'மெகா எர்த்' என்று சொல்லக்கூடிய ராட்சத பூமி ரக கோளங்கள் பேரண்டத்தில் காணப்படுவதாக வானியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
நமது பூமியைப் போலவே அழுத்தமான மேற்பரப்பை இந்த கோளங்கள் கொண்டிருந்தாலும், பூமியை விட பல மடங்கு பெரிதானவை இவை என்று அவர்கள் கூறுகின்றனர்.
பூமியை விட 17 மடங்கு எடை கூடிய கோளம் ஒன்று தொலைதூரத்து நட்சத்திரம் ஒன்றைச் சுற்றி வலம் வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த புதிய ரக கோளங்களை வகைப்படுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள ராட்சத கிரகத்துக்கு கெப்லர் 10 சி என்று பெயரிடப்பட்டுள்ளது.
பூமியிலிருந்து 560 ஒளியாண்டுகள் தூரத்தில் இருக்கிற நட்சத்திரம் ஒன்றைச் சுற்றி இந்த கிரகம் வலம் வருகிறது.
இவ்வளவு அதிகமான எடை ஒரு கிரகத்துக்கு வருமானால், அது சுற்றுவட்டாரத்திலுள்ள அனைத்து ஹைட்ரஜன் அணுக்களையும் ஈர்த்து ஜூபிடர் அதாவது வியாழன் கிரகம் போல வாயுக் கிரகமாகவோ, நெப்டியூன் போல பனிக்கட்டி கிரகமாகவோதான் இருக்கும் என்று விஞ்ஞானிகள் கருதிவந்தனர்.
ஆனால் அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் விதமாக கெப்ளர் 10 சி, அழுத்தமான மேற்பரப்பைக் கொண்டுள்ளது
பூமியை விட இரண்டு மூன்று மடங்கு விட்டம் கொண்டுள்ள இந்த கிரகம் 17 மடங்கு எடையைப் பெற்றுள்ளது என்றால், இந்தக் கிரகம் பூமியை விட அடர்த்தியானது என்று தெரியவருகிறது.
Post a Comment