இஸ்லாம் மார்க்கத்தின் ஐம்பெரும் கடமைகளுள் ஒன்றான புனித ரமலான் நோன்பு இம்மாத இறுதியில் துவங்கவுள்ளது. அதனை தொடர்ந்து ஈகை திருநாள் என்றழைக்கப்படும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது.
இந்தியாவைப் பொருத்தவரை, இந்த நோன்பு காலங்களில் இஸ்லாமிய மக்கள் சுமார் 12 முதல் 13 மணிநேரம் அன்னம், தண்ணீர் அருந்தாமல் பசித்திருந்து, படைத்தவனை தியானித்தும், அவனை வணங்கியும் இந்த நோன்பு மாதத்தை நிறைவு செய்வது, நாம் அனைவரும் மிக நன்கறிந்த ஒன்றாகும்.
இந்த நோன்பு நேரமானது, பூகோள அமைப்புக்கு ஏற்ற வகையில், பூமத்திய ரேகையை மையமாக கொண்டு உலகின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு வகையில் கடைபிடிக்கப்படுவது பலர் அறியாத தகவலாகவும் உள்ளது.
குறிப்பாக, குளிர்காலம் தொடங்கியுள்ள பூமத்திய ரேகையின் தென்பகுதியில் உள்ள நாடுகளில் நோன்பிருப்பது 10 மணி நேரமாகவும், அதற்கு எதிர்மாறாக கோடைக்காலம் நிலவும் வடபகுதியில் சுமார் 20 மணி நேரமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அபுதாபியில் உள்ள ஒரு இஸ்லாமிய நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, கத்தார், பஹ்ரைன், குவைத் உள்ளிட்ட அரபு அமீரக நாடுகளில் ஒரு நாளின் 15 மணி நேரம் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபியா மற்றும் ஏமனின் தென்பகுதியில் 14 மணி நேரமாகவும், ஈராக், சிரியா மற்றும் அவற்றின் அண்டை நாடுகளில் 15.5 முதல் 16 மணி நேரமும் நோன்பு அனுசரிக்கப்பட வேண்டும்.
துருக்கியில் 17 மணி நேரமும், இத்தாலியில் 18 மணி நேரமும், மத்திய பிரான்சில் 19 மணி நேரமும், தெற்கு ஜெர்மனியில் 20 மணி நேரமும், அதற்கு எதிர்மாறாக சிலி நாட்டில் ஒரு நாளைக்கு 10 மணி நேரமும் நோன்பு அனுசரிக்கப்படும் என்று உலகளாவிய அளவில் நோன்பின் நேரத்தை குறிப்பிடும் அந்த வரைப்பட அட்டவணை குறிப்பிட்டுள்ளது.
Post a Comment