பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவும், முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவும் இணைந்தே பிரபல ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவை படுகொலை செய்ததாக ஜே.வி.பி. அதிரடிக் குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளது.
சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டு நான்கு வருடங்கள் கடந்து விட்ட நிலையில் இதுவரை அவரது கொலை தொடர்பில் போதுமான சாட்சியங்கள் இன்றி, கொலையாளிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் அவரது கொலை தொடர்பில் அரசாங்கத்தின் அதிகாரமிக்க அமைச்சு ஒன்றில் ( பாதுகாப்பு அமைச்சு) இருக்கும் ஒருவருக்கும் இக்கொலை தொடர்பில் தொடர்பிருப்பதாக ஜே.வி.பி. பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது.
ஜே.வி.பியின் தொழிற்சங்கத் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான லால்காந்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் வருடாந்த சம்மேளனத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இத்தகவலை வெளியிட்டுள்ளார்.
லசந்தவைப் படுகொலை செய்த கொலையாளிகள் யார் என்பது அரசாங்கத்துக்குத் தெரியும். ஒருவர் அரசாங்கத்தின் அதிகாரமிக்க அமைச்சில் (பாதுகாப்பு அமைச்சு) இருக்கின்றார். மற்றவர் தற்போது கட்சியொன்றின் தலைவராக (ஜனநாயக தேசிய முன்னணி) இருக்கின்றார்.
இவர்கள் இருவரும் இணைந்தே லசந்தவைப் படுகொலை செய்தார்கள். தற்போது அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் எதிரியாக மாறிவிட்டாலும், இந்தக் கொலை தொடர்பான தகவல்களை வெளியிட மாட்டார்கள்.
ஏனெனில் ஒருவரைப் பற்றிய தகவல் வெளியானாலும் அடுத்தவரும் மாட்டிக் கொள்ள நேரிடும் என்பதால் அவர்கள் இந்த விடயத்தில் ஒருமித்த கருத்துடன் இரகசியத்தை மறைத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்றும் லால்காந்த தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
லசந்த விக்கிரமதுங்க கொலை தொடர்பில் இதுவரை காலமும் கோட்டாபய மற்றும் சரத் பொன்சேகா மீது குற்றம் சாட்டப்பட்டு வந்தபோதும், இதுபோன்று யாரும் நேரடியாக குற்றம் சாட்டியதில்லை. இந்நிலையில் ஜே.வி.பி. முன்வைத்துள்ள இந்தக் குற்றச்சாட்டு பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
Post a Comment