இராணுவத்தில் மேலும் “45 தமிழ் பெண்கள்” வன்னித் தலைமையகத்தில்………..



இலங்கை இராணுவத்தில் மேலும் 45 தமிழ் பெண்கள் இணைந்துகொண்டனர். வவுனியாவில் அமைந்துள்ள வன்னி இராணுவ கட்டளைத் தலைமையகத்தில் நேற்று திங்கட்கிழமை இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இலங்கை இராணுவத்தில் புதிதாக உருவாக்கப்படவுள்ள படைப்பிரிவில் இணைப்பதற்காகவே இவர்கள் தெரிவாகியுள்ளனர். அண்மையில் நாடு பூராகவும் இடம்பெற்ற நேர்முகத் தேர்வுகளில் தோற்றிய தமிழ் பெண்களில் 45 பேர் தெரிவு செய்யப்பட்ட நிலையிலேயே இவர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.
வடக்கு மற்றும் மலையகத்தை சேர்ந்த தமிழ் யுவதிகளுடன் 10 சிங்கள யுவதிகளும் இன்றைய தினத்தில் இராணுவத்தில் இணைந்திருந்தனர். இவர்களை இராணுவத்தில் இணைத்துக்கொள்வதற்காக வன்னி தலைமையகத்தில் சிறப்பு நிகழ்வொன்று இன்று இடம்பெற்றது.
இந்நிகழ்வில் தமது பிள்ளைகளை இராணுவத்தில் இணைத்த பெற்றோர், கௌரவிக்கப்பட்டதுடன் அவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் இலங்கை இராணுவத்தின் பொறியியல் படைப்பிரிவின் தளபதியும் இராணுவ செயலாளருமான மேஜர் ஜெனரல் கிரிசாந்த சில்வா, வன்னி படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா, இராணுவ பொலிஸ் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் விஜயசிறி உட்பட இராணுவ அதிகாரிகள், இராணுவத்தில் இணைந்து கொண்டோரின் பெற்றோர் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

jvpnews_armetamil

இராணுவத்தில் இணையும் தமிழ் பெண்கள் (BBC)
”இலங்கையை முப்பது வருடங்களாக சீரழித்து வந்த யுத்தம் காரணமாக தமிழ் சிங்கள மக்களிடையே ஏற்பட்டிருந்த பிளவுக்கு, யுத்தம் முடிவடைந்ததனால் முடிவேற்பட்டுள்ளது. சமாதானமும் நல்லிணக்கமும் உருவாகியுள்ளது. நாட்டின் தேசிய பாதுகாப்பும் இராணுவமும் பலப்படுத்தப்பட்டிருப்பதனால், இன்னும் 100 வருடங்களுக்கு இந்த நாட்டில் அத்தகைய ஒரு நிலைமையும் யுத்தமும் ஏற்படமாட்டாது” என்று வன்னி ஆயுதப்படைகளின் கட்டளைத் தளபதியும் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கான அதிகாரியுமாகிய மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா தெரிவித்துள்ளார்.
இரண்டாவது தொகுதியாக 45 தமிழ் யுவதிகளை இராணுவத்திற்கு சேர்க்கும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த வைபவம் வன்னி ஆயுதப்படைகளின் தலைமையகத்தில் திங்களன்று நடைபெற்றது.
வடக்கு கிழக்கு மற்றும் மலையகம் உட்பட்ட பிரதேசங்களைச் சேர்ந்த தமிழ் யுவதிகள் இந்த நிகழ்வில் பெற்றோருடன் வருகை தந்து, இராணுவத்தில் இணைந்து கொண்டனர்.
இராணுவத்தில் இப்போது இணைந்துள்ள தமிழ் இளம்பெண்கள் நாட்டின் தெற்கிற்கும், வடக்கிற்கும் இடையில் ஓர் உறவுப்பாலமாக இருந்து இரண்டு இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தையும் நல்லுறவையும் ஏற்படுவதற்குப் பெரிதும் துணை புரிவார்கள் என்றும் மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா நம்பிக்கை வெளியிட்டார்.
கிளிநொச்சி, வவுனியா, மன்னார், உடபுசல்லாவ, பண்டாரவளை ஆகிய இடங்களைச் சேர்ந்த தமிழ் இளம் பெண்கள் இந்த வைபத்தில் இராணுவத்தில் இணைந்து கொண்டார்கள். அவர்களுடைய பெற்றோரும் குடும்ப உறவினரும் வைபவரீதியாக அவர்களை இராணுவத்தினரிடம் ஒப்படைத்தார்கள்.
”அரசாங்கத்தில் ஒரு உத்தியோகம் பெறவேண்டும் என்ற விருப்பம் கொண்டிருந்தோம். எங்களுடைய விருப்பத்தை நிறைவேற்றத் தக்க வகையில், நல்ல சம்பளம் மற்றும் வசதிகளுடன் கிடைத்ததனால், இராணுவத்தில் இணைந்து கொண்டோம் என” இராணுவத்தில் இணைந்துள்ள பெண்களில் பலரும் தெரிவித்தனர்.
அத்துடன் 15 சிங்கள யுவதிகளும் இந்த வைபவத்தில் இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை இராணுவ மகளிர் படைப்பிரிவில் முதல் தொகுதியாக, வன்னிப்பிரதேசத்தைச் சேர்ந்த 95 தமிழ்ப் பெண்கள் கிளிநொச்சி மாவட்ட ஆயுதப்டைகளின் கட்டளைத் தலைமையகத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டதையடுத்து, இரண்டாவது தொகுதியாக 45 தமிழ்ப் பெண்கள் வவுனியாவில் இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளனர்.
சிங்களப் பெண்களும் இந்த வைபவத்தில் இராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளதையடுத்து, முதன் முறையாக தமிழ் சிங்களப் பெண்கள் வவுனியாவில் இராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டிருப்பதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger