ஜம்இய்யதுல் உலமா சீரமைக்கப்பட வேண்டிய தருணம் இது.

 

கட்டுரை : லதீப் பாரூக்

முஸ்லிம் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட கிண்ணியாக் கிராமம் நாட்டின் வட கிழக்குக் கரையோரமாக அமைந்திருக்கிறது. சுமார் 98 சதவீதமானவர்கள் இங்கு முஸ்லிம்கள். மார்க்க அறிஞர்கள், புலமைத்துவ மட்டத்தைச் சேர்ந்தவர்கள், கல்வியியலாளர்கள், வர்த்தகர்கள், விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பிற தொழில்களைப் புரிபவர்கள் என சகல மட்டங்களைச் சேர்ந்தவர்களும் இங்கு வாழ்கிறார்கள்.    

புனித ரமழான் மாதம் வந்தாலே, கிராமத்தின் சூழ் நிலை முழுமையாக மாற்றம் அடைகிறது. நோன்பு நோற்பதிலும், இரவுத் தொழுகைகளிலும் மக்கள் ஈடுபடுகிறார்கள். இஸ்லாமிய மாதத்தின் ஆரம்பத்தைத் தீர்மானிப்பதற்கான தலைப் பிறை வழமையாகத் தென்படும் பிரதேசங்களில் இதுவும் ஒன்று. இத்தலைப் பிறையை அடிப்படையாக வைத்தே, ரமழான் மாத நோன்பை முஸ்லிம்கள் நோற்க ஆரம்பிக்கவும், நோன்பை நிறைவு செய்து நோன்புப் பெருநாளைக் கொண்டாடவும் செய்கிறார்கள்.      

இவ்வாண்டும் அதற்கு விதி விலக்கல்ல. ஆகஸ்ட் 06, 2013 அன்று கிண்ணியாவாசிகள் தலைப் பிறையைக் காணும் ஆர்வத்தில் இருந்தார்கள். அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, கிண்ணியாக் கிளையின் பிறைக் கமிட்டி அதற்குரிய ஏற்பாடுகளை செய்திருந்தது.         

கிண்ணியா ஜம்இய்யதுல் உலமா என்பது இஸ்லாமிய மார்க்க அறிஞர்களை உள்ளடக்கிய பாரியதொரு நிறுவனமாகும். பலவேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டு வரும் இவ்வமைப்பின், பிறைக் குழுத் தலைவராக இருப்பவர் அஷ்ஷெய்க் ஜாபிர் அவர்கள். இவ்வமைப்பே கிண்ணியாப் பிரதேசத்தில் பிறை பார்ப்பதற்குப் பொறுப்பாக இருக்கிறது.    

கொழும்பில் இருந்து அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தலைமையகமும் மேமன் சமூகத்தைச் சேர்ந்த இருவரை, கிண்ணியாப் பிறைக் குழுவுடன் இணைந்து பிறை பார்க்கும் கருமத்தில் ஈடுபடும் படி கிண்ணியாவிற்கு அனுப்பி வைத்திருந்தது. ஷவ்வால் மாதத்திற்கான தலைப் பிறையை (பெருநாள் தலைப் பிறை) பார்க்குமாறு ஜம் இய்யதுல் உலமாவும் பொது மக்களுக்கு அறிவுறுத்தி இருந்தது.      

பெரியாத்துமுனை, பெரிய கிண்ணியா, ஜாமிஉல் மஸ்ஜித் பகுதி, காக்காமுனை போன்ற பிரதேசங்களில், புதன் கிழமை மாலை 6.32 இற்கும், 6.35 இற்கும் இடையில் ஒருவர் பின் ஒருவராக இருபத்தைந்து பேர் வரை ஷவ்வால் தலைப் பிறையைக் கண்டிருக்கிறார்கள்.   

பிறை கண்ட ஆறு பேர், போர்த்துக்கேயர் காலத்தில் கட்டப்பட்ட ஜாவாப் பள்ளிவாயல் தலைவராக இருக்கும் அஷ்ஷெய்க் ஜாபிர் (நளீமி) அவர்களை சந்தித்திருக்கிருக்கிறார்கள். சகல தகவல்களையும் உறுதி செய்து கொண்ட அவர், ஜம்இய்யதுல் உலமா கிண்ணியாக் கிளைக்கு இதனைத் தெரியப்படுத்தி உள்ளார். கிண்ணியாக் கிளை இத்தகவல்களை மேலும் ஆராய்ந்தது.         

கொழும்பு பெரிய பள்ளிவாயலில் இருந்த அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பிறைக் கமிட்டியை கிண்ணியா ஜம்இய்யதுல் உலமா அவசரமாகத் தொடர்பு கொண்டது. அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாத் தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி அவர்களை தொடர்பு கொள்ள முயற்சித்த போதும், முடியவில்லை.            

எவ்வாறாயினும் கொழும்பு பெரிய பள்ளிவாசல் ஜம்இய்யதுல் உலமாவில் இருந்து கிடைத்த பதில் அவ்வளவு திருப்திகரமானதாக இருக்கவில்லை. கிண்ணியா பிறைக் கமிட்டி உலமாக்கள், அறிஞர்கள், சமூக மற்றும் இஸ்லாமிய அமைப்புக்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கியதாக இருந்த போதிலும், தாம் பொய் சொல்வதாக உணர்கின்ற வகையில், கொழும்பில் இருந்து அநாவசியமான பல கேள்விகள் அதனிடம் கேட்கப்பட்டன.  

பிறகு தமது கருத்துக்கள் மறுக்கப்பட்டு, மேமன் குழுவினதும், வானிலை அவதான நிலையத்தினதும் கருத்து ஏற்கப்பட்டு, வியாழக் கிழமை எட்டாம் நாள் நோன்பு நோற்கப்படும் எனவும், வெள்ளிக் கிழமையே பெருள்நாள் கொண்டாடப்படும் எனவும் கூறப்பட்ட போது, கிண்ணியாவாசிகள் அதிர்ச்சி அடைந்தார்கள்.  

மார்க்க அறிஞர்கள், சமூக ஆர்வலர்கள், முக்கியஸ்த்தர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பிறை கண்டவர்கள் அனைவரையும் உள்ளடக்கிய அவசரக் கூட்டம் ஒன்று அன்றிரவு ஒன்பது மணிக்கு கிண்ணியா ஜம்இய்யதுல் உலமா காரியாலயத்தில் இடம்பெற்றது. இது தொடர்பில் மீண்டும் ஆராயப்பட்டு, மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டு, தலைமையகத்திற்கு எத்தி வைக்கப்பட்டது போது, கொழும்பு பெரிய பள்ளிவாயலில் பிறைக் குழு தமது மாநாட்டை நிறைவு செய்து, கலைந்து சென்று விட்டார்கள் என்ற பதிலே அவர்களுக்குக் கிடைத்தது. வியாழன் நோன்பு நோற்கப்படும் எனவும், வெள்ளிக் கிழமையே பெருநாள் கொண்டாடப்படும் எனவும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தீர்மானித்திருப்பதாகவும் வேறு அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. இம்முடிவால் கிண்ணியா ஜம்இய்யதுல் உலமாவும், கிண்ணியாப் பிறைக் குழுவும் அதிர்ச்சிக்குள்ளாயினர்.          

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் இச்செயற்பாடு காரணமாக வெறுப்புக்குள்ளான கிண்ணியா ஜம்இய்யதுல் உலமா, அங்குள்ள மக்களை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் அறிவிப்பிற்கு முரணாக, வியாழனன்று பெருநாள் கொண்டாடும் படி அறிவிப்புச் செய்தது.  

அடுத்த நாள் ஆகஸ்ட், 08 வியாழக் கிழமை அன்று அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தலைவர் ரிஸ்வி முப்தி ஆற்றிய உரையைத் தொடர்ந்து, கிண்ணியா மற்றும் மூதூர் மக்களுக்கு தமது நிலைப்பாட்டை தெளிவு படுத்தி கிண்ணியா ஜம்இய்யதுல் உலமா வெளியிட்ட அறிக்கையில் பின்வரும் அம்சங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளனர்.  

கிண்ணிய ஜம்இய்யதுல் உலமா, தஃவா அமைப்புக்கள், அரசியல்வாதிகள், முக்கியஸ்த்தவர்கள் மற்றும் பலருடன் இணைந்து 8 ஆம் திகதி செவ்வாய்க் கிழமை ஷ்வ்வால் தலைப் பிறை பற்றி எடுத்த முடிவை மக்களுக்குத் தெரிவிக்க விரும்புகின்றோம்.     

01. கிண்ணியா மற்றும் மூதூர் மக்கள் பிறை கண்ட பிறகு, வானியல் அவதான நிலையத்தின் தகவல்களின் படி, பிறை காண்பது சாத்தியமில்லை என்று கூறுவது சரியானதல்ல. ஜம்இய்யதுல் உலமாவே பிறை பார்க்குமாறு வேண்டி, அதற்காக மாநாட்டையும் நடாத்தி விட்டு, அதே நாளில் பிறை தென்படாது என்று கூறுவது முன்னுக்குப் பின் முரணானதாகும்.     

02. பெருநாள் கொண்டாடுவதாக உறுதிப்படுத்துகின்ற கிண்ணியா கிளையின் கடிதத்தில் கிண்ணியா ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் கையெழுத்திடவில்லை எனவும், கையொப்பம் போலியானது எனவும் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி அவர்கள் தெரிவித்திருந்தார். எவ்வாறாயினும், கிண்ணியா ஜம்இய்யதுல் உலமா தலைவர் அஷ்ஷெய்க் ஏ.எம். ஹிதாயதுல்லாஹ் அவர்களால் கையெழுத்திடப்பட்டமை உறுதிப்படுத்தப்படுகிறது. இவர் இவருக்கு முன் தலைவராக இருந்து, தனது முதுமானிப் பட்டத்தை நிறைவு செய்வதற்காக சூடான் சென்ற அஷ்ஷெய்க் ஏ.ஆர். நஸ்ஸார் (பலாஹி) அவர்களின் விருப்பத்துடன் தலைவராக நியமிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நியமனம் கிண்ணியா ஜம்இய்யதுல் உலமாவினால் ஒரு மனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டதோடு, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா விற்கும் அறிவிக்கப்பட்டது. கிண்ணியா மக்கள் மத்தியில் இது நன்கு அறியப்பட்ட விடயமாக இருந்தும், கொழும்பில் ஜம்இய்யதுல் உலமா தலைமையகம் இதனை அறியாமல் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.        
   
03. பிறை தென்பட்ட பிரதேசத்தில் அமைந்திருக்கின்ற ஜாமிஉல் அஸ்ஹர் பள்ளிவாயல் இமாம் மௌலவி ரியாஸ் அவர்களிடம் எதுவித விசாரணையையும் அ.இ.ஜ.உலமாவினால் அனுப்பப்பட்ட மேமன் சமூகத்தைச் சேர்ந்த குழு மேற்கொள்ளவில்லை. பதிலாக பிறை கண்ட சிலரைச் சந்தித்த இவர்கள், அவர்களுடன் தமிழில் உரையாடி விட்டு, கொழும்பு பிறைக் குழுவுக்கு எத்தி வைக்கும் போது, மேமன் மொழியில் எத்தி வைத்துள்ளனர். ஆகவே, மேமன் குழுவினர் என்ன எத்தி வைத்தார்கள் என்பது மக்களுக்கு விளங்கவில்லை.    

04. கிண்ணியா ஜ.உ வின் முன்னாள் தலைவர் தனது உயர் கல்விக்காக வெளிநாடு சென்றுள்ளார் என்பது முன்பே தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே தலைவர் அஷ்ஷெய்க் ஹிதாயதுல்லாஹ் மற்றும் செயலாளர் எம்.எஸ்.எம். ஸபாத் ஆகியோர் இக்கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர். கி. ஜ. உ விடம் எதுவித விளக்கமும் கோராமல், ரிஸ்வி முப்தி அவர்களால் வானொலியில் மேற்கொள்ளப்பட்ட உரை கிண்ணியாக் கிளைத் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோரின் உணர்வுகளைக் காயப்படுத்துவது மட்டுமன்றி, கிண்ணியா மற்றும் மூதூர் மக்களை கேவலப்படுத்தவும் செய்கிறது.    

05. கிண்ணியா ஜம்இய்யதுல் உலமாவினால் ஏகமனதாக மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் தொடர்பில் கருத்துக் கூறும் போது ரிஸ்வி முப்தி அவர்கள் கிண்ணியா, மூதூர் மக்களுக்கு சுனாமி மற்றும் பிரச்சினை காலங்களில் மேற்கொண்ட உதவிகளைக் குறிப்பிட்டார். இது விடயத்துடன் சம்பந்தமில்லாததொரு விடயமாகும். கிண்ணியா மக்கள் இதனை எதிர்பார்க்கவில்லை. இது வருந்தத்தக்கது. 

06. இவ்விடயம் தொடர்பாக தனது பத்வாவை வெளியிட்ட ரிஸ்வி முப்தி அவர்கள், வியாழன் அன்று நோன்பை விட்டவர்கள் அதனை மீள நோற்க வேண்டும் எனவும், அந்த நாள் நோன்பு நோற்றவர்கள் நன்மாராயம் பெற்றவர்கள் எனவும் தெரிவித்தார். தமது சொந்தக் கண்களால் பிறை பார்த்தவர்கள், தமது சொந்த மண்ணில் பெருநாள் கொண்டாடுவதில் என்ன தவறு இருக்கிறது என்பதே இங்குள்ள கேள்வியாகும். பிறை பார்த்ததும் நோன்பு நோற்று, பிறை பார்த்துப் பெருநாள் கொண்டாடுவதே இஸ்லாமிய சம்பிரதாயமாக இருந்து வந்திருக்கிறது. ஒருவர் பின் ஒருவராக கிண்ணியாவில் சுமார் இருபத்தைந்து பேர் பிறை கண்டிருக்கிறார்கள்.      

சமூகத்தைப் பிழையாக வழிநடாத்தும் வகையிலான இந்த பத்வாவை எந்த அடிப்படையில் இவர் வெளியிட்டிருக்கிறார் என்பதே இங்குள்ள கேள்வியாகும். இரண்டாம் நபர்களிடம் இருந்து கிடைத்த தகவல்களை வைத்து, ரிஸ்வி முப்தி அவர்களினால் தனது பத்வாவை வெளியிட முடியுமாக இருந்தால், தமது கண்களால் பிறை கண்டு, இஜ்திஹாத் அடிப்படையில் பெருநாள் கொண்டாடுவதற்கு எடுத்த முடிவை தவறு என்று கூற முடியுமா என்ற விடயத்தை அல்லாஹ்விடமே விட்டு விடுகிறோம்.      

07. கிண்ணியாவில் இருந்து உத்தியோகபூர்வமாக எவரும் தமக்கு பிறை கண்ட விடயம் தொடர்பாக அறிவிக்கவில்லை எனவும் ரிஸ்வி முப்தி குறிப்பிட்டார். தன்னை மௌலவி என்று கூறிக்கொள்கின்ற ஒருவர் இத்தகைய அப்பட்டமான பொய் ஒன்றைக் கூறுவது கண்டிக்கப்பட வேண்டும். ஏனெனில், கிண்ணியா பிறைக் குழுவிற்குப் பொறுப்பான அஷ்ஷெய்க் ஏ.எஸ். ஜாபிர் அவர்கள் இது தொடர்பிலான சகல விபரங்களுடனுன் கொழும்புக்கு அறிவித்திருந்தார்.     

எனவே, ஜம்இய்யதுல் உலமா தலைவரின் இவ்வுரை முக்கியத்துவம் இல்லாதது. ஜம்இய்யதுல் உலமாவின் அறிவிப்பைச் செவிமடுத்த கிண்ணியா ஜ,உலமா, தஃவா அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல்வாதிகள், பிறைபார்த்தவர்களை உள்ளடக்கிய கூட்டம் ஒன்றை 9.00 மணிக்கு ஒழுங்கு செய்து ஆராய்ந்து, பிறை கண்டதை உறுதிப்படுத்தியதோடு, 9.30 இற்கு மீண்டும் கொழும்பிற்குத் தெரியப்படுத்தியது. ஆனால், அதிர்ச்சி அளிக்கின்ற வகையில், அவர்கள் தமது கூட்டத்தை நிறைவு செய்து கலைந்து சென்று விட்டார்கள் என்று கூறப்பட்டது. முழு சமூகத்தையும் பாதிக்கக் கூடியதான இம்முக்கியமான மார்க்க விவகாரத்தில் தொடர்பில், இது முழுமையான பொறுப்பற்ற செயற்பாடாகும்.          

இதே வேளை, கிண்ணியா ஜ. உலமா நீதியமைச்சர் ரவூஃப் ஹகீம் அவர்களைத் தொடர்பு நிலமையைத் தெளிவு படுத்தியது. நீண்ட நேரமாகத் தொடர்பு கொள்ளப்பட முடியாமல் இருந்த ரிஸ்வி முப்தி அவர்களை இறுதியில் நீதி அமைச்சர் தொடர்பு கொண்ட போது, எக்காரணம் கொண்டும் முடிவை மாற்ற முடியாது என உறுதியாகத் தெரிவித்துள்ளார். இதன் பிறகே கிண்ணியா ஜம்இய்யதுல் உலமா அடுத்த நாள் பெருநாள் கொண்டாடுவதாக ஒரு மனதாகத் தீர்மானித்து, மக்களுக்கு அறிவித்தது.        

08. இந்நிலையில், பிறை கண்ட மக்களின் தகவல்கள் அனைத்தையும் விட, தனது மேமன் சமூகத்தைச் சேர்ந்த இருவர் கொண்ட குழு வழங்கிய தகவல்கள் நம்பகமானவை என எந்த அடிப்படையில் ரிஸ்வி முப்தி அவர்கள் நியாயப்படுத்தலாம்? பிறை கண்ட மக்களின் கருத்துக்களைப் புறம் தள்ளி விடுவதற்கு மௌலவி ரிஸ்வி அவர்கள் முடிவெடுப்பதற்கு அவரைத் தூண்டிய இரகசிய நிகழ்ச்சி நிரல் என்ன என்பதே கேள்வியாகும்.    

09. கிழக்குக் கரையோரத்தில் மாலை 6.23 அளவில் பிறை தென்படும் சாத்தியம் இருப்பதாக ரிஸ்வி முப்தி குறிப்பிட்டிருந்தார். பிறை 14 அல்லது 15 நிமிடங்களுக்கு வானில் தரித்து நிற்கலாம் எனவும் அவர் தெரிவித்திருந்தார். 6.35 அளவில் பிறையை மக்கள் பார்த்ததாக மக்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். கிண்ணியா ஜம்இய்யதுல் உலமா பிறைக் குழு இந்த விடயங்களைக் கலந்துரையாடி, அது குறித்துத் திருப்தி அடைந்த நிலையில், கொழும்பு ஜ.உ ற்கு 6.58 இற்கு உத்தியோகபூர்வமாக அறிவித்தது. இந்நிலையில், தகவல் பிந்திக் கிடைத்ததாக ரிஸ்வி முப்தி குறிப்பிடுவது அருவருக்கத்தக்கதும், வெட்ககரமானதுமாகும். முழு சமூகத்தையும் பாதிக்கக் கூடியதான இந்த மார்க்க விவகாரத்தில் எவ்விதம் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தேசியத் தலைவர் இவ்விதம் பொறுப்பற்ற விதத்தில் நடந்து கொள்ளலாம்?          

கிண்ணியா ஜம்இய்யதுல் உலமா வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விதம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கர்வமும், பொறுப்பற்ற மனப்பான்மையும் உள்ள கொழும்பு ஜம்இய்யதுல் உலமாவில் நம்பிக்கை இழந்து, கிழக்கு மாகாண உலமாக்கள் கிழக்கிலங்கைக்கான தனியான பிறை கமிட்டி ஒன்றை உருவாக்குவது சம்பந்தமாக கலந்துரையாட ஆரம்பித்தார்கள். இதே வேளை, நாட்டின் பிற பகுதிகள் அ.இ. ஜ. உலமாவின் கருத்தை மதித்து, வியாழக் கிழமை நோன்பு நோற்றன. இம்முரண்பாடு தொடர்பில் கிண்ணியா மக்களுடன் கதைத்த போது, வியாழக் கிழமைதான் பெருநாள் தினம் என எனக்கு உறுதியனது. நாட்டில் பெரும்பாலானவர்களின் நிலையும் இதுவே!.       

விடயம் அறிந்த வட்டாரங்களில் இருந்து கிடைக்கின்ற தகவல்களின் படி, இஸ்லாமிய போதனைகளுக்கு முரணாக, ஜம்இய்யதுல் உலமா பல வாரங்களுக்கு முன்னதாகவே தனது முடிவை எடுத்திருந்தது. விடயம் தெரிந்திருந்ததால், ஜ. உலமாவின் முன்னணி அங்கத்தவர்கள் பலர் வியாழனன்று நோன்பு நோற்கவில்லை. தற்போதைய தலைமையின் கீழ் வேகமாகத் தனது நம்பகத் தன்மையை இழந்து வருகின்ற ஜம்இய்யதுல் உலமாவின் கவலை தருகின்ற நிலையே இதுவாகும்.    

இதே வேளை, அகில இலங்கை  ஜ.உ கிண்ணியா ஜம்இய்யதுல் உலமாவுடன் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்தது. இவ்விவகாரத்தைப் பெரிதுபடுத்த வேண்டாம் எனப் பூச்சாண்டி காட்டுவதற்கே இச்சந்திப்பு என பலரும் கருதினார்கள். தெளிவான நிகழ்ச்சி நிரல் வழங்கப்பட்டு, பிறை கண்டிருந்த மூதூர் மக்களும் அழைக்கப்பட்டால் மாத்திரமே இதில் கலந்து கொள்ள முடியும் என கி.ஜ.உ தெரிவித்தது.   

எவ்வாறாயினும், கடந்த 16 ஆம் திகதி இரு தரப்பினருக்கும் மத்தியில் சந்திப்பொன்று இடம்பெற்றது. கிண்ணியா சார்பாக 35 அங்கத்தவர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில், கிண்ணியாவில் தென்பட்ட பிறையை ஏற்றுக்கொள்ளாததன் மூலம் கொழும்பு ஜம்இய்யதுல் உலமா தவறொன்றை இழைத்திருப்பதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.         

இரு தரப்பினராலும் வெளியிடப்பட்டு, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பொதுச் செயலாளர் மௌலவி எம்.எம்.ஏ. முபாரக் அவர்கள் கையெழுத்திட்டுள்ள கூட்டறிக்கையின் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது:    

01. கிண்ணியா உலமா சபையுடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து, புதன் மாலை பிறை தென்பட்டிருப்பதை உறுதிப்படுத்துவதோடு, வியாழன்று பெருநாள் கொண்டாடியதையும் சரியென அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா உறுதிப்படுத்துகின்றது. இதே நேரம் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் அறிவித்தலுக்கு அமைவாக வெள்ளிக் கிழமை பெருநாள் கொண்டாடியவர்களும் சரியையே செய்திருக்கிறார்கள்.     

(இது மக்களின் காதுகளில் பூ சுற்றி, ஜ.உ தலைவரின் மதிப்பைப் பாதுகாக்க மேற்கொள்ளப்பட்ட அறிக்கை.  சரியும் பிழையும் எவ்வாறு ஒரே நேரத்தில் சரியாக இருக்க முடியும்? இஸ்லாமியப் போதனைகளுக்கு முரணாக முன்னெப்போதும் இல்லாத வகையிலான இத்தவறை மேற்கொண்டவர்கள் ஜம்இய்யதுல் உலமாவிற்குப் பொறுத்தமானவர்கள் தானா?).          

02. வானொலியில் ஒலி பரப்பான ரிஸ்வி முப்தியின் உரை கிண்ணியா ஜம்இய்யதுல் உலமாவின் உணர்வுகளைப் பாதித்தமைக்காக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வருந்துகிறது.     

03. உலக நாடுகளில் இருந்து தகுதியானவரகளை வரவழைத்து சரியான தீர்மானத்திற்கு வருவதன் மூலம் இனி வருகின்ற காலங்களில் தேவையற்ற குழறுபடிகளும், பொது மக்கள் மத்தியில் குழப்ப நிலையும் உருவாகாமால் இருப்பதற்கான பொறிமுறையொன்றை வகுப்பதற்கும் இரு தரப்பினரும் உடன்பட்டனர்.  

வரலாற்றில் மிகவும் சிரமமானதொரு காலத்தைக் கடந்து கொண்டிருக்கும் இலங்கை முஸ்லிம் சமூகத்தினால், அதிகளவிலான குழறுபடிகள் காணப்படுகின்றதொரு தலைமைத்துவத்தை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவில் வைத்து கொண்டிருப்பது சாத்தியமில்லை.  

ஜம்இய்யதுல் உலமா மீது கோபமும், மரியாதை இன்மையும் முஸ்லிம் சமூகத்தில் வேகமாகப் பரவி, அது தனது மதிப்பை இழந்து கொண்டிருக்கும் தற்போதைய நிலையை தொடர்வதற்கு அனுமதிக்க முடியாது.   

சமூகத்தின் அவசியப்பாடுகளுக்கு ஏற்ப ஜம்இய்யதுல் உலமாவின் ஓட்டை, உடைசல்களை சரி செய்வதென்பது காலத்தின் தேவையாகும்.    

தனிமனித ஆதிக்கம் இல்லாத, வார்த்தையிலும், செயல்பாடுகளிலும் தக்வா பிரதிபலிக்கின்ற, சமூகத்தின் நலன்களை மனதில் நிறுத்திய, சமூகத்தின் மரியாதையும், நம்பிக்கையும் காணப்படுகின்ற நீதியானதும், சுதந்திரமானதுமான தேர்தல் ஒன்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜம்இய்யதுல் உலமா ஒன்றே இன்றைய காலத்தின் தேவையாகும்.   

எந்தவிதமான குற்றச்சாட்டுக்களும் இல்லாத, அரசியலில் ஈடுபடாத, அரசியல் வாதிகளின் பின்னால் செல்லாத, முஸ்லிம் சமூகத்தின் சமய உரிமைகளுக்காகப் பயமின்றி வாதாடுகின்ற, ஏழைகளையும், பணக்காரர்களையும் ஒரே மாதிரியாக மதிக்கின்ற, 'நிழல்' வியாபாரிகளுடன் தொடர்புகளை வைத்துக் கொள்ளாத, உலகம் சுற்றாமல் நாட்டில் சமூகத்தோடு இருந்து, சமூகத்தின் காதுகளாகவும், கண்களாகவும் செயற்படுகின்ற தலைமைகளே இன்றைய காலத்தின் தேவையாகும்.


Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger