வடமாகாண சபைக்கான அமைச்சரவை உறுப்பினர்கள் என இலங்கை தமிழரசு கட்சியால் வெளியிடப்பட்டுள்ள பெயர்பட்டியல், தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏகோபித்த தீர்மானம் இல்லை என்று, பங்காளி கட்சிகள் அறிவித்துள்ளன.
தர்மலிங்கம் சித்தார்த்தன் தலைமையிலான புளொட் எனப்படும் எனப்படும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான டெலோ எனப்படும் தமிழீழ விடுதலை இயக்கம், சுரேஸ் பிரேமசந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப் எனப்படும் ஈழமக்கள் புரட்சிகர முன்னணி, வீ.ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய கட்சிகளை இந்த அறிவிப்பை விடுத்துள்ளன.
வட மாகாண சபை அமைக்கப்பட்ட நேரத்தில், அமைச்சரவைக்காக பங்காளிக் கட்சிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன.
இதன் அடிப்படையில், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் தர்மலிங்கம் சித்தார்தனின் பெயரை பிரேரித்திருந்தது.
தமிழீழ விடுதலை இயக்கம் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் பெயரை பிரேரித்தது.
ஈழ மக்கள் புரட்சிகர முன்னணி, முல்லைத்தீவை மையமாக கொண்ட ரவிஹரன் மற்றும் சத்தியமோகன் ஆகிய இருவரின் பெயர்களையும் பிரேரித்திருந்தது.
எனினும், தம்மை கலந்தாலோசிக்காது, தாம் பிரேரித்த பெயர்களை நிராகரித்த தமிழரசு கட்சி, மாற்று உறுப்பினர்களை வடமாகாண அமைச்சரவைக்கு உள்ளீர்த்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நான்கு கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தை பொறுத்தவரையில் அந்த கட்சி, மூன்று அங்கத்தவர்கள் மாத்திரமே வடமாகாண சபைக்கு தெரிவாகியுள்ளதால், அமைச்சரவையில் இடந்தர முடியாது என்ற கருத்தை தமிழரசு கட்சி வெளிப்படுத்தி இருந்தது.
எனினும், அந்த கட்சியின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்தனுக்கு வடமாகாண சபையின் தவிசாளர் பதவியை வழங்குவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை முன்வந்த போதும், ஒருகட்ட பேச்சுவார்த்தையுடன், அது நிறைவு பெற்றதாக தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தரப்புக்கள் தெரிவிக்கின்றன.
இந்த குற்றச்சாட்டை அறிவிக்கும் முகமாக, இன்று பிற்பகல் ஈழமக்கள் புரட்சிகர முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் யாழ்ப்பாணத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினார்.
முல்லைத்தீவு மக்களின் கோரிக்கையை இலங்கை தமிழரசு கட்சி புறக்கணித்திருப்பதாகவும் அவர் இதன் போது சுட்டிக்காட்டினார்.
அதேநேரம், தற்போது எழுந்துள்ள நிலைமை குறித்து ஆராய்வதற்காக தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் மற்றும் தமிழீழ விடுதலை இயக்கம், தமிழர் விடுதலைக் கூட்டணி என்பன தங்களின் தீர்மானத்தை இன்று மாலை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வெளிநாட்டில் இருந்து இன்று திரும்பிய உடன் தமது கட்சியின் உயர்பீடம் கொழும்பில் கூடி, தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
இந்த நிலையில் பெரும்பாலும் நாளை நடைபெறவுள்ள வடமாகாண சபை உறுப்பினர்களின் சத்திய பிரமாண நிகழ்வை புறக்கணிப்பது என்ற தீர்மானத்தை, இந்த நான்கு கட்சிகளும் எடுக்கக்கூடும் என கட்சித் தரப்புகள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், வடமாகாண சபைக்கான அமைச்சரவை பட்டியலை தமிழ் தேசிய கூட்டமைப்பு வடமாகாண ஆளுனரிடம் கையளித்துள்ளது.
இதன் அடிப்படையில், பீ.ஐங்கரநேசன், டீ.குருக்குளராசா, பி.சத்தியலிங்கம், பீ.டைனீஸ்வரன் ஆகியோரின் பெயர்கள் வடமாகாண அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளன.
வடமாகாண சபையின் தவிசாளராக சீ.வி.கே.சிவஞானமும், என்டனி ஜெகநாதன் உதவி தவிசாளராக பெயரிடப்பட்டுள்ளனர்.
இந்த நியமனங்கள் குறித்த அறிக்கை ஒன்று தமிழ் தேசிய கூட்டமைப்பினால் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட போதும், அது உரிய வகையில் ஊடகங்களுக்கு அனுப்பப்படவில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே தேர்தல் களத்தின் போது த ஹிந்து வெளியிட்டிருந்த ஆசிரிய தலையங்கத்தில், தமிழ் தேசிய கூட்டமைப்பு தேர்தலில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றிய பெற்றிருந்தாலும், சவால் இதற்கு பின்னரே ஆரம்பமாகும் என்ற கருத்தை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலங்கை தமிரசு கட்சியின் நிலைப்பாட்டை அறிந்துக் கொள்ள எமது செய்திப்பிரிவு தொடர்ந்தும் முயற்சித்தது.
இதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவைசேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், சரவணபவன் உள்ளிட்டோரின் தொலைபேசிகளுக்கு அழைப்பை ஏற்படுத்திய போதும், தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டன.

Post a Comment