தடுப்பதில் அரசாங்கம் தோல்வியடைந்ததாக பகிரங்கமாக புலம்பினார்.
இலங்கையின் பெருபான்மை பௌத்த மக்களில் பெரும்பாலானவர்கள் பொதுபல சேனாவுடன் இணைந்து செயற்பட வில்லை. இலங்கை இந்த விடயங்களை குணப்படுத்தும் தேவை உள்ளது.
இனங்கள் மற்றும் மதங்களுக்கு இடையிலான வெறுப்புணர்வுகளை தூண்டும் குழுக்கள் மற்றும் தனிநபர்களுக்கு எதிராக செயற்படுமாறு ராஜபக்ஷ பொலிஸாருக்கு கடந்த திங்கட் கிழமை வழங்கிய ஆலோசனைகளை வரவேற்கின்றோம்.
ஆனால் ஜனாதிபதி பொலிஸாருக்கு வழங்கிய ஆலோசனை அறிக்கையில் பொதுபல சேனாவின் பெயரை குறிப்பிட்டு கூறவில்லை எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
Post a Comment