யாழ். மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரத்துக்குள் மட்டும் 17 தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அம் முறைப்பாடுகள் தொடர்பாக உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளோம் என வட மாகாண பிரதித் தேர்தல் ஆனையாளரும் யாழ். மாவட்ட உதவித் தெரிவத்தாட்சி அலுவலருமான சி.அச்சுதன் தெரிவித்தார்.
தேர்தல் வன்முறைகள் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவ் விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த இரண்டு வாரங்களுக்குள் மட்டும் 17 தேர்தல் வன்முறைகள் தொடர்பிலான முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சோசலிஸ சமத்துவக் கட்சியினால் மூன்று முறைப்பாடுகளும் சாவகச்சேரி நகர சபையினால் தேர்தல் துண்டுப் பிரசுரம் ஒட்டுவதாக ஒரு முறைப்பாடும் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் செயற்பாட்டினால் மூன்று முறைப்பாடுகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் மூன்று முறைப்பாடுகளும் மக்கள் விடுதலை முன்னணியினால் ஒரு முறைப்பாடும் தனிப்பட்ட நபர்களினால் மூன்று முறைப்பாடுகளும் கிழக்கு பிரதேச சபையினால் ஒரு முறைப்பாடும் வலி கிழக்கு பிரதேச சபையினால் ஒரு முறைப்பாடும் வேட்பாளர் ஒருவரின் தொலைபேசியூடாக ஒரு முறைப்பாடும் யாழ் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இம் முறைப்பாடுகள் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளும்படி பொலிஸாருக்கு தகவல்கள் வழங்கியுள்ளோம். அம்முறைப்பாடுகள் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனத் தெரிவித்தார்.
Post a Comment