அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை கிண்ணியா கிளை இன்று வியாழக்கிழமை கிண்ணியாவில் பெருநாள் கொண்டாடப்பட வேண்டும் என்ற முடிவை எடுத்ததற்கான நியாயங்கள்.
1. நோன்பு 29இல் 07.08.2013 இல் பிறை பார்க்கும் வேண்டுகோளை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை, கொழும்பு பெரிய பள்ளியும் விடுத்ததற்கிணங்க கிண்ணியாவில் பிறையை கண்ட மக்கள் கிண்ணியா ஜம்இய்யதுல் உலமா சபையின் பிறைக்குழுப் பொறுப்பாளர் ஏ.எஸ். ஜாபிர் நளீமியிடம் தெரிவித்தனர். இதற்கிணங்க தேசிய பிறைக்குழுச் செயலாளர் அப்துல் அஸீஸ் மௌலவியை கொழும்பு பெரியபள்ளியில் தொடர்பு கொண்டு பி.ப. 6.58 மணியளவில் விடயத்தை தெளிவுபடுத்தினார். இதில் அவர் பிறை கண்டவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி கலந்துரையாடவும், சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தார். பெரியாற்றுமுனையில் பிறை கண்டவர்களுடனான இந்தச் சம்பவத்தை பிறைக்குழு ஏற்கவில்லை.
2. இதன் பின் இன்னும் பல இடங்களில் பிறைகண்ட பொதுமக்கள் ஜம்இய்யதுல் உலமா கிண்ணியா கிளையை நாடினர். இவர்களில் ஜாமிஉல் அஸ்ஹர் பள்ளிவாயல் இமாம் மௌலவி எம்.ஏ.எம். றியாஸ் மற்றும் மஹல்லாவாசிகள் 10 பேரும் கண்டதாக குறிப்பிட்டார்கள்.
3. இவ்வாறு இன்னும் பல இடங்களில் பிறை கண்ட 25க்கு மேற்பட்ட கிண்ணியா பிரதேச மக்கள் பிறைக் குழுவிற்கு அறிவித்தனர்.
4.இந்நேரத்தில் பெரியாற்றுமுனையில் பிறைகண்ட பொதுமக்களைப் பேட்டிகாணுவதற்காக மேமன் சங்கத்தின் 2 (இரண்டு) பேர் சமூகம் தந்ததை நளீமி ஜாபிர் உறுதிப்படுத்தினார். மக்களுடன் தமிழில் உரையாடிய இவர்கள் பிறைக்குழுவிற்கு அறிவிக்கும்போது மேமன் (பாய்) மொழியில் பேசியதாகவும் குறிப்பிட்டார். இது மக்களுக்கும் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
5. ஆனால், மேமன் சங்கத்தில் இருந்து வருகை தந்தவர்கள் முக்கிய சாட்சியான றியாஸ் மௌலவியிடம் தகவல் பெறாமலும் கிண்ணியா ஜம்இய்யதுல் உலமா சபையை சந்திக்காமலும் உடனடியாக கிண்ணியாவை விட்டு வெளியேறி விட்டதை பின்னர் அறிந்தோம்.
6. இதன் பின்னர் பிறைகண்டதாக உறுதிப்படுத்தி ஐந்து பேரின் பெயரும் தொலைபேசி இலக்கம், வயது போன்ற தகவல்களும் பிறைக்குழுவிற்கு வழங்கப்பட்டது. அவர்களும் இவர்களுடன் போனில் உறையாடினர். இதன் மூலம் நல்ல முடிவு ஒன்றுவரும் என்று எதிர்பார்த்திருந்த வேளையில் இரவு 9.00 மணிக்குப் பிறகு பெருநாள் இல்லை என்ற எதிர்பாராத முடிவு அறிவிக்கப்பட்டது.
7. இதன் பின்னர் ஊர் பிரமுகர்கள், தஃவா பிரதிநிதிகள், பொதுமக்கள் ஆகியோரின் வேண்டுகோளுக்கு இணங்க உலமா சபை தனது அலுவலகத்தில் உடனடியாக ஒன்றுகூடலை நடத்தியது.
8. முக்கியமாக பிறை கண்ட சாட்சிகளை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மௌலவி ஹஸன் அஸ்ஹரி அவர்கள் நேரடியாக கொண்டுவந்து உறுதிப்படுத்தும் நிகழ்வும் இடம்பெற்று சபை முன்னிலையில் அவர்கள் தாங்கள் பிறைகண்டதை உறுதிப்படுத்தி சத்தியம் செய்வதற்கும் தயார் என எல்லோரும் உறுதியாக கூறினர்.
9. பிறை விடயத்தில் சபையோர் அனைவருக்கும் உறுதியான நம்பிக்கை ஏற்பட்டதன் பின் பெருநாள் என தீர்மானிக்கப்பட்டது. எமது ஊரில் நாம் பெருநாளைக் கொண்டாட கலந்து கொண்ட பிரதிநிதிகளின் ஒப்பமும் பெறப்பட்டது.
10. இதன் பின் இந்த முடிவு தொடர்பான அறிக்கை அந்த இரவே அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபைக்கு தொலை நகல் (Fax) அனுப்பப்பட்டது.
11. இவ்வறிக்கையில் கிண்ணியா ஜம்இய்யதுல் உலமா சபை கிளையின் தலைவர் ஜனாப் ஏ.எம். ஹிதாயதுல்லாஹ் (நளீமி) மற்றும் தற்போதைய செயலாளர் எம்.எஸ்.எம். ஷபாஅத் (மதனி) ஆகியோர் ஒப்பமிட்டனர். இந்த முடிவுகள் அனைத்தும் இக்கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் தலைவர் ஜனாப் ஏ.ஆர்.எம். நஸார் மௌலவி அவர்களின் முன்னிலையில் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment