மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான அமெரிக்காவின் நிலைப்பாட்டினால் தமது மூத்த படையதிகாரிகளுக்கு அமெரிக்கா தொடர்ந்தும் அனுமதி மறுத்துவருவதாக இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதியும் பாதுகாப்புப் படைகளின் கூட்டுத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்தார்.
பசிபிக் இராணுவ முகாமைத்துவ கருத்தரங்குக்கு இலங்கை இராணுவம் அனுப்பவிருந்தவர்களில் தற்போது வன்னிப் படைகளின் தளபதியாக உள்ள பொனிபேஸ் பெரேராவை மட்டுமே அமெரிக்கா ஏற்றுக் கொண்டிருக்கிறது.நியூசிலாந்தின் ஆக்லண்டில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் நடக்கவுள்ள இராணுவ நிகழ்ச்சித் திட்டமொன்றுக்கு இலங்கை அரசாங்கம் சார்பில் அனுப்பப்படவிருந்த இரண்டு மூத்த இராணுவ அதிகாரிகளை, மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக் கூறல் காரணங்களைக் காட்டி அமெரிக்கா நிராகரித்துவிட்டது.
கொழும்பில் இலங்கை இராணுவம் இன்று நடத்திய ஊடகச் சந்திப்பொன்றில் பிபிசி செய்தியாளர் இதுபற்றி கேள்வி எழுப்பினார்.
'அமெரிக்க அரசின் கொள்கை ரீதியான முடிவு காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த தடவையும் ஜெனரல் சுதந்த ரணசிங்கவை நாங்கள் பாதுகாப்பு கற்கைநெறி ஒன்றுக்காக பிரேரித்தபோதும் அமெரிக்காவில் அதனை நிராகரித்திருந்தார்கள். 53வது படையணியின் தளபதி என்றுதான் காரணம் கூறப்பட்டிருந்தது. ஆனால் அவர் யுத்தம் முடிந்து பல ஆண்டுகளுக்குப் பின்னர் தான் 53வது படையணிக்கு தளபதியாக நியமனம் பெற்றவர்' என்றார் ஜகத் ஜயசூரிய.
'அதேபோல் 57வது படையணியின் மேஜர் ஜெனரல் ஜகத் டயஸுக்கும் முன்னர் அங்கு தேசிய பாதுகாப்பு கல்லூரியில் கற்கைநெறி ஒன்றை கற்பதற்கு அனுமதி கிடைக்கவில்லை. இந்த படையணிகளின் பெயர்களில் தான் பிரச்சனை இருக்கிறது. அந்தப் பிரச்சனைகள் தீரும்வரை சிக்கல்கள் இருக்கும்' என்றும் ஜகத் ஜயசூரிய கூறினார்.
நவிபிள்ளை மீது நம்பிக்கை
மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் விவகாரத்தில் அமெரிக்காவின் உயர்மட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டாலே பிரச்சனை தீரும் என்றும் பாதுகாப்புப் படைகளின் கூட்டுத் தளபதி கூறினார்.
ஐநாவின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கைக்கு விஜயம் செய்யும்போது இந்தப் பிரச்சனை தீர்க்கப்படும் என்றும் இலங்கை பாதுகாப்பு படைகளின் கூட்டுத் தளபதி நம்பிக்கை தெரிவித்தார்.
'மனித உரிமைகள் பிரச்சனை காரணமாக அமெரிக்க தரப்பினர் கொண்டிருக்கின்ற நிலைப்பாடும் எங்களின் நிலைப்பாடும் வெவ்வேறாக இருப்பது தான் இதற்கு காரணம். இம்முறை ஐநாவின் மனித உரிமை ஆணையர் நவநீதம்பிள்ளை இலங்கைக்கு வந்தால் அந்தப் பிரச்சனை தீரும் என்று நினைக்கின்றேன்' என்றார் ஜகத் ஜயசூரிய.
'நவிபிள்ளையும் நாட்டின் பலபகுதிகளுக்கும் சென்றுபார்ப்பார். உண்மை நிலைமையை வெளிப்படுத்தவேண்டியது அவரது கடமை. அவர் கொழும்பில் தங்கியிருக்கமாட்டார். நாட்டின் பல பகுதிகளுக்கும் செல்வார். யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைத்தீவு பகுதிகளுக்கும் செல்வார்' என்றார் ஜெனரல் ஜயசூரிய.
இலங்கையின் இறுதிப் போரின்போது வன்னியில் படைநடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இலங்கை இராணுவத்தின் 53ம் பிரிவு, 57-ம் பிரிவு மற்றும் தற்போது ஐநாவில் இலங்கையின் பிரதிநிதியாக இருக்கின்ற மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவின் 58ம் பிரிவு உள்ளிட்ட பல படையணிகள் மீது சர்வதேச அமைப்புகள் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்மை குறிப்பிடத்தக்கது.
அந்தக் குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் மறுத்துவருகிறது.
Post a Comment