முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிவதை யாரும் தடுக்க முடியாது-அம்பிட்டிய சுமணரத்தின தேரோ


நேர்காணல்:எம்.எஸ்.எம்.நூர்தீன்,  (ஊடகவியலாளர்) காத்தான்குடி
முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிவதை யாரும் தடுக்க முடியாது என மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்தினதேரோ தெரிவித்தார்.
அவருடன் இடம் பெற்ற நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
கேள்வி :பொது பல சேனாவைப் பற்றி என்ன கூறவிரும்பகின்றீர்கள்?
பதில்:பொதுபல சேனா அமைப்பு அரசியல் நிகழ்ச்சி நிரலில் செயற்பட்டு வரும் ஒரு அமைப்பு அரசியல் இலாபம் கருதியே செயற்படுகின்றது. அரசியலுக்காக இந்த அமைப்பு இனவாதத்தை தூண்டும் முயற்சியில் ஈடுபடுகின்றது.
கேள்வி:நீங்கள் காத்தான்குடியிலும் ஒரு பௌத்த புத்தர் சிலை ஒன்றை வைப்பதற்கு முயற்சிகள் எடுப்பதாக கூறப்படுகின்றதே அது உண்மையா?
பதில்:நான் ஏன் காத்தான்குடியில் புத்தர் சிலை வைக்க வேண்டும். அங்கு புத்தர் சிலை வைப்பதற்கு என்ன தேவை இருக்கின்றது. காத்தான்குடியிலோ அல்லது மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள முஸ்லிம் பிரதேசங்களிலோ நான் எந்த வொரு புத்தர் சிலையையும் வைக்க மாட்டேன். முஸ்லிம்கள் வீணாக இதை அலசத்தேவையில்லை.
அங்கு பௌத்தர்கள் எவருமில்லை நான் ஏன் புத்தர் சிலையை கொண்டு போய் அங்கு வைக்க வேண்;டும்.
கேள்வி:அப்படியானால் மட்டக்களப்பு பிள்ளையாரடியிலும் பௌத்தர்கள் எவரும் இல்லையே அங்கு ஏன் நீங்கள் புத்தர் சிலையை வைக்க வேண்டும்.
பதில்:நீங்கள் கேட்பது போன்று பி;ளளையாரடியில் பௌத்தர்கள் இல்லை தான் ஆனால் எனது மட்டக்களப்பு மங்களராமய விகாரைக்கு வரும் வழியை அடையாளப்படுத்தி காட்டுவதற்காகவே அங்கு ஒரு புத்தர் சிலையை நிர்மானிப்பதற்கும் மட்டக்களப்பு நகரிலுள்ள மங்களராமய விகாரைக்கான வழியை அடையாளப்படுத்தும் விளம்பர பலகையை போடுவதற்கு அனுமதி கோரியுள்ளேன். இதற்காக பாதுகாப்பு அமைச்சு மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை மட்டக்களப்பு மாநகர சபை, மண்முனை வடக்கு பிரதேச செயலகம் ஆகியவற்றிற்கு அனுமதி கேட்ட கடிதங்களை அனுப்பி வைத்துள்ளேன்.
கேள்வி :முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணியக் கூடாது என பொதுபல சேனா அமைப்பை சேர்ந்தவர்கள் கூறுகின்றார்கள் நீங்கள் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிவதை எப்படி பார்க்கிறீர்கள்?
பதில்:முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிவதை யாரும் தடுக்க முடியாது. இந்த நாடு பௌத்த நாடாக இருந்தாலும் அனைத்து சமயங்களுக்கும் சமூகங்களுக்கும் தமது மதங்களை பின்பற்றுவதற்கான சுதந்திர முண்டு. அந்த வகையில் முஸ்லிம் பெண்கள் அவர்களின் கலாசாரத்திற்கு ஏற்ப ஹிஜாப் உடையை அணிகின்றனர். இதை யாரும் தடுக்க முடியாது.
எனது இந்த உடை எனது மதம் சார்ந்த உடை எனது உடையை யாரும் கழற்ற முடியுமா? அல்லது நான் அணியும் இந்த உடையை தடுக்க முடியுமா? இல்லை அதே போன்றுதான் முஸ்லிம்களும் அவர்களுக்கு அவர்களின் மார்க்க கலாசாரத்திற்கு ஏற்ற வகையில் உடை அணிகின்றார்கள் அதை யாரும் தடுக்கவோ கழற்றவோ முடியாது. யாருடைய மத கலாசார உடை அணிவதையும் தடுக்க முடியாது.
கேள்வி:ஹலால் விவகாரத்தை நீங்கள் எப்படி பார்க்கின்றீர்கள்?
பதில்:ஹலால் விவகாரத்தை பொதுபல சேனாவை வைத்து தூண்டியது நாட்டில் விலைவாசி உட்பட பல பிரச்சினைகளை மூடி மறைப்பதற்காகத்தான்
கேள்வி:மட்டக்களப்பிலுள்ள மங்களராமய விகாரையில் 15 வருடங்களாக விகாராதிபதியாக இருக்கின்றீர்கள்  மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள முஸ்லிம்களுடன் உங்களுக்கு உறவு எவ்வாறு உள்ளது?
பதில்:மட்டக்களப்பு நகர் மற்றும் காத்தான்குடி ஏறாவூர் ஓட்டமாவடி வாழைச்சேனை போன்ற பிரதேசங்களிலுள்ள முஸ்லிம்களுக்கும் எனக்கு நன்கு உறவு இருக்கின்றது.
குறிப்பாக பிலால் ஹாஜியார் எனது தந்தை போன்றும் ஆஸிக் ரேடர்ஸ் எனது தாயையும் போன்று என நான் நினைக்கின்றேன். அவர்களிருவரும் எனக்கு அடிக்கடி உதவுபவர்கள். அவர்களுடன் மிகவும் இறுக்கமான உறவு இருக்கின்றது.
இங்குள்ள முஸ்லிம் பிரமுகர்களுக்கும் எனக்கும் நல்ல நெருக்கமான தொடர்பும் ஒரு இணைப்பும் உள்ளது.
கேள்வி:நீங்கள் மட்டக்களப்பு பிள்ளையாரடியில் புத்தர் சிலையை வைப்பதற்கு நடவடிக்கை எடுத்ததன் மூலம் உங்களை ஒரு இனவாதியாக மக்கள் பார்க்கின்றார்கள் இது பற்றி என்ன கூறவிரும்புகிறீர்கள்.
பதில்:நான் ஒரு இனவாதியில்லை. இங்கு இனங்களுக்கிடையில் ஐக்கியத்தையும் சமாதானத்தையும் சௌஜன்னியத்தையும் ஏற்படுத்த நான் பாடுபட்டிருக்கின்றேன்.
நான் ஒரு பௌத்த மத குரு அந்த வகையில் எனது பௌத்தத்தின் புனிதத்தையும் அதன் அபிவிருத்தியையும் மேற் கொள்ள நான் நடடிக்கை எடுக்கின்றேன். என்னை காட்டி இங்கு சிலர் அரசியல் செய்கின்றனர்.
பசித்த மக்களுக்கு உணவு கொடுத்து அவர்களை ஆதரித்து வறுமையான மக்களுக்கு உதவும் வேலைகளையும் நான் செய்து வருகின்றேன்.அது எந்த சமூகமாக இருந்தாலும் அவர்களுக்கு நான் உதவுகின்றேன்.
கேள்வி:முஸ்லிம்களுடைய வணக்க வழிபாடுகளைப் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?
பதில்:இதற்கு நான் நல்ல உதாரனம் ஒன்று உங்களுக்கு கூறுகின்றேன். அதாவது நான் எனது விகாரையில் மக்களுக்கு போதனை செய்யும் போது முஸ்லிம்களின் வணக்க வழிபாடுகளைத்தான் கூறுவேன்.
முஸ்லிம்கள் ஐந்து நேரம் பள்ளிவாயலுக்கு சென்று  தொழுகின்றனர். போதனைகளை கேட்கின்றனர்.
அதே போன்று பௌத்தர்களும் அடிக்கடி விகாரைக்கு வரவேண்டும் போதனைகளை கேட்க வேண்டும் என முஸ்லிம்களைத்தான் நான் உதாரணமாக கூறுவது உண்டு.
கேள்வி:மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழ் முஸ்லிம் அரசியல் வாதிகளை பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?
பதில்:இங்குள்ள தமிழ் முஸ்லிம் அரசியல் வாதிகள் என்னுடன் பழகுவார்கள் சில முஸ்லிம் அரசியல் வாதிகள் இந்த எனது விகாரைக்கு உதவியுமுள்ளார்கள்.
கேள்வி:இறுதியாக என்ன கூறவிரும்புகின்றீர்கள்?
பதில்:இந்த நாடு அனைவருக்கும் சொந்தமானது இங்கு இன மத பேதமின்றி அனைவரும் ஒற்றுமையுடனும் ஐக்கியத்துடனும் வாழவேண்டும்  அதற்காக அனைவரும் ஒன்று பட்டு உழைக்க வேண்டும்.
வறுமையிலிருக்கம் மக்களின் வயிற்றுப் பசியை போக்க வேண்டும் அவர்களுக்காக உதவ வேண்டும் சாதி மதம் இனம் பார்த்து சேவை செய்யக் கூடாது அனைவரும் மக்கள் என்ற என்னத்துடன் சேவைகளை செய்ய வேண்டும்.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger