தெவனகல: இனவாத நிகழ்ச்சி நிரலின் புதிய இலக்கு



லதீப் பாரூக் 
தெவனகல மத்திய மலைநாட்டில், அமைந்திருக்கின்ற அழகியதொரு கிராமம்.  மாவனல்லையில் இருந்து, ஹெம்மாதகம வீதியில் ஆறு கிலோ மீட்டர் தொலைவில் இக்கிராமம் அமைந்திருக்கிறது. தெவனகலக் குன்று எனப்படுகின்ற இங்குள்ள குன்றைக் கொண்டே இக்கிராமம் அறியப்படுகின்றது. இங்கு பௌத்த விகாரையொன்றும் கல்வெட்டொன்றும் காணப்படுகின்றன. 
சிங்கள மன்னர்கள் காலத்தில், துருப்புக்களை வெவ்வேறு இடங்களுக்கு அனுப்புவதற்காக நிறுத்தி வைத்திருக்கின்ற தளமொன்றாக இவ்விடம் இருந்து வந்ததாக கிராம மக்கள் கூறுகிறார்கள்.
ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து கண்டி இராச்சியத்தைப் பாதுகாப்பதற்காக, முஸ்லிம்கள் அங்கு குடியமர்த்தப்பட்டதாகவும் கிராம முஸ்லிம்கள் குறிப்பிடுகிறார்கள்.      
பிரதேசத்தில் வாழ்கின்ற சிங்களவர்களும், முஸ்லிம்களும் விவசாயிகளாகவும், சிறியளவிலான வணிகர்களாகவும் இருந்து வந்திருக்கிறார்கள். இரண்டு இனத்தவர்களும் பரம்பரை பரம்பரையாக ஒரே குடும்பம் போல, சுக துக்கங்களில் தோளோடு தோள் நின்று, ஒருவருக்கொருவர் அந்நியோன்யமாக வாழ்ந்து வருகிறார்கள். இவ்வந்நியோன்யம் காரணமாக 2001 யில் மாவனல்லை முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களின் போது கூட, தெவனகல பாதிக்கப்படவில்லை.     
கடந்த சில தசாப்தங்களில் முஸ்லிம்கள் கல்வியில் ஆர்வம் காட்டியமையால் பெருமளவிலான துறைசார்ந்தவர்கள், புத்தி ஜீவிகள், மார்க்க அறிஞர்கள் போன்றவர்கள் இப்பிரதேசத்தில் உருவாகிஅவர்களது வாழ்க்கைத் தரமும் உயர்ந்திருக்கிறது. 
இனவாதிகளின் இலக்காக தெவனகல
அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய, தமது சொந்த நிகழ்ச்சி நிரலுக்காக  இனவெறியைத் தூண்டுகின்ற இனவெறியர்களை ஐந்து அல்லது ஆறு வருடங்களுக்கு முன்பு கூட இங்கு காண முடியாவிட்டாலும், அரசுக் கழகம் இருந்த காலத்திலேயே இனவாதிகள் தெவனகலவைக் குறி வைத்து விட்டார்கள் என்றே தோன்றுகிறது. 1940 ஆம் ஆண்டு தொல்பொருளியல் சட்டத்தின் கீழ், தெவனகலக் குன்று தொல்பொருளியல் திணைக்களத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. குன்றில் இருந்து, நூற்றைம்பது அடித் தூரம் இடையக வலையம் எனப் பிரகடனப் படுத்தப்பட்டது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டவர்கள், குறித்த பிரதேசத்தில் சிங்கள, முஸ்லிம் ஆகிய இரு சமூகங்களும் வாழ்கின்றன என்பதையும், அவர்களது தேவைகள் இவ்வறிவித்தலின் போது கருத்தில் எடுக்கப்பட வேண்டும் என்பதையும் அறிந்துதான் இருந்தார்கள். எவ்வாறாயினும், குன்றைத் தொல்பொருளியல் திணைக்களத்திற்குக் கீழ் கொண்டு வரும் விவகாரத்தில், எதுவித மனிதாபிமான ரீதியான அம்சங்களையும் இவர்கள் கருத்தில் கொள்ளவில்லை.     
மீண்டும் 2004, ஜூன், 4 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தலின் மூலம் இச்சட்டம் புதிப்பிக்கப்பட்டு, இடையக வலையம் நூற்றைம்பது அடியில் இருந்து, அறுநூறு அடியாக அதிகரிக்கப்பட்டது. 2005 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட மற்றொரு வர்த்தமானி அறிவித்தலில், இடையக வலையம் ஆயிரத்து இரு நூறு அடியாக அதிகரிக்கப்பட்டது. இதன் மூலம், இப்பிரதேசத்திற்குள் வாழ்ந்து வருகின்ற பெருந்தொகையான சிங்களவர்களும், முஸ்லிம்களும் இடையக வலையகத்திற்குள்கொண்டு வரப்பட்டார்கள்.    
இன்று இடையக வலையத்திற்குள், 500 முஸ்லிம் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 3000 பேர் வாழ்கின்றனர். தாம் இப்பிரதேசத்தில் இருநூறு ஆண்டுகளுக்கும் அதிகமாக வாழ்வதற்கு ஆதாரமான ஆவணங்களை இவர்கள் வைத்திருக்கிறார்கள். இப்பிரதேசத்தில் தாம் நானூறு ஆண்டுகளுக்கும் அதிகமாக வாழ்ந்து வருவதாகவும் சிலர் குறிப்பிடுகிறார்கள். இடையக வலையம் பிரகடனப்படுத்தப்பட்ட போது, இவர்களது உரிமைகள் வர்த்தமானி அறிவித்தல்கள் மூலம் மிக இலகுவாக காவு கொள்ளப்பட்டன.        
இவ்வர்த்தமானி அறிவித்தல்களையோ, அவை தமது வாழ்க்கை மற்றும் சொத்துக்கள் மீது ஏற்படுத்தப்போகும் தாக்கங்கள் பற்றியோ பிரதேச மக்கள் ஆரம்பத்தில் அறிந்திருக்கவில்லை. இவ்வர்த்தமானி அறிவித்தல்களால் எதுவிதத் தாக்கமும் அடையாத நிலையில், அவர்கள் தமது அன்றாட வாழ்க்கையைக் கொண்டு சென்றார்கள்.
மைத்ரீ சஹன பதனம (MSP)
எவ்வாறாயினும், 2004 இல் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலைத் தொடர்ந்து, தெவனகலப் பிரதேசத்திற்கு வெளியில் இருக்கின்ற குறிப்பிடத்தக்க தொகையிலான சிங்களவர்கள், குன்று சிங்களவர்களுக்குச் சொந்தமானது என்று கூறி, முஸ்லிம் விரோத சுலோகங்களை உச்சரிக்க ஆரம்பித்தார்கள். இதில் தெளிவாகப் புலப்பட்ட நோக்கம் சிங்களவர்களை முஸ்லிம்களுக்கு எதிராகத் திருப்புவதுதான்.      
இதற்கு முன் குரகலக் குன்று விவகாரத்திலும், தமது கருத்துக்களை நிலைநாட்டுவதற்கு அதிகாரிகளிடம் இருந்து கிடைத்த ஆதரவால் ஊக்கம் பெற்ற இனவாத சக்திகள், தெவனகலக் குன்றைச் சூழ ஆயிரத்து இருநூறு அடித் தூரத்தில் வாழ்கின்ற முஸ்லிம்களையும் துரத்தி அடிப்பதற்கான தமது பிரசாரத்தை ஆரம்பித்தன.      
எது எப்படியானாலும், இன்றும் கூட பிரதேசத்தில் வாழ்கின்ற சிங்களவர்களுக்கு இவை எதுவொன்றிலும் எந்த சம்பந்தமும் இல்லை. சிங்களவர்கள் மட்டுமன்றி, முஸ்லிம்களும் கூட குன்றைப் பாதுகாத்திருக்கிருக்கிறார்கள் என அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.   
குரகல அசம்பாவிதத்திற்குப் பிறகு, தெவனகல பிரதேசத்தைச் சேராத சர்ச்சைக்குரிய பிரதேச சபை அங்கத்தவர்கள் இருவர், மைத்ரீ சஹன பதனம (MSP) என்ற அமைப்பை உருவாக்கியதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றார்கள். இந்த அமைப்புக்கும் பிரதேச வாசிகளுக்குமோ, மைய நீரோட்ட சிங்கள சமூகத்திற்குமோ எந்த சம்பந்தமும் இல்லை.       
நாட்டின் பிற பகுதிகளில் இனவாத சக்திகள் செயற்படுவதைப் போன்று, சிங்கள சமூகத்தின் மனங்களில் நஞ்சு கலந்து, முஸ்லிம்களுக்கு எதிராகச் செயற்படத் தூண்டுகின்ற கைங்கர்யங்களில் இவர்கள் இறங்கினார்கள். இதன் ஒரு கட்டமாக துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தார்கள்.
தெவனகல தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடமாக இருப்பினும், மத ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததொரு தளமல்ல. எனினும், இது ஒரு புனித பூமி என்றும்,இடையக வலையத்தில் சிங்களவர்கள் மட்டுமே வாழ வேண்டும் என்றும், முஸ்லிம்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்றும், MSP தொடர்ச்சியாக மரபுரிமைத் திணைக்களத்தைக் கோரி வருகிறது. இவ்வினவாத சக்திகளினதும் மற்றும் மறைவான வேறு சில சக்திகளினதும் அழுத்தம் காரணமாக, தொல்பொருளியல் திணைக்கள அலுவலர்கள் பிரதேசத்திற்கு விஜயம் செய்து, குன்று மற்றும் இடையக வலையம் என்பவற்றை அடையாளமிட முயற்சி செய்திருக்கிறார்கள்.       
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த குன்றின் எல்லைகளைத் தெளிவாக அடையாளம் காணும் வகையில் அங்கீகரிக்கப்பட்ட நில அளவைத் திட்டமோ அல்லது ஆய்வோ மேற்கொள்ளப்படவில்லை என்கின்றனர் பிரதேசவாசிகள். எனவே, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த குன்றின் எல்லைகள் எவை? இடையக வலையம் எது? என்கிற விடயங்களை எவ்வாறு மரபுரிமைத் திணைக்களம் முடிவு செய்யப் போகிறது என்ற குழப்பம் நிழவுகிறது.      
அங்கீகரிக்கப்பட்ட, முறையானதொரு திட்டம் இல்லாமல், குன்றையும், அதனைச் சூழ இடையக வலையத்தையும் எவ்வாறு அடையாளப்படுத்த முடியும்? குன்றுக்குத் தாம் எவ்வித அபாயத்தையும் ஏற்படுத்தாமல் இருந்த போதும், நூற்றாண்டுகளாகத் தாம் வாழ்கின்ற நிலங்களில் இருந்து ஏன் தான் வெளியேற வேண்டும்? என்றும் அதிகாரிகளை வினவுகின்றனர் இங்குள்ள முஸ்லிம்கள்.        
தொல்பொருளியல் திணைக்களம், MSP யின் நிகழ்ச்சி நிரலை நடைமுறைத்த வேண்டியுள்ளது ஏன் என வினவும் இவர்கள், தொல்பொருளியல் திணைக்கள அதிகாரிகள் ஒன்றுக்குப் பின் முரணான அறிக்கைகளை வெளியிடுவதாகக் குற்றம் சுமத்துகின்றனர்.     
இதே வேளை, தொல்பொருளியல் திணைக்களத்தின் முன் அனுமதி இன்றி, இங்குள்ள கட்டிடங்களில் எவ்விதப் பழுதும் பார்க்கப்படக் கூடாது என தொல்பொருளியல் திணைக்களம் தடை விதித்துள்ளது. அவ்வாறு அனுமதி கோரி, விடுக்கப்பட்ட வேண்டுகோள்களும் மிக அரிதாகவே அங்கீகரிக்கப்பட்டுள்ளன.       
MSP யின் வேண்டுகோளில் இருக்கின்ற வெட்ககரமான அம்சம் என்னவென்றால், இடையக வலையத்தில் இருந்து முஸ்லிம்கள் மட்டுமே வெளியேற வேண்டும், சிங்களவர்கள் வெளியேறத் தேவையில்லை என்று கூறுவதுதான். இந்த நீதியற்ற வேண்டுகோள் குறித்து, தொல்பொருளியல் திணைக்கள அதிகாரிகளிடம் முஸ்லிம்கள் வினவிய போது, அவர்களிடம் இதற்கு எப்பதிலும் இல்லை.        
டிசம்பர், 04, 2013 அன்று கேகல்லை கச்சேரியில் இது தொடர்பிலான கூட்டமொன்று இடம்பெற்றது. அமைச்சர்கள் அதாஉட செனவிரத்ன மற்றும் ஜகத் பலசூரிய, தொல்பொருளியல் திணைக்களப் பணிப்பாளர் மற்றும் அவரது குழுவினர், AGA, GA, DS போன்ற அரச அதிகாரிகள், MPS அமைப்பின் பிரதிநிதிகள், மற்றும் பிரதேச முஸ்லிம்கள் என இதில் பலர் கலந்து கொண்டனர்.      
சந்திப்பைத் தொடர்ந்து தொல்பொருளியல் திணைக்கள அலுவலர்கள் டிசம்பர் 23 ஆம் திகதி குன்று மற்றும் இடையக வலையம் என்பவற்றை அடையாளப்படுத்துவதற்கு முன்  பிரதேசத்திற்கு விஜயம் செய்வதாக முடிவு செய்யப்பட்டது. இத்திகதி பிறகு பிற்போடப்பட்டது.    
அரசாங்கம் தம்மைப் பாதுகாப்பதற்கு எதுவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், என்ன நடக்கப் போகிறது என்ற நிச்சயமற்ற சூழ்நிலையில் பயத்துடன் இங்குள்ள மக்கள் வாழ்ந்து வருகின்றனர். 
தற்போது எழுகின்ற கேள்வி, நாடு சட்டம் ஒழுங்கு சீராக இல்லாமல், குற்றச்செயல்களிலும், ஊழலிலும் தத்தளித்து, வரலாற்றில் கஷ்டமானதொரு கால கட்டத்தைக் கடந்து கொண்டிருக்கும் போது, தெவனகல முஸ்லிம்களை, அவர்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த தமது நிலங்களில் இருந்து வெளியேற்றுவதுதான் இன்றுள்ள முன்னுரிமையா என்பதுதான்.  
இந்நகர்வு உண்மையில் தெவனகல முஸ்லிம்களின் அடிப்படை உரிமையை மீறுகின்ற செயலாகும். பலம் வாய்ந்த உலக நாடுகள் பல, இலங்கைக்கு எதிராக மனித உரிமை மீறல்க் குற்றச்சாட்டுகளைத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கின்றதொரு தருணத்தில், இத்தகைய நிகழ்வுகள் இடம்பெற்று வருவதுதான் கொடுமையானது.   
சிறிய தொகையினரான இனவாதிகள் மூலம் முஸ்லிமகள் அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவதை கண்டும் காணாதது போல் இருந்து கொண்டு, அரசாங்கம் புனர் வாழ்வு குறித்தும், சமூகங்கள் இடையிலான ஒற்றுமை குறித்தும் கதைத்து வருகிறது.
இத்தனையும் நடக்கின்ற போதும், எதுவும் நடக்காதது போல், முஸ்லிம் அரசியல்வாதிகள் செல்லாக் காசுகளாக அரசாங்கத்தில் இன்னும் தொத்திக் கொண்டிருக்கிறார்கள். 
இந்நிலையில், முஸ்லிம்கள் பெருமளவிற்கு ஏமாற்றம் அடைந்த நிலையில் வாழ்கிறார்கள். அடைக்கப்பட்டிருக்கும் இந்த ஏமாற்றம் வெடித்துச் சிதறனாலோ, அல்லது தமக்கெதிரான மாற்றாந்தாய் மனப்பான்மையான நடவடிக்கைகளுக்கு அவர்கள் எதிர்வினை ஒன்றைக் காட்டும் போதோ, அதனை சாட்டாகப் பயன்படுத்தி, நாடு தழுவிய ரீதியில் முஸ்லிம்களுக்கு எதிராகத் தாக்குதல்களை நடாத்தி, 1915 சிங்கள – முஸ்லிம் கலவரத்தை நினைவு கூற இவர்கள்  முற்படுகிறார்களோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.      
(சிங்ஹல ராவயவின் பெயரில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி. இதில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்து: “வழங்கிய வாக்குறுதியை, அப்படியே நிறைவேற்றும் வகையில், இலங்கையின் முதலாவது தற்கொலைத் தாக்குதல் படை, தெவ்னகலைக்கு.... டிசம்பர் 23 ஆம் திகதி. பங்குபற்றுவதற்கு விரும்புகின்ற சிங்கள ரத்தம் உள்ள சிங்கள சகோதர, சகோதரிகள் அனைவரும் (இதில் பங்குபற்றலாம்). வாளேந்திய வண்ணம் இலங்கை முன்னணிக்கு. தெவனகலை செல்வதற்கு நீங்களும் தயாரானால், எம்மைத் தொடர்பு கொள்ளுங்கள். கொழும்பில் இருந்து, போக்குவரத்து வசதி செய்து தருவதற்கு நாம் தயார். தொடர்புகளுக்கு: 0774593336”).        
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger