புத்தகயாவில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமிராவில் பதிவான தொடர் குண்டுவெடிப்பு குறித்த தத்ரூபமான காட்சிகளை போலீசார் வெளியிட்டுள்ளனர்.
பீகார் மாநிலம் புத்தகயாவில் புத்த மதத்தினரின் புனித தலமான மகாபோதி கோயிலில் நேற்று அதிகாலை அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதனையடுத்து குண்டுவெடிப்பு தொடர்பான வீடியோ பதிவுகளை போலீசார் வெளியிட்டுள்ளனர். கண்காணிப்பு கேமிராவில் பதிவான அந்த காட்சிகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே புத்தகயாவில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட அந்த நபரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குண்டுவெடிப்பில் இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பு சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.
அதே சமயம் இந்த குண்டுவெடிப்பிற்கு மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் கூட காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதனிடையே 5 உறுப்பினர்களை கொண்ட தேசிய புலனாய்வு பிரிவு புத்தகயா வந்துள்ளது.
அந்தக் குழு விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. பீகாரில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதை இந்த குண்டுவெடிப்பு சம்பவங்கள் எடுத்துக்காட்டுவதாக பாரதிய ஜனதா கட்சி குற்றம்சாட்டியுள்ளது. புத்தகயா குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து நாடு முழுவதும் உள்ள சுற்றுலா தளங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் குண்டுவெடிப்பு சம்பவத்தை கண்டித்து பீகாரில் சில இடங்களில் முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது.
Post a Comment