ஆர்ப்பரிக்கும் அசத்திய வாதிகளும் அமைதிகாக்கும் அல்லாஹ்வின் அடிமைகளும்

நுழைவாயில் - மே மாத அழைப்பு இதழின் ஆசிரியர் கருத்து


தளர்ந்து விடாதீர்கள்! கவலைப் படாதீர்கள்! நம்பிக்கை கொண்டிருந்தால் நீங்களே உயர்ந்தவர்கள். உங்களுக்கு (போரில்) ஒரு காயம் ஏற்பட்டால் அந்தக் கூட்டத்திற்கும் இது போன்ற காயம் ஏற்பட்டிருக்கிறது. காலத்தை மக்களிடையே நாம் சுழல விடுகிறோம். நம்பிக்கை கொண்டோரை அல்லாஹ் அடையாளம் காட்டவும், உங்களில் உயிர் தியாகிகளை ஏற்படுத்தவுமே (இவ்வாறு துன்பத்தைத் தருகிறான்). அநீதி இழைத்தோரை அல்லாஹ் விரும்ப மாட்டான்.” (3:139 - 140)

தூவானமாய் ஆரம்பித்த இனவாதம் இன்று அணைகளை உடைத்து காட்டாற்று வௌளமாய் இலங்கை முழுவதும் வியாபிக்க ஆரம்பித்து விஸ்பரூபம் எடுத்துள்ளது. முஸ்லிம்களின் இருப்பு, வியாபாரம், பொருளாதாரம், ஜனநாயக உரிமைகள், வழிபாட்டுத் தளங்கள் உட்பட அனைத்து வாழ்வியல் உரிமைகளையும் காவு கொள்ளும் விதமாய் காவியுடை தரித்த சில காடையர்கள் களமிரங்கியுள்ளமை இந்நாட்டின் அமைதிக்கு வைக்கப்படப் போகும் பெரும் ஆப்பாகவே நோக்கப்படல் வேண்டும்.

ஏலவே, முஸ்லிம்களை தெருச்சண்டைக்கு வம்பிலுக்கும் விதமாய் பொதுபல சேனா எனும் பச்சை இனவாத அமைப்பினால் தீ மூட்ட எத்தனித்த தெவனகல பிரச்சினை மற்றும் மாவனல்லை ஹஸன் மாவத்தை அநகாரிக தர்மபால மாவத்தையாக பெயர் மாற்றம் செய்தமை உள்ளிட்ட எதேச்சதிகார போக்குகள் குறித்த கருத்தாடலின் சூடு தணிவதற்குள்  இனவாதத்தின் கோர முகம் மீண்டும் வெளிப்பட ஆரம்பித்துள்ளமை சமூக தளத்தில் பாரிய அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளன.

குறிப்பாக, “பௌத்த பயங்கரவாதத்தின் முகம்என்று மேற்கு நாடுகளினால் வர்ணிக்கப்படும் மியன்மார்  நாட்டை சேர்ந்த அசின் விராது என்ற தேரருடனான பொதுபலசேனாவின் கலபொட அத்தே ஞான சார தேரரின் மியன்மார் சந்திப்பானது, இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராய் நடந்தேறிவரும் இனவாத செயற்பாடுகளில் பாரிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளமை அவதானிக்கப்பட வேண்டிய அம்சமாகும்.

மியன்மாரில் இடம்பெற்ற முஸ்லிம், பௌத்த இனக்கலவரங்கள் தொடர்பில் ஆராய்வதற்காகவே தாம் மியன்மார் விஜயத்தை மேற்கொண்டதாக பொது பல சேனாவின் தலைவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தார். முழுமையாக முஸ்லிம்களை இனச்சுத்திகரிப்பு செய்தமையை இனக்கலவரம்என்ற ஒற்றைச் சொல்லைக்கொண்டு வசதியாய் மூடிமறைத்து அறிக்கை விட்டதன் மர்மம் தற்போது மெல்லத் துளங்க ஆரம்பித்துள்ளது என்றால் மிகையாகாது. மியன்மார் இனச்சுத்திகரிப்பை முன்மாதிரியாய் கொண்டு இலங்கை வாழ் முஸ்லிம்களையும் கருவறுக்க முனையும் நாசகார செயற்பாடுகளை நோக்கி நாசூக்காக காய் நகர்த்தும் நரித் தந்திரத்தில் தற்போது இனவாத சக்திகள் ஈடுபட்டுள்ளன. பெரும்பான்மை பௌத்தர்களின் உணர்வலைகளை முஸ்லிம்களுக்கு எதிராக திருப்பிவிடும் எத்தனங்களில் TNL  தொலைக்காட்சி சேவை உள்ளிட்ட இன்னும் சில ஊடகங்கள் இனவாதத்தின் ஒருபக்க ஊதுகுழலாய் நின்று தொழிற்பட்டு வருகின்றமை இனத்துவேசத்தின் உச்சத்தை வெளிக்காட்ட போதுமான சான்றாகும்.

இதுகால வரை சாடை மாடையாக இஸ்லாத்தையும், திருக்குர்ஆனையும் விமர்சித்த இனவாத சக்திகள் தற்போது நேரடியாக இஸ்லாத்தை எதிர்த்து போர் கொடி தூக்கியுள்ளன. திருக்குர்ஆனா? பௌத்த தர்மமா?’ எனும் தலைப்பில் நேரடி விவாதத்திற்கு நாம் தயார். முஸ்லிம்களில் யாராவது தயாரா? என பொது பல சேனா அமைப்பினர் பகிரங்க விவாத அழைப்பினை விட்டுள்ளனர். ஹலால், ஜிஹாத், ஹிஜாப் என்று ஆரம்பித்து தற்போது குர்ஆன் இறைவேதம் தானா என்பதை உரசிப்பார்க்கும் களத்தில் இனவாதம் இறங்கியுள்ளது. சத்தியத்தை அசத்தியமாகவும், அசத்தியத்தை சத்தியமாகவும் இருட்டடிப்புச் செய்யும் கைங்கரியத்தில் அசத்தியவாதிகள் முனைப்பு காட்டி வருகின்றனர்.

இஸ்லாத்தின் மீதும், குர்ஆனின் மீதும் இனவாதிகளினால் இத்துனை காலமாய் சுமத்தப்பட்டு வந்த களங்கத்தை துடைத்தெறிந்து, பெரும்பான்மை மக்களுக்கு இஸ்லாத்தின் இனிய செய்தியினை எடுத்துச்சொல்லி, படைப்பாளன் அல்லாஹ்வை அறிமுகப்படுத்தும் அருமையான சந்தர்ப்பத்தை அல்லாஹ் இலங்கைவாழ் முஸ்லிம்களுக்கு வழங்கியுள்ளான் என்றே சொல்ல வேண்டும். குர்ஆன் இறைவேதம் தான் என்பதை ஆணி அறைந்தாற் போல் எடுத்துச் சொல்லும் இப்பொன்னான வாய்ப்பை முஸ்லிம்களின் இஸ்லாமிய தலைமை பீடங்கள் என்று மார்தட்டிக் கொள்ளும் எந்தவொரு அமைப்பினரும் இந்நிமிடம் வரை பயன்படுத்த வில்லை என்பது இவ்வும்மத்தின் அழைப்புப் பணியில் நிலவும் பலவீனத்துக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். ஜம்இய்யதுல் உலமா, தேசிய ஷூரா சபை, ஜமாஅதே இஸ்லாமி, ஜமாஅதுஸ் ஸலாமா, தப்லீக் ஜமாஅத், ரீகாக்கள் என்று இலங்கையில் உள்ள இஸ்லாமிய இயக்கங்கள் அனைத்தும் இனவாதிகளின் விவாத அழைப்பை கேட்டு கதிகலங்கி வாய்பொத்தி மௌனிகளாக வீற்றிருக்கின்றமை இஸ்லாமிய இயக்கங்களின் தொடை நடுங்கித்தனத்தையும், கோழைத்தனத்தையுமே கோடிட்டுக் காட்டுகின்றது. அல்லாஹ்வின் கலாமின் உண்மைத் தன்மையை உரத்துச் சொல்வதற்கே தொடை நடுங்கும் இஸ்லாமிய (?) இயக்கங்களும் அமைப்புகளும் முஸ்லிம்களின் இருப்பை உறுதிப்படுத்துவதற்காகவும், ரிமைகளை வென்றெடுப்பதற்காகவும் களமிறங்குவார்கள் என்று நம்புவது மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கிய கதையாகவே மாறும்.

இனவாதிகளின் அறைகூவலுக்கு நெஞ்சு நிமிர்த்தி குர்ஆன் குறித்தும், இஸ்லாம் குறித்தும் சுமத்தப்படும் எந்தவொரு விமர்சனத்திற்கும் பதில் சொல்லும் விதமாய் பொது பலசேனாவின் விவாத அழைப்பை ஏற்க ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் தயார்என்று நாம் ஊடகவியலாளர் ஒன்று கூடலின் போது பகிரங்கமாய் அறிவித்து, குர்ஆன் இறைவேதம் தான் என்பதை நிரூபிக்க முன்வந்தவுடன் எம்மோடு கைகோர்க்க கடமைப்பட்டவர்கள் எம்மை விமர்சித்து களமிறங்கியுள்ளமை நகைப்புக்கிடமானது மட்டுமல்ல, பச்சைத் துரோகத்தனமானதும் கூட. 

இனவாதிகளுடன் விவாதிப்பது உசிதமானது அல்ல! எங்கு பார்த்தாலும் முஸ்லிம்களுக்கு எதிரான போக்குகள் தலைதூக்கியுள்ள நிலையில் இவ்விவாதம் வேண்டத்தகாத விளைவுகளை மேலும் அதிகரிக்கும், பௌத்த மதத்தை விமர்சித்துக் கொண்டு இலங்கையில் எப்படி நாம் வாழலாம்?,’ என்று தங்களது கையாலாகாத் தனத்தை இஸ்லாமிய இயக்கவாதிகள் அறிக்கைகளாக வெளியிட்டுக் கொண்டு எம்மை எதிர்த்து வருவதை காணமுடிகிறது. அதுமட்டுமன்றி, ‘இவ்விவாத அழைப்பை விடுத்தமை ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் இலங்கை முஸ்லிம்களுக்குச் செய்த துரோகம்என்று எம்மீதே வசைபாடி வருவதனையும் அவதானிக்க முடிகிறது.

இனவாதிகளுடனான விவாத விடயத்தில் எம்மை விமர்சித்துத் திரியும் அன்பர்களுக்கு ஒன்றை சொல்லிக்கொள்கிறோம். குர்ஆனை உண்மைப்படுத்துவதற்காய் உயராத உங்கள் எழுத்துக்களும், பேச்சுக்களும் இந்த உலகத்தில் வாழ்வதனால் யாருக்கு என்ன பயன் இருக்க முடியும்? இனவாதிகளுடன் விவாதித்து குர்ஆனின் மகிமையை நிலைநிறுத்துவதால் எப்பேர்ப்பட்ட எதிர் விளைவுகளை சந்திக்க வேண்டி வந்தாலும் அதை இன்முகத்துடன் எதிர்கொள்பவன் தான் முஸ்லிம். பொது பல சேனா அல்ல, சிங்கள ராவய அல்ல, ஒட்டுமொத்த நாடே எமக்கெதிராய் திரண்டு வந்தாலும் ஓர் உண்மை முஸ்லிமின் ஈமான் அதிகரிக்க வேண்டுமே தவிர சேற்றில் நட்டிய கம்பமாய் நிலைதடுமாறிவிடக் கூடாது. இதுவே இறைமறை விதந்துரைக்கும் ஈமானிய மனிதர்களிடம் கருக்கொள்ள வேண்டிய பண்பு. மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிக மாக்கியது. எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்என்று அவர்கள் கூறினர்.” (3:173) 

ஹலாலிலும், ஹிஜாபிலும் இன்னபிற விடயங்களிலும் அமைதிகாத்தது போன்று அல் குர்ஆன் விடயத்திலும் நாம் அசட்டையாக இருந்து விடாது அவர்களிடம் அழகிய முறையில் விவாதம் செய்வீராக!’ (16:125) என்ற அல்லாஹ்வின் வாக்குக்கமைய களம் இறங்க வேண்டும். அல்லாஹ்வின் வார்த்தைகளுக்காய் உழைப்பவர்களுக்கு உதவி செய்ய அவனே போதுமானவன்!

நம் விஷயத்தில் உழைப்போருக்கு நமது வழிகளைக் காட்டுவோம். நன்மை செய்வோருடன் அல்லாஹ் இருக்கிறான்.” (29:69)


Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger