











இரண்டாம் இணைப்பு புங்குடுதீவில் படுகொலை செய்யப்பட்ட, ஈ.பி.டி.பி றெக்க்ஷனின் இன்றைய வழக்கு விசாரணை நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் றெக்க்ஷனின் படுகொலை தொடர்பான வழக்கு இன்றையதினம் யாழ். ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. குறித்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் (ஈ.பி.டி.பி) முன்னாள் யாழ் மாவட்டப் பொறுப்பாளரும், வட மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவருமாகிய கமலேந்திரன் கமல், அவரது உதவியாளர் மற்றும் றெக்க்ஷனின் மனைவி ஆகியோர் இன்றையதினம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டிருந்தனர். இவர்களின் சார்பில் முன்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டு யாழ். மாநகரசபையின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்து பின்னர் ஈ.பி.டி.பி அமைப்புடன் இணைந்து ஈ.பி.டி.பி கமலேந்திரன் கமலுடன் சேர்ந்து கடந்த மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்ட சட்டத்தரணி றெமீஜியஸ் ஆஜராகியிருந்த அதேவேளை, படுகொலை செய்யப்பட்ட றெக்க்ஷன் தரப்பில் ரெலோ இயக்கத்தின் முக்கியஸ்தர் சட்டத்தரணி சிறீகாந்தா அவர்கள் ஆஜராகியிருந்தார். வழக்கு விசாரணையைத் தொடர்ந்து இந்த வழக்கானது மீண்டும் எதிர்வரும் 23ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
அதுவரை படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மூன்று சந்தேகநபர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் எஸ். லெனின்குமார் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணையின் போது கமலேந்திரன் (கமல்) சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி றெமீஜியாஸ் அவர்கள், வட மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவர் என்கிற வகையில் கமலேந்திரன் வட மாகாணசபை அமர்வுகளில் பங்கேற்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும், எனவே அதற்கான அனுமதி வழங்க வேண்டுமென கேட்டுக் கொண்டார். இதனைச் செவிமடுத்த நீதிபதி அவர்கள், வட மாகாணசபை அமர்வுகளில் கலந்து கொள்ளும் போது கமலேந்திரன் எவருக்கும் இடையூறு விளைவிப்பது உள்ளிட்ட எந்தவொரு பிரச்சினைகளிலும் ஈடுபட மாட்டார் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
அதேபோன்று இவ்வழக்கின் சாட்சிகளை கலைப்பதற்கு அல்லது ஆதாரங்களை இல்லாமற் செய்வதற்கான எந்தவொரு நடவடிக்கையிலும் அவர் ஈடுபட மாட்டார் என்பதற்கான உத்தரவாதமும் வழங்கப்பட வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். அத்துடன் அவர் அமர்வுகளில் கலந்து கொள்ளலாம், இதில் எந்தவித பாதுகாப்பு பிரச்சினையும் இல்லையென்பதை உறுதிப்படுத்தும் வகையிலான பாதுகாப்பமைச்சின் கடிதமும் நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படும். மேற்குறித்த விடயங்கள் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில் அது குறித்து தாம் பரிசீலிப்பதாக நீதிபதி அவர்கள் தெரிவித்தார். இதேவேளை நீதிமன்றத்திற்கு வெளிப்பகுதியில் காத்திருந்த கமலேந்திரனின் மனைவி, மகன் மற்றும் உறவினர்களும், படுகொலை செய்யப்பட்ட றெக்க்ஷனின் மாமியார் அதாவது கைது செய்யப்பட்டுள்ள றெக்க்ஷனின் மனைவியின் தாயார் மற்றும் அவரது தம்பி படுகொலை செய்யப்பட்ட றெக்க்ஷனின் தாய், தந்தை, அக்கா, தங்கை உள்ளிட்ட உறவினர்களும் நீதிமன்றத்தில் காணப்பட்டதும் படுகொலை செய்யப்பட்ட றெக்க்ஷனின் தாய், தந்தை, அக்கா, தங்கை உள்ளிட்ட சிலரும் வருகை தந்தனர்.
இதேவேளை கைது செய்ப்பட்டுள்ள றெக்ஷனின் மனைவியின் தாயார் வழங்கிய செவ்வியில், தமது மகள் நேர்மையானவர் எனவும், தமது மகள் தேவையில்லாது இந்த சிக்கலுக்குள் மாட்டியிருப்பதாகவும் வழமை போன்று கூறியிருந்தார். ஆயினும் றெக்ஷனின் மாமியார் பொய்யே கூறுவதாக அவ்விடத்தில் இருந்த அவர்களின் ஒருசில உறவினரகள் தெரிவித்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த வகையில் றெக்ஷனின் உறவினர்கள் மாமியார் தெரிவிக்கின்ற கருத்துக்களை முற்றுமுழுதாக மறுத்த அவர்களின் உறவினர்கள் சிலர், றெக்ஷனின் மனைவியும் இந்தக் கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தமக்கு ஐயமின்றி புலனாவதாக தெரிவித்தனர். இதையடுத்து ரெக்சியனின் மாமியாருடன் தொடர்பு கொண்டு உரையாடிய போது “இக்கொலைக்கும், தனது மகளுக்கும் எதுவித சம்பந்தமும் இல்லையெனவும், எனது மகள் தவறான வழியில் நடந்தவர் இல்லையெனவும், ஈ.பி.டி.பி உறுப்பினர்களின் அச்சுருத்தலினாலேயே இதுபோன்ற வீண்பழி வந்துள்ளதாகவும், மரண வீட்டில் மட்டுமல்ல சடலத்துக்கு அண்மையிலும் இவர்கள் எம்மைச் சுற்றி நிற்க வேண்டிய அவசியம் என்ன?” எனவும் கேட்டார்.
இதேவேளை இன்றையதினம் றெக்க்ஷன் படுகொலை செய்யப்பட்டு 45ஆவது நாள் எனவும், இது தொடர்பான பிரார்த்தனைகளில் ஈடுபடுவதற்காக தாம் தேவாலயம் செல்லவுள்ளதாகவும் றெக்ஸனின் மாமியார் உள்ளிட்ட உறவினர்கள் தெரிவித்த அதேவேளை றெக்ஸனின் தாய், தந்தை & உறவினர்கள் தாம் கோயிலுக்கு செல்லவுள்ளதாக அவ்விடத்தில் தெரிவித்து சென்றனர். இதேவேளை இன்றையதினம் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் (ஈ.பி.டி.பி) முன்னாள் யாழ் மாவட்டப் பொறுப்பாளரும், வட மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவருமாகிய கமலேந்திரன் (கமல்) அவர்களுக்கு, பிணை வழங்கப்படலாம் எனக் கருதி ஈ.பி,டி.பி பிரமுகர்கள், ஆதரவாளர்களும் நீதிமன்ற வளாகத்தில் காணப்பட்டனர். குறிப்பாக “லாலா சோப்” நிறுவன உரிமையாளர் உட்பட பலரும் அங்கு காத்திருந்தனர். அதேபோன்று ஈ.பி.டி.பி கமலும் தனக்கு இன்று பிணை வழங்கப்படும் என்று தெரிவித்து உறவினர்கள் பலரை நீதிமன்றம் அழைத்து இருந்ததாகவும் தெரிய வருகின்றது. குறிப்பாக அவரது மனைவி, மகன் ஆகியோரும், கமலுடன் கைது செய்யப்பட்ட அவரது உதவியாளரின் மனைவியும், கைக்குழந்தையுடன் நீதிமன்றத்தில் காணப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. நீதிமன்றத்துக்கு வரும் போதும், மீண்டும் சிறைச்சாலைக்கு செல்லும் போதும் எம்மால் புகைப்படம் எடுக்கப்பட்ட போது ஈ.பி.டி.பி கமல் எந்தவித சலனமும் இன்றி சென்றதைக் காணக் கூடியதாக இருந்தது. ஆயினும் அவரது உதவியாளரும், படுகொலை செய்யப்பட்ட ரேக்சியனின் மனைவியும் முடிந்தவரை முகத்தை மறைத்ததும் குறிப்பிடத்தக்கது. அதேபோன்று ஈ.பி.டி.பி கமல் அவர்களின் மனைவியும், படுகொலை செய்யப்பட்ட ரேக்சியனின் உறவினர்களும் எந்தவித சலனமும் இன்றி புகைப்படம் எடுக்கும் போது இருந்த அதேவேளை ஈ.பி.டி.பி கமல் உடன் கைது செய்யப்பட்ட அவரது உதவியாளரின் மனைவி (நீல நிற சல்வாரி) தமது முகத்தை மறைக்கவே முன்றதும் குறிப்பிடத்தக்கது. இதேவேளை இன்றையதின ஈ.பி.டி.பி.யின் தினமுரசு பத்திரிகையில் ரேக்சியனின் 45ம் நாள் நினைவஞ்சலி அவரது மனைவியின் (கைதாகி சிறையில் இருக்கும் மனைவியின்) பெயரில் பிரசுரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.

Post a Comment